வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2015 (11:58 IST)

கேரளாவில் திரையரங்குகள் காலவரையற்ற கதவடைப்பு - உண்மை காரணம் என்ன?

கேரளாவில் திரையரங்குகள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கின. இன்றும் பெரும்பாலான திரையரங்குகள் மூடியே கிடக்கின்றன. மல்டி பிளக்ஸ்கள் மட்டுமே படங்களை திரையிடுகின்றன.
 

 

அன்வர் ரஷீத் தயாரிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் சென்சார் காப்பியிலிருந்து திருட்டு டிவிடி தயாரிக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கேரளா ஃபிலிம் எக்சிபிட்டர்ஸின் தலைவர் லிபர்டி பஷீர் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். பிரேமம் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது, திருட்டு டிவிடிகளை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

பிரேமம் படத்தின் திருட்டு டிவிடி வெளியான பிறகு திரையரங்கு வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் குமார் லிபர்டி பஷீரை குற்றம்சாட்டுகிறார். திருட்டு டிவிடியினால் வசூல் பாதிக்கப்பட்டது என்று கூறி திரையரங்குகளை மூடினால் தயாரிப்பாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.  தயாரிப்பாளர்களை பாதிக்கும் இந்த போராட்டம் தேவைதானா என அவர் குரல் எழுப்புகிறார்.

மேலே சொல்லப்படும் காரணங்களுக்குப் பின்னால் வேறு காரணங்களும் உள்ளன. பிற மொழித் திரைப்படங்களை ஏ சென்டர்கள் எனப்படும் நகர்ப்புறங்களில் மட்டுமே திரையிட வேண்டும் என்ற விதிமுறையை லிபர்டி பஷீர் தலைவராக இருக்கும் கேரளா ஃபிலிம் எக்சிபிட்டர்ஸ் நடைமுறைப்படுத்தி வருகிறது. விஸ்வரூபம் படத்தை பி, சி சென்டர்களில் திரையிட முயன்றதை பஷீர் கடுமையாக எதிர்த்தார். இது தொழில் செய்பவர்களுக்கு எதிரானது, சட்டப்படி குற்றம்.

விஸ்வரூபம் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் மறுத்தபோது, அவர்களுக்கு எதிராக காம்படிஷன் கமிட்டி ஆஃப் இண்டியாவில் கமல் புகார் செய்தார். ஒருவரை தொழில் செய்ய முடியாமல் முடக்குவது குற்றம் என்ற அடிப்படையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கமல் அந்த வழக்கை வாபஸ் பெற்ற பிறகும், நீதிமன்றம் வழக்கை தொடர்வதா கூடாதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கம்படிஷன் கமிஷனுக்கே அளித்தது.

இந்த கமிட்டி தற்போது, பிற மொழிப் படங்களை பி, சி சென்டர்களில் வெளியிடக் கூடாது என்ற தடைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகுபலி படம் எப்படியும் 200 திரையரங்குகளிலாவது வெளியாகும். அதனை தடுக்கவே சரியாக படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு போராட்டத்தை பஷீர் தொடங்கினார் என சில தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்கள் சிலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

கேரளாவில் பிற மொழிப் படம் ஒன்று அதிக வரவேற்பை பெறும் சாத்தியமிருந்தால் இதுபோன்று ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுவது பஷீரைப் போன்றவர்களின் வேலையாக இருக்கிறது. இதனால் திரைத்துறையை நம்பியிருக்கும் கேரளா விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.