வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2016 (14:52 IST)

‎இரஞ்சித் எனும் மகிழ்ச்சிக்காரன்‬; ‎கபாலி எனும் கலகக்காரன்‬

ரஜினி தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்து நடித்திருக்கும் படம் கபாலி. இயக்குனர் இரஞ்சித்திற்கு இது மூன்றாவது படம் ஆனால் ரஜினிக்கோ நூறுகளை தாண்டிய (156) படம். கபாலி என்கிற ரஜினியிடம் இயக்குனர் அதிகம் வேலை வாங்கியிருக்கலாம்.


 

இரஞ்சித் பிறக்கும் முன் நடிகனாக மிளிர்ந்த ரஜினியை, அதன்பிறகு சமகால நடிகனாக முடியுமென நம்பிக்கை கொள்ளும் வகையில், நடிக்கவைத்து நிருபித்திருக்கிறார். அதை ரஜினியும் ரசிக்கிறார். கொண்டாடி மகிழ்கிறார்.
 
தன்னை பகடி செய்யும் புத்திசாலிகள் அடித்த மணிகளுக்கான பதில் உரை தான் 'கபாலி புரட்சிகரமான படம்' என்ற ரஜினியின் ஊடக அறிக்கை. நான் ஒரு கலைஞன். ஆனால் இவர்களெல்லாம் என்னை என்னவாகத்தான் நினைத்து விட்டார்கள் என்ற கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அந்த அறிக்கையை நான் பார்க்கிறேன். படைப்பாளியின் எண்ணங்களை பார்த்தால் கபாலியை கொண்டாடித் தீர்க்கலாம். படைப்பாளியின் வண்ணத்தை பார்த்தல் உங்களால் கொண்டாட முடியாத கெட்ட நிகழ்வுதான் (கனவு) இது. என்ன செய்ய ஒருவனது மகிழ்ச்சி, ஒரு கூட்டதிற்க்கே கெட்ட கனவாய் இருப்பது கூட பெருமகிழ்ச்சி தானே.
 
கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக வெறும் வியாபாரக்காரராக மட்டுமே நடக்கவிட்ட, நடந்துகொண்டிருந்த ரஜினியை ஏன் எந்த இயக்குநராலும் [மகேந்திர, பாலசந்தர் உள்ளிட்ட சிலரை தவிர] நடிக்க வைக்க முடியவில்லை? அவர் பேசிய வசனங்களை விவாதமாக்க முடியவில்லை. இவர்கள் செய்வது பிடிக்காது போன ரஜினிக்கு, இரஞ்சித்தின் மெட்ராஸ் படம் பிடித்துபோய், தன்னை இரஞ்சித்திடம் ஒப்படைத்திருக்கிறார்.
 
ரசிகர்களை யார் திருப்திபடுத்துவது? ரசிகர்களின் ரசனையை யார் மழுங்கடித்தது? முதல் கேள்வி சரியென்றால் இரண்டாவது கேள்வி மிகச் சரியே. வெறும் விசிலடிக்கும் கூட்டமாய் வைத்திருந்த ரஜினியிடமும், ரஜினியை அப்படி வடிவமைத்து வைத்திருந்த லிங்காக்கள் மற்றும் பாபாக்களிடமும் தான் இதை கேட்க வேண்டும்.
 
ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கு, அவர்களது தலைவனுள் ஒளிந்திருக்கும் மகா நடிகனை பாருங்கள் என்று, சூப்பர் ஸ்டார் பிம்பத்தை ஊதித்தள்ளி, ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள் இழுத்து வந்திருக்கிறார் இரஞ்சித். சில முரண்களால் ரஜினியை திட்டும் நான் கபாலியை ரசிக்கிறேன். நான் பிறக்கும் முன், நடிக்க மறக்கடித்து இறந்து போன ஒரு நடிகன், இரஞ்சித் எனும் இயக்குனர் வாயிலாக உயிர்தெழுந்ததாக உணர்கிறேன். வயதான ஒரு நடிகனை வைத்து வயதாகாத ஒரு படைப்பை தந்துள்ளார் இயக்குனர். இதற்குமேல் என்ன செய்யமுடியும்?
 
பாபாக்கள் போலின்றி, ஒரு இயக்குனாராய் தன்னையும், தன்னை நம்பிவந்த நடிகர் ரஜினியையும் திருப்திபடுத்தும் வகையில் இரஞ்சித் இயக்கி ரஜினி நடித்த படமே கபாலி. கூடவே ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்களையும் திருப்திபடுத்த முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சியில் சிறு சறுக்கல் இருந்தாலும், அவரது ரசிகர்களை இரஞ்சித் உச்சபட்சமாய் கவுரப்படுத்தியிருக்கிறார்.
 
