1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 21 மே 2016 (13:45 IST)

வலுக்கும் திருட்டு டிவிடி மோதல்

வலுக்கும் திருட்டு டிவிடி மோதல்

திருட்டு டிவிடி விவகாரம் தமிழ் சினிமா சங்கங்களிடையே ஆழமான முறிவை ஏற்படுத்தும் அளவுக்கு  தீவிரப்பட்டுள்ளது.


 
 
திருட்டு டிவிடிக்கு எதிராக நடிகர் சங்க செயலாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் களத்தில் இறங்கி  போராடிய பிறகு திருட்டு டிவிடிக்கு பின்னுள்ள ரகசிய முகங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. படங்கள் இப்போது க்யூப் முறையில் திரையிடுவதால் திருட்டு டிவிடிகள் எந்தத் திரையரங்கிலிருந்து எடுக்கப்படுகின்றன என்பதை  அறிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இருந்துதான் பெரும்பாலான திருட்டு டிவிடிகள் தயாரிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை விஷால் முன் வைத்தார்.
 
அதற்கு, விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு  தெரிவித்தார். படங்களின் வெளிநாட்டு உரிமையை தருவதால்தான் அங்கிருந்து திருட்டு டிவிடிகள்  தயாரிக்கப்பட்டு தமிழகத்துக்கு வருகின்றன, எனவே படங்களின் வெளிநாட்டு உரிமையை படம் வெளியாகி சில வாரங்கள் கழித்து கொடுங்கள் என சுப்பிரமணியன் கூறியிருந்தார். மேலும், ஏதோ ஒருசில திரையரங்குகளில், திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்துக்கு வராமல் ஆபரேட்டரின் துணையுடன் நடக்கும் திருட்டு டிவிடி  தயாரிப்பை விஷால் பெரிதுப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், தோழா படத்தின் திருட்டு டிவிடி எடுக்கப்பட்டது திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான  திரையரங்கில் என்ற விஷயம் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. விஷாலின் குற்றச்சாட்டு திருப்பூர்  கூப்பிரமணனுக்கு கசந்தது புரிந்து கொள்ளக் கூடியது.
 
திருட்டு டிவிடி விவகாரம் தீப்பற்றி நிற்கும் இந்த நேரத்தில் சூர்யா நடித்த 24 படத்தின் திருட்டு டிவிடி படம்  வெளியான அடுத்த நாளே சந்தைக்கு வந்தது. அந்த காப்பி எடுக்கப்பட்டது பெங்களூருவில் உள்ள பிவிஆர்  திரையரங்கில் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தத் திரையரங்கில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அத்தனை பிவிஆர் திரையரங்குகளிலிருந்தும் 24 படத்தை தூக்கினார், அதன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா.  உடனடியாக அத்திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால்,  நடவடிக்கை எடுக்க வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் மௌனமாகவே உள்ளது.
 
ஞானவேல்ராஜாவும், விஷாலும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், திருட்டு டிவிடி தயாரித்தது எந்தத்  திரையரங்கு என்பது தெரிந்தும் ஏன் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. விஷால் தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்த கேள்வியை கேட்டிருந்தார்.
 
இதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாது என்ற நிலையில் தாணு விஷாலின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.  முன்னணி ஆங்கில நாளிதழ் இது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், விஷால் பதவிக்கு புதிதாக வந்தவர். பொறுமையும், அனுபவமும் அவருக்கு இல்லை. திருட்டு டிவிடி விவகாரம் 25 வருடங்களாக தமிழ்நாட்டில்  இருக்கிறது. ஒரே இரவில் அதனை சரி செய்ய முடியாது. முதலில் எழுத்துப்பூர்வமாக புகார் தர வேண்டும். பிறகு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளார். தாணுவின் பேச்சு அவர்  இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாமலிருப்பதையும், திருட்டு டிவிடி தயாரித்தவர்களுக்கு சாதகமாக  இருப்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 
 
தாணுவின் இந்த விளக்கத்துக்கு பதிலளித்திருக்கும் விஷால், யார் தப்பு செய்தது என்று தெரிந்த பிறகும்  நடவடிக்கை எடுக்க தாணு ஏன் தயங்குகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
கார்ப்பரேட் நிறுவனங்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பயமா? ஞானவேல்ராஜாவும், விஷாலும்  தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்க தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் என்ற கோபமா? எது  தாணுவை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது?
 
எதுவாக இருப்பினும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தமிழ் சினிமா வர்த்தகத்துக்கும் இந்த தாமதமும் தயக்கமும்  நல்லதில்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்