வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (13:00 IST)

2016 அதிகம் வசூலித்த இந்திப் படங்கள்

இந்திப் படங்களின் வசூலை சொல்வதும், ஒன்று, இரண்டு என்று வகை பிரிப்பதும் சுலபம். தமிழ் சினிமா வர்த்தகம் போலன்றி,  இந்தி திரைப்பட வர்த்தகம் வெளிப்படையானது. இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் டாப் 5 கமர்ஷியல் ஹிட் படங்கள் எவை... பார்ப்போம்.

 
5. ரஷ்டம்
 
அக்ஷய் குமார் நடிப்பில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஷ்டம் வெளியானது. 1959 -இல் நடந்த சம்பவத்தை பின்னணியாக  வைத்து தயாரான இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 127.42 கோடிகளை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
4. ஏர்லிப்ட்
 
1990 -இல் ஈராக் குவைத்த ஆக்கிரமித்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஏர்லிப்ட் இந்தப் பட்டியலில்  நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அக்ஷய் குமார்தான் இதிலும் நாயகன். இந்தப் படம் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் 129  கோடிகளை வசூலித்தது.
 
3. எம்.எஸ்.டோனி தி அன் டோல்ட் ஸ்டோரி
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் இந்தப் படம், இந்தி பேசும் மாநிலங்கள்  மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் இப்படம் 2 கோடிகளுக்கு மேல் வசூலித்து  சாதனைப் படைத்தது. நீரஜ் பாண்டே இயக்கிய இந்தப் படம் இந்திய அளவில் 133.04 கோடிகளை வசூலித்து 3 -வது இடத்தில்  உள்ளது.
 
2. தங்கல்
 
எப்போதும் இந்தப் பட்டியலில் முன்னணி இடங்களை கான் நடிகர்களின் படங்களே பிடிக்கும். டிசம்பர் 23 வெளியான அமீர்  கானின் தங்கல் திரைப்படம் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து தினங்களில், அதாவது டிசம்பர் 27 வரை  இந்தப் படம் இந்திய அளவில் 155.53 கோடிகளை வசூலித்துள்ளது. விரைவில் இப்படம் 300 கோடிகளை கடக்கும் என்று  நிபுணர்கள் ஐயமின்றி கூறுகின்றனர். எனினும் தற்போதைய நிலவரப்படி 155.53 கோடிகளுடன் தங்கல் இரண்டாவது இடத்தில்  உள்ளது.
 
1. சுல்தான்
 
சல்மான் கானின் படம் இல்லாமல் இந்தப் பட்டியல் முழுமை பெறாது. மல்யுத்த பின்னணியில் வெளியான சுல்தான் இந்திய  பாக்ஸ் ஆபிஸில் 300.45 கோடிகளை கடந்து முதலிடத்தில் உள்ளது. இது சல்மான் கானின் இரண்டாது முச்சதம். இதற்கு முன்  பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் 300 கோடிகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.