வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2015 (17:02 IST)

ஜேம்ஸ் வான் - ஹாலிவுட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்

ஃபியூரியஸ் 7 திரைப்படம் கடந்த ஞாயிறுவரை உலகமெங்கும் 800 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ரூபாயில் ஏறக்குறைய 4,800 கோடிகள். ஏற்கனவே ஆறு பாகங்கள் வெளிவந்த ஒரு ஆக்ஷன் திரைப்படம் அதன் ஏழாவது பாகத்தில் இப்படியொரு இமாலய வசூலை பெறுவது, உலக அதிசயம். இந்த ஆச்சரியத்துக்குப் பின்னால் அடக்கமாக இருப்பவர், ஜேம்ஸ் வான், ஃபியூரியஸ் 7 படத்தின் இயக்குனர்.
 
ஜேம்ஸ் வான் என்ற பெயரை கேட்டதும் தாட்டியான ஒரு அமெரிக்க முகம் நினைவு வரும். தவறு. ஜேம்ஸ் வானுக்கு இந்த ஃபிப்ரவரியில்தான் 38 வயது பூர்த்தியானது. உன்னைப்போல் ஒருவனில் வரும் விடலை கம்ப்யூட்டர் இளைஞனைப் போல் தோற்றம். ஆனால் மண்டைக்குள் இருப்பது மொத்தமும் சினிமா... சினிமா...


 

 
ஜேம்ஸ் வானின் ரிஷி மூலம் சுவாரஸியமானது. மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் வளர்ந்தது, ஆஸ்ட்ரேலியாவில் உள்ள பெர்த்தில். படித்தது, ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பேச்சிலர் ஆஃப் ஆர்ட்ஸ். இப்போது கலக்கிக் கொண்டிருப்பது அமெரிக்காவில். ரசிகர்கள் உலகமெங்கும்.
 
பதினோரு வயதிலேயே, நம்முடைய லட்சியம் சினிமா என்பதை கண்டறிந்தார் ஜேம்ஸ் வான். 23 -வது வயதில் Shannon Young  என்பவருடன் இணைந்து Stygian  என்ற படத்தை எழுதி இயக்கினார். மெல்போர்ன் அண்டர் கிரவுண்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் அப்படம், பெஸ்ட் கொரில்லா ஃபிலிம் விருதை வென்றது.
 
முதல் படத்துக்கப் பிறகு, தனது இந்நாள் தொழில் பார்ட்னர் Leigh Whannell  -ஐ வான் சந்தித்தார். அவர் எழுத, ஸா (Saw) குறும் படம் தயாரானது. அதனை படமாக்கும் முயற்சியாக தயாரிப்பாளர்களிடம் குறும்படத்தை அனுப்பி வைத்தனர். டிவிடியில் வெளியிடலாம் என்ற திட்டத்தோடு, ஸா திரைப்படம் தயாரிக்கப்பட்டது. திரைப்படத்துக்கான திரைக்கதையை Leigh Whannell -ன் இணைந்து வான் எழுதினார். இயக்கம் வான் மட்டும்.
 
1.2 மில்லியன் டாலர்களில் தயாரான ஸா, அவர்கள் எதிர்பார்ப்பையெல்லாம் நொறுக்கி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. இன்றுவரை..
மேலும் அடுத்தப்பக்கம்...

உலகின் தலைசிறந்த ஹாரர் படங்களில் ஒன்றாக ஸா திகழ்கிறது. அதன் பிறகு ஸா 2, 3 என்று ஆறு பாகங்கள் எடுக்கப்பட்டது. கடைசியாக ஸா 3டி. இந்தப் படங்களை ஜேம்ஸ் வான் இயக்கவில்லை. எக்ஸிக்யூடிவ் புரொடியூசராக மட்டும் செயல்பட்டார்.


 

 
வானுக்கு இஷ்டமான ஏரியா ஹாரர். அவர் இயக்கிய டெத் சைலன்ஸ், இன்சிடியஸ், இன்சிடியஸ் சேப்டர் 2, 2013 -இல் வெளியாகி டாலர்களை அள்ளிய, த கான்ஜுரிங் என அனைத்துமே ஹாரர் படங்கள். நடுவில் டெத் சென்டன்ஸ் என்று ஒரேயொரு ஆக்ஷன் த்ரில்லர்.
 
த கான்ஜுரிங் மாதிரியான ஒரு ஹாரர் படத்தை எடுத்தவர் எப்படி பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸை இயக்குவார் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு கலந்த சந்தேகம். பாஸ்ட் அண்ட் பியூரிஸில் நொடிக்கு நொடி ஆக்ஷன் பொறி பறக்க வேண்டும். ஜேம்ஸ் வானால் அது சாத்தியமா? 
 
படத்தின் ட்ரெய்லரில் தன் மீதிருந்த சந்தேகத்தை ஊதித் தள்ளினார் வான். தமிழகத்திலும் ஃபியூரியஸ் 7 படத்தின் ட்ரெய்லர் அமோகமாக பேசப்பட்டது, பார்க்கப்பட்டது. இந்தியாவில் அவதார் வைத்திருந்த கலெக்ஷன் சாதனையை வானின் படம் நொறுக்கியிருக்கிறது. 100 கோடிகளைத் தாண்டிய முதல் ஹாலிவுட் படம் இதுதான் என்கிறார்கள். உலகம் முழுவதும் படம் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்து ஹாலிவுட்டின் திறந்த வாய் மூடவில்லை. 
 
நாடி நரம்பு மூளை முதுகெலும்பு என சகலத்திலும் கமர்ஷியல் ஓடினால் மட்டுமே இப்படியொரு படத்தை எடுக்க முடியும். வான், சினிமா மோகத்தில் அலையும் இளைஞர்களின் புதிய ரோல் மாடல். சினிமாவை சுவாசித்து, சினிமாவை உண்டு, சினிமாவை பேசி, சினிமாவை சிந்துத்து, சினிமாவில் உறங்கி, சினிமாவாக வாழ்ந்தால்/ வேறென்ன... நீங்களும் வான் தான்.