வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2016 (20:46 IST)

எழுத்தாளருக்கு துரோகம் செய்த கமல்

எழுத்தாளர் ம.வே.சிவகுமார் இன்று (10-01-16) அதிகாலை மூன்று மணியளவில் மரணமடைந்தார். நல்ல சிறுகதையாசிரியர். நகைச்சுவை ததும்ப கதைகள் எழுதுகிறவர். அவரது வாழ்க்கை அத்தனை சுபிட்சமாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கவில்லை. அவரது அலைக்கழிப்பு மிகுந்த வாழ்க்கை அவரது உயிரை விரைவிலேயே எடுத்துக் கொண்டது.


 
 
ம.வே.சிவகுமாரின் நினைவை எழுத்தாளர்களும் நண்பர்களும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். பத்திரிகையாளர் (தினகரன் வெள்ளிமலரின் ஆசிரியர்) கே.என்.சிவராமனின் பதிவு முக்கியமானது. தமிழின் பாவப்பட்ட எழுத்தாளர்கள் எப்படி திரைபிரபலங்களால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை அவரது பதிவுசுட்டிக் காட்டுகிறது.
 
"கண்ணைக் கட்டியது போல் இருக்கிறது. எழுத்தாளர் ம.வே.சிவக்குமார் இன்று காலை 3 மணிக்கு காலமாகிவிட்டாராம். நண்பர் Ajayan Bala Baskaran  பதித்த நிலைத்தகவலை வாசித்ததில் இருந்து ஒருவகையான தவிப்பு சூழ்கிறது. கமல் நடிப்பில் பரதன் இயக்கிய ‘தேவர் மகன்‘ படத்துக்கு வசனம் எழுதியது தான்தான் என்றும் ஆனால், தனது பெயரை கமல் இருட்டடிப்பு செய்து விட்டார் என்றும் அவர் குமுறி அழுத காட்சிதான் கண்முன் இப்போது வருகிறது. ‘தேவர் மகன்‘ அனுபவம் குறித்து ஒரு தொடர் எழுத விரும்பினார். பல பத்திரிகைகளிலும் தொடர்பு கொண்டார். இறுதியில் வெகுஜன எழுத்தாளர்களை அரவணைப்பதற்காகவே பிறவி எடுத்திருக்கும் அண்ணன் அசோகன்தான் Asokan Pocket Novel  அதை வெளியிட்டார்.
 
சந்திக்கும்போதெல்லாம் ‘உன் கண் முன்னாடி ஒரு படத்தை இயக்கி நான் யாருன்னு காட்டறேன் பார்...‘ என கமலிடம் சவால் விட்ட தருணத்தை உணர்ச்சியுடன் நடித்துக் காட்டுவார். கூடவே படத்துக்காக, தான் எழுதியிருக்கும் கதையை காட்சிகளுடன் விவரிப்பார். தயாரிப்பாளர்களை சந்தித்தது, சந்தித்து வருவது குறித்தும் சிகரெட்டை ஊதியபடி சொல்வார்.
 
நக்கல் அதிகம். நையாண்டியும்தான். 1970களின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த பலரிடமும் இந்த குணங்களை பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்பு , நக்சல்பாரி எழுச்சி , எமர்ஜென்சி காலகட்டம் ஆகியவற்றை தங்கள் இளம் பருவத்தில் சந்தித்தவர்கள் என்பதால் ஒருவகையான அலட்சியம் அவர்களிடம் தென்படும். அதே நேரம் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள்.
சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியத்துக்கும், வெகுஜன எழுத்துக்கும் இடையில் பாலமாக திகழ்ந்தவர்களில் ம.வே.சிவக்குமாரும் ஒருவர். அபாரமான நடை. நேரில் எப்படி இருப்பாரோ அப்படித்தான் எழுத்தும்.
அவரது முக்கிய நாவலான ‘வேடந்தாங்கலை‘ 1980களில் படமாக எடுக்க பலரும் முயன்றிருக்கிறார்கள்.
 
எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் வகையில் ‘நாயகன்‘ இருக்கும். குறிப்பிடத்தகுந்த பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஆனால், கவனிக்கப்படாமல் அல்லது புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்களில் அவரும் ஒருவராக இருந்ததற்கு தமிழ் சூழல் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறதோ தெரியவில்லை."
 
ம.வே.சிவகுமார் மட்டுமில்லை. எண்ணற்ற எழுத்தாளர்கள் ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களின் பெயர் வெளியில் தெரிவதில்லை. அதன் காரணமாகவே அவர்களுக்குரிய சம்பளம் முதலானவையும் தரப்படுவதில்லை. ஏமாற்றுதல் திரைத்துறையில் உள்ளவர்களின் நிரந்தர ஆயுதமாக உள்ளது.
 
எழுத்தாளரும், விமர்சகரும், திரைப்பட ஆர்வலருமான விஸ்வாமித்ரன் கோயம்பேடு பின்னணியில் ஒரு திரைக்கதை எழுதியிருந்தார். விஜய் மில்டன் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்தக்கதை உருவாக்கப்பட்டது. கதையை கேட்ட விஜய் மில்டன், இப்போதைக்கு படம் செய்யப் போவதில்லை என்றவர், சிறிது காலம் கழித்து, விஸ்வாமித்ரனை கேட்காமலே அறிவித்த படம், கோலிசோடா. தனது உழைப்பு இன்னொருவரது பெயரில் பாராட்டுகள் பெறுவதை காணச்சகியாமல் விஸ்வாமித்ரன் நோயில் விழுந்த கதையை உலக சினிமா ரசிகன் என்கிற பெயரில் எழுதும் திரு.பாஸ்கரன் அவர்கள் விரிவாக பகிர்ந்துள்ளார்.
 
எழுத்தாளர்களின் ஆயுட்கால கனவுகளை திருடுவதும், அதற்கான குற்றவுணர்வு சிறிதும் இன்றி அடுத்தவரது திறமைக்கு கைத்தட்டல் பெறுவதுமாக சுயநலத்தில் மூழ்கிக் கிடக்கிறது தமிழ் திரைத்துறை. அதன் வன்முறையின் சாட்சியமாகியிருக்கிறார் ம.வே.சிவகுமார். 
 
அவரது ஆன்மா சாந்தியடைவதாக.