வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (11:20 IST)

கடந்தவார படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை

இந்த வருடம் முழுக்கவே ஆங்கில, இந்திப் படங்களே சென்னை பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சுகின்றன. தமிழ்ப் படங்களின் தரம் மேம்படாதவரை இது தொடரும் என தெரிகிறது.

 
கடந்த வாரத்திலும் நிலைமையில் மாற்றமில்லை.
 
ஏ.ஆர்.முருகதாஸின் இந்திப் படம் அகிரா, சென்ற வார இறுதியில் சென்னையில் இருபதாயிரம் ரூபாய்கள் மட்டுமே வசூலித்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்தப் படம் சென்னையில் இதுவரை 49.54 லட்சங்களை வசூலித்துள்ளது. ஒரு நாயகி மையப் படத்துக்கு இது அதிகம்தான்.
 
விமர்சகர்கள் பாராட்டிய குற்றமே தண்டனை வசூலில் தொடர்ந்து நொண்டியடிக்கிறது. சென்ற வார இறுதியில் 2.95 லட்சங்களை வசூலித்த படம், இதுவரை 49.28 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூல் செய்துள்ளது.
 
ஏழாவது இடத்தில் தர்மதுரை. ஃபீல்குட் படம் என்று பெயர் வாங்கிய சீனு ராமசாமியின் இந்தப் படம், சென்ற வார இறுதியில் 3.33 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னையில் கடந்த ஞாயிறுவரை இதன் வசூல், 3.56 கோடிகள். தர்மதுரை படத்துக்கு இது நாகரிகமான வசூல்.
 
ஆறாவது இடத்தில் இந்திப் படமான ப்ரீக்கி அலி உள்ளது. சோஹையில் கான் இயக்கிய இந்தப் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 10.51 லட்சங்கள்.
 
5. வாய்மை:
 
கவுண்டமணி பிரதான வேடமேற்ற வாய்மை, தூக்குத்தண்டனைக்கு எதிரான படம். சென்ற வாரம் வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் 17.17 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
4. கிடாரி:
 
முதல் மூன்று நாள்களில் ஒரு கோடி வசூலித்த கிடாரி, அப்படியே கீழிறங்கிவிட்டது. முதல் வார இறுதியில் ஒரு கோடி வசூலித்த படம், சென்ற வார இறுதியில் 12.58 லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 1.77 கோடி.
 
3. டோன்ட் ப்ரெத் (ஆங்கிலம்):
 
ஆங்கில ஹாரர் படமான இது சென்னைவாசிகளை ரொம்பவே பயமுறுத்தி வருகிறது. படத்துக்கும் நல்ல கூட்டம். சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல், 15.42 லட்சங்கள். இதுவரை சென்னையில் 68.21 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
2. பார் பார் டேக்கோ (இந்தி):
 
சித்தார்த் மல்ஹேத்ரா, கத்ரினா நடித்திருக்கும் இந்த இந்திப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 26.02 லட்சங்கள்.
 
1. இருமுகன்:
 
முதலிடத்தில் விக்ரமின் இருமுகன். சென்ற வியாழக்கிழமை இப்படம் வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறில் இதன் சென்னை வசூல், 1.66 கோடி. நல்ல சிறப்பான வசூல். வியாழக்கிழமையையும் சேர்த்தால் 2.24 கோடிகள்.
 
இந்த வாரமும் இரண்டாவது, மூன்றாவது இடங்களை இந்தி, ஆங்கிலப்படங்களே பிடித்துள்ளன. அடுத்தவாரம், இந்த நிலைமை மாறுமா... பார்ப்போம்....