வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2014 (10:18 IST)

இசை பாடல்கள் வெளியீட்டு விழா - விஜய், தனுஷ், சத்யராஜ் பேச்சின் முழு விவரம்

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருக்கும் படம் இசை. இதில் கூடுதலாக இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். வாலி, குஷியில் அவர் விதைத்த நம்பிக்கை இன்னும் கருகாமல் இருப்பதை பாடல்கள் வெளியீட்டு விழாவில் கண்கூடாக பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.
 
இசை பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
 
எனக்கு குஷிக்கு முன் வாழ்வா சாவா என்ற நிலை இருந்தது. எந்தப் படமும் ஓடவில்லை. இதுவும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரம் குஷி என்ற வெற்றிப் படத்தை தந்து என்னை தூக்கிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதற்கு இப்போது நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
 
குஷி வெளியான பிறகு விக்ரமன் சார், குஷியில் எப்படி நடிக்க ஒத்துகிட்டீங்க. அதில் கதையே இல்லையே என்றார். நான் அவரிடம், அது சரிதான், ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருவர் இருக்கிறாரே என்றேன்.
 
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக வாலி, குஷி படங்களில் வேலை பார்த்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் பேசுகையில்,
 
கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யாவின் திறமை அபாரமானது. அவர் எப்படி ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பார் என்பதை மனதில் வைத்தே நான் என்னுடைய படங்களில் கதாபாத்திரங்களை அமைப்பேன். அவரது இசை ஆர்வம் அளவிட முடியாதது. அவரைப் பற்றி சீரியல் அளவுக்கு பேச முடியும். 17 வருட நட்பு எங்களுடையது என்றார்.
 
Sathyaraj
இசையில் சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். 20 வருடங்களுக்குப் பிறகு அவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார். சிவாஜியில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும்படி ஷங்கர் கேட்டபோது தட்டிக் கழித்த சத்யராஜ் இசையில் நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி? விழாவில் அதனை அவரே பகிர்ந்து கொண்டார்.
 
நான் இரண்டு படங்களில் நடிக்க மறுத்திருக்கிறேன். ஒன்று அமைதிப்படை இன்னொன்று இசை. கதை கேட்டதும் என்னுடைய இந்த இரண்டு முடிவுகளும் உடனே மாறின. 
 
75 படங்கள் வில்லனாக நடித்து பல அசௌகரியங்களை அனுபவித்து ஒருவழியாக கதாநாயகன் ஆனபிறகு அமைதிப்படையில் வில்லனாக நடிக்க மணிவண்ணன் அழைத்தார். மறுத்தேன். அவர் கதையையும், கேரக்டரையும் சொன்ன பிறகு நடிக்க ஒப்புக் கொண்டேன்.
 
இசையிலும் வில்லன் என்றதும் தட்டிக் கழித்தேன். கதையையும், என்னுடைய கேரக்டரையும் சூர்யா சொன்னதும் என்னுடைய முடிவு மாறியது. எவ்வளவோ படங்களைப் பார்த்து மனசாட்சியே இல்லாமல் சூப்பர் என்று சொன்னது உண்டு. ஆனால் இந்தப் படம் நல்ல படமாக வந்திருக்கிறது என்றார்.
 
எஸ்.ஜே.சூர்யாவுக்கும் தனுஷுக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஆனால் விழாவுக்கு அழைத்ததும் உடனே சம்மதித்து, விழாவிலும் கலந்து கொண்டு பேசினார்.
 
நான் பிளஸ் ஒன் படிக்கும் போது ரோகினியில் குஷி பார்த்தேன். இப்போது அதே சூர்யா, விஜய் இருவருடன் நான் அமர்ந்திருப்பதில் பெருமையடைகிறேன். சூர்யா பேசுவதே பாடுவது போல இருக்கும். அவர் இசையமைத்ததில் எனக்கு ஆச்சரியமில்லை. அவர் படப்பாடல்களை கேட்டால் அவர் அவற்றை கேட்டு வாங்கியது தெரியும் என்றார்.
 
எஸ்.ஜே.சூர்யாவின் இசை இரு இசையமைப்பாளர்களைப் பற்றியது. வளர்ந்து வரும் புதிய இளம் இசையமைப்பாளரைப் பார்த்து அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் பொறாமை கொள்கிறார். அதுதான் படத்தின் அடிப்படை லைன். எஸ்.ஜே.சூர்யா இளம் இசையமைப்பாளராகவும், சத்யராஜ் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளராகவும் நடித்துள்ளனர். சாவித்திரி என்ற புதுமுகம் நாயகி.
 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.