செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 23 மார்ச் 2015 (10:21 IST)

கோச்சடையானை இருவருக்கு விற்பனை செய்த விவகாரம் - நடந்தது என்ன?

கோச்சடையான் படத்தை இருவருக்கு விற்ற விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார் தரப்பட்டிருக்கிறது. ஒரு படத்தை எப்படி இருவருக்கு விற்றார்கள்? இதில் லதா ரஜினிகாந்தின் பங்கு என்ன?
 
லிங்கா பிரச்சனையிலிருந்து ஒருவழியாக ரஜினி இப்போதுதான் விடுதலையாகியிருக்கிறார். அதற்குள் கோச்சடையான் அவர் காலை சுற்றியிருக்கிறது. இந்த விவகாரத்திலும் உருட்டப்படுவது அவரது தலைதான்.
கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு உடன்பாடில்லை. படம் தனது இமேஜை டேமேஜ் செய்யும் என்று நம்பியதால், கான் திரைப்பட விழாவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் சௌந்தர்யாவின் முடிவுக்கு ரஜினி ஒப்புதல் தரவில்லை. ஆனால், அதற்குள் படம் 100 கோடிகளை ஏப்பம் விட்டிருந்தது. நாம் இறங்கி வேலை செய்தால் மட்டுமே ஓரளவு வசூலை பார்க்க முடியும் என்று ரஜினி உணர்ந்ததால், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மும்பைக்கு சென்று இந்தி ட்ரெய்லரை வெளியிட்டார். இவையெல்லாம் ரஜினி ஒருபோதும் செய்யாதவை. 
 
கோச்சடையான் விழாவில் பேசிய ரஜினி, சௌந்தர்யா படம் இயக்கி சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. நான் சம்பாதித்ததே அவருக்கு போதுமானது. படம் இயக்குவதை விட்டு ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் மகிழ்ச்சியடைவேன் என்று வெளிப்படையாகவே கூறினார். 
 
கோச்சடையானை தயாரித்தது மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். அவர்களால் படத்துக்கு பணம் செலவு செய்ய முடியாத போது உதவிக்கு ஈராஸ் உள்ளே நுழைந்தது. படத்தை அவர்களுக்கே தந்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.
 
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் ஈராஸ் உள்ளே வரும்முன்பே பலரிடம் கடன் வாங்கியது. அதில் ஒரு நிறுவனம் ஆட் பீரோ. இந்த நிறுவனத்தின் தலைவர் அபிர்சந்த் கூறுவதை கேட்போம்.
 
ரஜினி நடிக்கும் படம் என்பதால் கோச்சடையானின் தயாரிப்பு செலவுக்காக மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்கு 10 கோடி கடன் தந்தோம். அதற்கு பதிலாக படத்தின் இணைத் தயாரிப்பாளராக்கி, தமிழ்நாடு திரையரங்கு உரிமம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பட வெளியீட்டின் மீது, கோச்சடையானின் அனைத்து உரிமைகளையும் ஈராஸ் நிறுவனத்துக்கு அளித்து எங்களின் ஒப்பந்தத்தை மீறினார்கள். 11 மாதங்கள் முன்பு வாங்கிய பத்து கோடி வட்டியுடன் சேர்த்து இப்போது 15 கோடி ரூபாய் ஆகிறது. அதில் அவர்கள் தந்தது போக இனி ஆறு கோடியே 84 லட்சங்கள் தரவேண்டும். பலமுறை கேட்டும் அவர்கள் தரவில்லை என்பது அபிர்சந்தின் குற்றச்சாட்டு.

இதில் லதா ரஜினிகாந்த் எங்கு வருகிறார்?
 
இந்த கடன் விவகாரத்தில் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் உத்தரவாத கையெழுத்து போட்டவர் லதா ரஜினிகாந்த். கடன் வாங்கியவர் தர மறுக்கும் போது, உத்தரவாத கையெழுத்து போட்டவரை கட்டம் கட்டுவதுதான் வழக்கம். அப்படிதான் லதா ரஜினிகாந்த் மீது புகார் தந்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் முதலில் கிளம்பிய போதே லதா ரஜினி, என்னை இந்த வழக்கில் ஈடுபத்தக் கூடாது என்று சென்னை மற்றும் பெங்களூரு நீதிமன்றங்களில் மனு செய்தார். ஆனால் அந்த இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
 
அபிர்சந்தின் குற்றச்சாட்டை முரளி மனோகரின் மீடியா ஒன் மறுக்கிறது.
 
20 கோடி பணம் தருவதாகச் சொன்ன ஆட் பீரோ 10 கோடிதான் தந்தது. மீதி பத்து கோடியை தராமல் ஏமாற்றியது. அதனால்தான் படத்தின் உரிமையை அவர்களுக்கு தரவில்லை. பத்து கோடிக்கு ஆறு மாதத்தில் ஐந்து கோடி வட்டி போட்டிருக்கிறார்கள். இது சட்டத்தை மீறிய வட்டி விகிதம் என்பதால் போலீஸில் புகார் செய்திருக்கிறேnம். ஆட் பீரோவுக்கு நாங்கள் இனி செலுத்த வேண்டியது சொற்ப தொகைதான்.  அதை சட்டரீதியாக பெறுவதை விடுத்து தேவையில்லாமல் ரஜினியையும், லதா ரஜினியையும் இந்தப் பிரச்சனையில் தொடர்புப்படுத்துகிறார்கள் என மீடியா ஒன் தரப்பு மறுக்கிறது.
 
ஆட் பீரோவின் வாதப்படி வட்டியுடன் 15 கோடிகள் தர வேண்டும். பத்து கோடிக்கு 11 மாதங்களில் 5 கோடி வட்டி. இதில் இனி மீடியா ஒன் இனி தர வேண்டியது 6.84 கோடிகள் என்கிறார்கள். அதாவது 10 கோடிகள் வாங்கிய மீடியா ஒன் அதில் 8.16 கோடிகளை திருப்பிச் செலுத்தியிருக்கிறது. ஐந்து மாத வட்டியையும் சேர்த்தால் மிகச் சொற்ப தொகையே தர வேண்டும் என்கிறார்கள்.
 
ஆட் பீரோ 11 மாதங்கள் என்கிறது. மீடியா ஒன் 5 மாதங்கள் என்கிறது. கோச்சடையான் தயாரிப்பு செலவுக்கு தந்ததாக கூறப்படுவதால் ஆட் பீரோ சொல்லும் 11 மாதங்கள் என்பதே நம்பத்தகுந்ததாக உள்ளது. 
 
ரஜினியின் படம் என்பதால்தான் நாங்கள் பத்து கோடி தந்தோம். அதனால் அதை திருப்பி செலுத்த மீடியா ஒன்னை வற்புறுத்த வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு உள்ளதாக ஆட் பீரோ கூறுகிறது. 
 
ரஜினி என்ற பெயரின் சந்தை மதிப்புக்கு அதிகமாக ஒரு படத்தை வியாபாரம் செய்தால் என்னாகும் என்பதற்கு லிங்கா உதாரணம் என்றால், அவரது சந்தை மதிப்புக்கு அதிகமாக ஒரு படத்தை தயாரித்தால் என்னாகும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது, கோச்சடையான்.