இப்படியொரு ஸ்க்ரிப்டை தரும் ஒரு இயக்குனரை எந்த உலக நடிகர்களும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அதுதான் கலை அரசியல். ஆனால் ரஜினி அதை செய்து முடித்து மதிப்பிற்குரியவராகிறார். விஸ்வரூபத்திற்கு விஸ்வரூபமெடுத்த இந்த சமூகமும், திரையுலகமும் இப்போது வாய்மூடி வேடிக்கை பார்க்கும் போதே தெரிகிறது இரஞ்சித் சரியான பாதையில் தான் பயணிக்கிறார் என்று. பெருமகிழ்ச்சியும்... பேரானந்தமும்...
 
விரல் அசைவிற்கே விசிலடிக்கும் ரசிக கூட்டம், ரஜினி விரும்பி நடித்ததை மட்டும் வெறுத்து விடுவார்களா என்ன? சுற்றியிருப்பவர்களை இம்சித்து கத்திகத்தி பார்க்கும் படமல்ல கபாலி. பொத்திக்கொண்டு பார்க்கும் படம் கபாலி. தனது ரசிகர்களின் ரசனையை சில ஆண்டுகளில் மேம்படுத்தி காட்டுவேன் என்ற மிஸ்கினே, படம்வெளியாகும் முன்னரே, கபாலியை பிடிக்கவில்லை ஆனால் படம் ஓடும் என்று பாதுகாப்பாய் பேசும் கலைச்சமூக சூழலில், ரசிகர்களின் கோபங்களுக்கும் விமர்சனங்களுக்கும் நான் செவி சாய்க்கிறேன். உடன்படுகிறேன். ஆனால் அது அவர்களின் தப்பில்லை.
 
கோட் விஷயம் பற்றி பேசுகிற எவருமே, கபாலிக்கு கோட் கொடுக்கும் குமுதவல்லி பற்றி பேச விரும்பாததில் ஒளிந்து தாண்டவமாடுகிறது சமூக காவலர்களின் பொதுப்புத்தியும், ஆணாதிக்கத் திமிரும். பெண்களை சுய சார்புள்ளவர்களாகவும், அடித்தால் திருப்பி அடிப்பவளாகவும் நம்மால் திரையில் பார்ப்பதைகூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்ணை ஒரு இயக்க சக்தியாக இரஞ்சித் வடிவமைத்ததில் பெருமை கொள்ளாமல் வக்கிரம் பாய்ச்சுகிறீர்கள்.
 
ஆனால் பெரியார் படிக்கிறோம், பெண்ணியம் பேசுகிறோம். பெரியார் போட்டோ காணோமென வேறு கொக்கரிக்கிறோம். இறைவியை கொண்டாடிய சமூகம் வேறென்ன செய்யும். சபலபட்டுக் கிடந்த சமூகத்தை சலனப்படுத்தி, அதன் மூலம் ஒரு விவாத சலசலப்பை ஏற்படுத்திய இரஞ்சித் எனும் கலைஞன், தன் கனவினை நோக்கி ஓடிகொண்டிருக்கும் பெருநதி போலாகின்றான். உங்கள் வக்கிரங்களும், அதனூடனான சலசலப்புகளும் அந்நதியை குழப்பிவிடவும் முடியாது. தடுத்து நிறுத்திவிடவும் முடியாது. முக்கியமாய் மடை மாற்றிவிட முடியவே முடியாது.
 
கபாலி எங்கு வாழ்கிறான் என்று உள்வாங்கிக்கொண்டு படம் பார்த்தால் எந்த வரிகளும், வசனங்களும் விவாதமாகாது. ’ஒண்ணுமில்லாம வந்தேண்டா’ என்று கபாலி சொல்வது தனிப்பட்ட ரஜினிக்கே பொருந்துமே. டிக்கெட் கொள்ளை நடந்ததே, லோ பட்ஜெட், அடித்தட்டு சிந்தனை என்றெல்லாம் வக்கிரம் கக்குகிறார்களே.
 
