வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 20 மே 2016 (18:41 IST)

இந்திய சினிமாவை முந்துகிறதா ஹாலிவுட் சினிமா...?

இந்திய சினிமாவை முந்துகிறதா ஹாலிவுட் சினிமா...?

ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் இந்தியாவில், இந்தியப் படங்களைவிட அதிகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளன. 


 
 
தொடர்ச்சியாக நடக்கும் இந்த வசூல் வேட்டையால் இந்திய சினிமா சந்தையில் ஹாலிவுட் சினிமாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. ஐரோப்பிய சினிமாவை ஹாலிவுட் சினிமா (வியாபார ரீதியாக) அழித்தது போல் இந்தியாவிலும் நடக்கலாம் என பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். 
 
ஹாலிவுட் திரைப்படமான த ஜங்கிள் புக் இந்தியாவில் 36 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஏறக்குறைய 237 கோடிகள். சமீபத்தில் வெளியான கேப்டன் அமெரிக்கா - சிவில் வார் திரைப்படமும் முதல் பத்து தினங்களில் 50 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் சென்ற வாரம் வெளியான கோ 2, பென்சில் திரைப்படங்களைவிட அதிகம் வசூலித்து இப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
 
முக்கியமாக ஷாருக்கான் நடித்த ஃபேன் திரைப்படத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக த ஜங்கிள் புக் இந்தியாவில் வசூல் செய்துள்ளது. இதனை வைத்தே, ஹாலிவுட் இந்திய சினிமாவை அடக்கி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அவர்கள் அச்சப்படும் அளவுக்கு எதுவுமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
 
த ஜங்கிள் புக் இந்திய கதை. கார்ட்டூனாக இந்திய மக்கள் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பரிட்சயமானது. அதனால், அப்படத்தின் இந்திய வசூலை ஒரு விதிவிலக்காகவே கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம். கேப்டன் அமெரிக்கா - சிவில் வார் இந்தியாவில் நல்ல வசூலை பெற்றுள்ளது உண்மைதான். அதேநேரம் அதிகம் விளம்பரத்துடன் வெளியான பேட்மேன் வெர்சஸ் சூப்பர் மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம் பெரிய வசூலை இந்தியாவில் பெறவில்லை. அதேபோல் ஹாலிவுட்டில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் உலக அளவில் அதிகம் வசூலித்த அனிமேஷன் திரைப்படமான ஸுட்டோப்பியா இந்தியாவில் பெரிய வசூலை பெறவில்லை. அதைவிட குங்ஃபூ பாண்டா 3 இந்தியாவில் அதிகம் வசூலித்தது. குங்ஃபூ பாண்டா ஒரு சீரிஸ் என்பதால் அப்படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் ஜனங்களுக்கு முன்பே பரிட்சயமாயிருந்ததே அதற்கு காரணம். 
 
ஹெரார்ட் பட்லர், மோர்கன் ப்ரீமேன் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தும், லண்டன் ஹேஸ் ஃபாலன் திரைப்படம் ஓபனிங்கை தாண்டி அதிகம் வசூலிக்கவில்லை. வருடத்தில் 100 ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வெளியானால் ஐந்தோ ஆறு படங்களே நல்ல வசூலை பெறுகின்றன. அதை வைத்து ஹாலிவுட் சினிமா இந்திய சினிமாவை முந்துவதாகவோ, ஆதிக்கம் செலுத்துவதாகவோ கூறுவது சரியல்ல, இந்திய சினிமா வர்த்தகத்தை ஹாலிவுட் சினிமா கைப்பற்றும் என்பது தேவையில்லாத அச்சம் என்பது மறுப்பவர்களின் கருத்து.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஹாலிவுட் சினிமாவுக்கான சந்தை அதிகரித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 5 இடங்களில் ஹாலிவுட் படங்கள் எளிதாக இடம்பிடிக்கின்றன. த ஜங்கிள் புக் முதலிடத்தையே பிடித்தது. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, கமலின் தூங்காவனம், தனுஷின் மாரி போன்ற படங்களைவிட த ஜங்கிள் புக் சென்னையில் அதிகம் வசூலித்துள்ளது. பிற ஹாலிவுட் படங்களும் ஓபனிங் வீக் என்டில் அனாயாசமாக 50 லட்சங்களை தாண்டுகின்றன. 
 
இந்திய சினிமாவுக்கான இடம் இந்தியாவில் அப்படியேத்தான் உள்ளது. அதேநேரம் ஹாலிவுட் திரைப்படங்களும் தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி  வருடந்தோறும் அதனை விஸ்தரித்து வருவதையும் மறுப்பதற்கு இல்லை.