செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (12:36 IST)

ஹேப்பி நியூ இயரின் சரித்திர வசூலும் 200 கோடி கிளப்பும்

2008 -இல் வெளியான அமீர்கானின் கஜினி 100 கோடி வசூலித்தது மாபெரும் சாதனையாக இருந்தது. அதுவரை இந்தியப் படமொன்று இந்திய திரையரங்கு வசூலின் மூலம் 100 கோடி வசூலித்தது இல்லை. அன்றிலிருந்து 100 கோடி என்பது இந்தி கான் நடிகர்களின் பென்ச் மார்க்காக அமைந்தது. 
ஆறு வருடங்களில் 100 கோடி கிளப் பொலிவிழந்துவிட்டது. 100 கோடிக்கு எந்த மதிப்பும் இல்லை. சல்மான் கானின் ஜெய்ஹோ பத்து தினங்களில் 100 கோடியை எட்டிய பிறகும் - இதன் மொத்த இந்திய வசூல் 116 கோடிகள் - படம் தோல்வி என அறிவிக்கப்பட்டது. இயக்குனர்கள், நட்சத்திரங்களின் சம்பளம், படத்தயாரிப்பு போக லாபம் பார்க்க வேண்டும் என்றால் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான் படங்கள் குறைந்தது 150 கோடிகளையாவது வசூலிக்க வேண்டும்.
 
அமீர் கானின் 3 இடியட்ஸ் படம்தான் முதலில் 200 கோடி கிளப்பின் முதல் மெம்பர். கஜினி 100 கோடி சாதனையை புரிந்த மறுவருடமே 3 டியட்ஸ் இந்திய திரையரங்குகளில் 202.47 கோடிகள் வசூலித்து 200 கோடி கிளப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன் பிறகு இதுவரை நான்கு படங்கள் 200 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளன. 

3இடியட்ஸ் 202.47 கோடிகள்.
 
ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் 227.13 கோடிகள்.
 
சல்மான் கானின் கிக் 231.85 கோடிகள். 
 
ஹிர்த்திக் ரோஷனின் க்ரிஷ் 3 244.92 கோடிகள். 
 
முதலிடத்தில் அமீர்கானின் தூம் 3 284.27 கோடிகள்.
இந்தப் பட்டியலில் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் முதலிடத்தைப் பிடிக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
 
கடந்த 24 -ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் 44.97 கோடிகள் வசூலித்தது. இதுவரை இந்திய சினிமா சரித்திரத்தில் முதல்நாள் வசூலில் முதலிடத்தில் இருந்தது தூம் 3. வசூல் 36.22 கோடிகள். அதனை ஹேப்பி நியூ இயர் முறியடித்தது. அதே போல் முதல் வார இறுதி வசூலிலும் ஹேப்பி நியூ இயர் சாதனை படைத்துள்ளது. 

இதுவரை வார இறுதி வசூலில் முதலிடத்தில் இருந்தது தூம் 3. முதல் மூன்று தினங்களில் 107.61 கோடிகளை இப்படம் வசூலித்ததே சாதனையாக இருந்தது. அதனை முந்தியது ஹேப்பி நியூ இயர். முதல் மூன்று தினங்களில் 108.86 கோடிகள். 
இந்த புள்ளி விவரங்களை வைத்து, படம் கண்டிப்பாக 200 கோடிகளை தாண்டும் என்பதை எளிதாக கணக்கிடலாம். ஷாருக்கானின் முந்தையப் படமான சென்னை எக்ஸ்பிரஸ் 227.13 கோடிகளை வசூலித்தது. அடுத்தப் படமும் 200 கோடிகளை வசூலிக்கப் போகிறது. இந்த வசூல்களை டிசம்பரில் வரும் அமீர்கானின் பிகே தாண்டும் என்பதில் விமர்சகர்களுக்கு சந்தேகம் இல்லை.
 
ஆறே வருடங்களில் 100 கோடி கிளப் பொலிவிழந்ததுடன் புதிதாக 200 கோடி கிளப்பை திறந்தும் வைத்திருக்கிறது இந்தி சினிமா.
 
இந்தி சினிமாவின் வர்த்தகத்திலிருந்து தமிழ் சினிமா கற்றுக் கொள்ள ஏராளம் இருப்பதையே இது காட்டுகிறது.