ரஜினியிடமோ, தானுவிடமோ, ஜாஸ் சினிமாஸ் வினோத்திடமோ ஏன் உங்களால் நெஞ்சை நிமிர்த்த முடியவில்லை. நீங்கள் மட்டுமா, இட்லி கம்யூனிசத்தையே கத்தி கூவி  புரட்சி என்று கூப்பாடு போட்டு கொண்டாடிய அமைப்புகளும் கூடத்தான் இப்போது எங்கென்றே தெரியவில்லை. ஆக உங்களுக்கு வசனங்களும், வரிகளும் பிரச்சினையில்லை இரஞ்சித் தான் பிரச்சினை. ஆனால் இரஞ்சித்தோ கனவுகள் சுமக்கும் கலகக்காரன். தயாராயிருங்கள்... இனிவரும் காலங்களில் நிறைய நிறைய கெட்டகெட்ட கனவுகள் வந்து கொண்டேயிருக்கும். தந்துகொண்டேயிருக்க எப்போதே தயாராகிவிட்டார் இயக்குனர் ரஞ்சித்.
 
விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதே உரிமை நாகரீகம் காப்பதிலும் இருக்கவேண்டும். இணையதளத்தில் வெளியான வெளியானதை பார்த்துவிட்டு புறம்பேசும் நல்லோர்களே, இரண்டரை மணிநேரம் இரண்டு நொடியுள்ள கபாலி படத்தை, இணையதளத்தில் வெளியான வெறும் ஒன்றரை மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு வசைபாடி பொங்காதீர்கள். கபாலி பற்றி தவறான பேச்சுக்களை உண்டாக்கி, படக்குழுவினரை பழிவாங்கும் நல்ல எண்ணத்தில், இணையதள யோக்கியர்கள் கத்தரித்து கக்கத்தில் வைத்திருக்கும் ஒருமணிநேர படத்தை எப்போது பார்ப்பீர்கள்?
 
வசனங்களையும் பாடல் வரிகளையும் விட கபாலி உற்று நோக்கவேண்டிய படம். ஒவ்வொரு காட்சியிலும் இச்சமூகத்தின் அவலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமீர் நிர்வகிக்கும் பள்ளியில் கபாலி நுழையும்போது, மாணவர்களிடம் கைப்பற்றியதாக, அமீர் சில பொருட்களை கபாலியிடம் காட்டுவார். அதில் கையில் கட்டும் கலர் ரப்பர்களும் இருக்கும். அந்த கலர் ரப்பர்களின் பின்னாலுள்ள வன்மமான அரசியல் தெரியனும், எளிமையாய் புரியணும் என்றால் பாரதி தம்பி விகடனில் தொடராக எழுதி, வெளிவந்த ’கற்க கசடற’ புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். படித்து முடித்தால் படைப்பின் வாயிலாக இரஞ்சித் என்னவேனாலும் பேசலாம் என்று சொல்வீர்கள். மனசாட்சி உள்ளவர்கள் சொல்வார்கள்.
 
இதுநாள்வரை ராகவேந்திரராகவும், பாபாவாகவும், லிங்காவாகவும் அரிதாரம் பூசியவர், இன்று முழு கபாலியாகவே மாறி நிற்பதை காண சகிக்காமல் பலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தணிக்கை குழுவினரால் எச்சரிக்கப்பட்டு வெளியான மருது மற்றும் அதேபோன்ற படங்கள் வெளியானபோது கள்ள மவுனம் காத்த சமூகம் தானே இது. பெரியார் கருத்துக்களை பேசிய படங்களில் அம்பேத்கர் ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்று கேட்காத புகைப்பட அரசியல் செய்யும் இச்சமூகத்திடம், பெரியார் படம் வைக்காததற்காக மன்னிப்பு கேட்டாகிவிட்டது. நூறு சதவீதம் சரியான படைப்பை யாராலும் தரவே முடியாது.
 
அம்பேத்கர், பெரியார், சேகுவேரா, மார்க்ஸ் என எல்லோரையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு ஓவியன், தனது தூரிகையாக சினிமாவை கையிலெடுத்து, அதிகாரத்தின் கோரப்பிடிகளும், பிற்போக்கும், பொதுபுத்தியும் புரையோடிய இந்த சமூகத்திற்கு புதுவண்ணம் பூச முயற்சிக்கும் போது, நாம் உடன் நிற்காமல் எதிர்மறை முகாந்திரங்களை உற்பத்தி செய்வது பேரவலம்.
 
