1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (11:25 IST)

ஒரு வெற்றிப் படத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமாவின் தலையெழுத்து மாற்றி எழுதப்படுகிறது. இங்கு சினிமா என்பது சினிமாவில் பங்காற்றுகிறவர்கள். வெள்ளிக்கிழமைகளில் நட்சத்திரங்கள் பிறக்கிறார்கள். அதே வெள்ளிக்கிழமைகளில் சில நட்சத்திரங்கள் உதிர்கிறார்கள். வெள்ளிக்கிழமைகள் கோடீஸ்வரர்களை தோற்றுவிக்கிறது. பிச்சைக்காரர்களை உருவாக்குகிறது. சிலர் சரித்திரத்தின் பக்கத்தில் பெயர்களை பொறிக்கிறார்கள். சிலர் என்றென்றைக்குமாக மறக்கப்படுகிறார்கள்.
 

 

 
ஒருவரின் தோல்வி எப்படி பலரின் வாழ்வை அஸ்தமனமாக்குகிறதோ அதேபோல் ஒரு வெற்றி பல வாசல்களை திறக்கிறது. உதாரணமாக கொம்பன் படத்தை பார்ப்போம்.
 
தொடர் தோல்விகளால் கார்த்தி சோர்ந்திருந்த நேரத்தில் மெட்ராஸ் படத்தின் வெற்றி ஆறுதலாக அமைந்தது. என்றாலும் மெட்ராஸ் இயக்குனரின் படம். கார்த்தி அதில் வெறும் நடிகர் மட்டுமே. ஹீரோவுக்கான படம் கிடையாது. 
 
கார்த்தியின் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து தோல்வி மேல் ஸ்டுடியோ கிரீன் தோல்வி கண்டிருந்தது. பிரியாணியும், மெட்ராஸும் ஆறுதல் என்றாலும் பெரிய ஹிட் கிடையாது.
 
இயக்குனர் முத்தையாவுக்கு குட்டிபுலி சராசரி படம். வெற்றி தந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு.

இந்த நேரத்தில் கொம்பன் தடைகளை கடந்து வெளியானது. மூன்று சென்டர்களிலும் படம் ஹிட். கார்த்திதான் படத்தின் ஆகப்பெரிய பலம் என்பதால், மெட்ராஸைப் போலன்றி கொம்பன் வெற்றியின் கணிசமான சதவீதம் கார்த்தியை சென்றடைந்தது. சமீபமாக சராசரி வெற்றியை மட்டுமே ருசித்திருந்த ஸ்டுடியோ கிரீனுக்கு கொம்பன் பம்பர் ஜாக்பாட். முத்தையா பற்றி சொல்லவே வேண்டாம்.
முத்தையாவுக்கு சம்பளமாக அறுபது லட்சம் கிடைத்துள்ளது. படம் வெளியான அன்று காலையில் ஒரு இன்னோவா காரை தயாரிப்பாளர் முத்தையாவுக்கு பரிசளித்தார். உடனடியாக விஷால் கம்பெனிக்கு படம் இயக்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைத்தது. ஹீரோ, விஷால்.
 
ஸ்டுடியோ கிரீனும் இன்னொரு படத்தை இயக்கித் தரும்படி முத்தையாவை கேட்டிருக்கிறது. சம்பளம் இரண்டு கோடி. கொம்பன் வெற்றியால் முத்தையா மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கும் பெயர் கிடைத்துள்ளது. கொம்பனில் பணியாற்றியிருக்கிறேன் என்றால், எந்த கொம்பனும் அழைத்து கதை கேட்பான். 
 
இவை அனைத்துக்கும் காரணம் ஒரேயொரு வெற்றி. வியாபாரமாகிவிட்ட சினிமாவில் வெற்றி மட்டுமே பேசப்படும், வெற்றிக்கு மட்டுமே மரியாதை, வெற்றி மட்டுமே முகவரி.