ஒரு படைப்பை படைப்பாக பார்க்காமல் அதை உருவாக்கிய மொத்த குழுவிலிருந்து ஒருவரை மட்டும் அலேக்காக தூக்கி வசைபாடுவதும், அவர்மீது சாதி வன்மம் பாய்ச்சுவதும் எவ்வளவு பெரிய வக்கிரம். படைப்பாளியாய் விடுங்கள் சகஉயிரினமாய் அவரது மனநிலையை பற்றி யோசித்திருப்போமா. ஆனால் இதெல்லாம் தெரிந்தே வளர்ந்த, வளரும் இரஞ்சித், இக்கணம் இன்னும் மெருகேறி களமாடி, உங்களுக்கு கெட்ட கனவுகளை தர காத்திருப்பார்.
 
படத்தில் எனக்கும் சில குறைகள் இருக்கிறது. ஆனால் எப்போதும் இந்த சமூகத்தோடும், சமூகத்திற்காகவும் உரையாடவும், கதை சொல்லவும் காத்திருக்கும் இரஞ்சிதிடமே அதை கேட்பேன். விவாதிப்பேன். நானென்று இல்லை யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம், கேட்கலாம் உரிமையிருக்கு.
 
அன்புள்ள இரஞ்சித், அன்புள்ள தோழா. அண்ணா, என இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லி அழைத்து அவரது தோளில் கைபோட்டு விவாதித்திருக்கணும், தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கணும். ஏனென்றால் மக்களுக்காய் களமாடுபவனை நாம் தானே மதிக்கவேண்டும். ஆனால் நாமோ மாறாக மிதித்து மகிழ்கிறோம். இந்த சமூகம் எவ்வளவு காழ்புணர்ச்சிகளையும் வசவுகளையும் அவரது தோள்களில் மாலைகளாக சூட்டி மகிழ்ந்திருக்கிறது. அப்போதும் மகிழ்ச்சி சொல்வதுதான் இரஞ்சித் ஸ்டைல்.
 
கபாலி படம் பற்றி எழுதமாட்டேன். ஏனெனில் அவரவர் பார்த்து தெரிந்தும் புரிந்தும் கொள்ளுங்கள். அதுதான் சரியும் கூட. வெறும் வசனங்கள் மட்டுமே இருக்கிறது என்பவர்களுக்கு, இருபத்தைந்து வருடம் சிறைக்குள் இருந்தவன் பேசிய இரண்டு வசனமே உங்களை இவ்வளவு யோசிக்க வைக்கிறதே. இரண்டாயிரம் வருடமாய் சிறைபடுத்தி வைத்திருக்கும் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் மனநிலையை என்றாவது யோசித்திருப்போமா?
 
வழக்கமான கூட்டத்தை கூட்டிவந்து நடிக்கவைத்து கெடுத்துவிட்டார்.  ரஜினியை சரியாக பயன்படுத்தவில்லை என்ற எல்லா விமர்சனங்களுக்குமான பதில், ஆரம்ப காலங்களில் தனக்கு தோள் தந்து உதவிய மனிதர்களை, தான் வளரும்போது கைப்பிடித்து கூட்டி செல்வதும் கூட ஒரு மாண்புமிகு கலை தான். அது இரஞ்சித்திற்கு கைவந்த கலையாகவேயிருக்கிறது. அதுமட்டுமே காரணமில்லை, இயக்குனர் ரஞ்சித்துக்கு தேவை நடிகர் ரஜினி மட்டுமே.
 
அந்த தேவையை கேட்டு வாங்குவதற்கும் ஒரு கலைத்திமிர் வேண்டும். அந்த திமிர் ரஞ்சித்திடமிருப்பதாக ரஜினி உணர்ந்தார். அவரை தந்தார். ரஞ்சித் இயக்க ரஜினி நடித்தார். கபாலி விவாதப் பொருளாக உருமாறினான். கபாலியை பார்த்ததும் பிடிக்காது. பார்க்க பார்க்கதான் பிடிக்கும். ஏனென்றால் கொம்பன்களும், மருதுக்களும் மலிந்து கிடக்கும் சமூகத்தில் கபாலிக்கள் மிகமிக குறைவு தானே.
 
எவன் ஒருவனை கண்டு ஒரு அரசாங்கம் பயப்படுகிறதோ அவன் சிறந்த போராளி. ஆனால் ஒரு அதிகார தினவெடுத்த சமூகமே ஒருவனை கண்டு பயம் கொள்கிறதென்றால் அவனுக்கு என்ன பெயர்? இப்போதைக்கு பா.இரஞ்சித் எனும் மகிழ்ச்சிக்காரன் என்று சொல்லி அவனை நம்மோடு வைத்துக்கொள்வோம். மகிழ்ச்சி!

கட்டுரை : ஜெபி ஜென்பதியான்