1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (14:53 IST)

அரையாண்டில் கரையேறிய படங்கள் ஒரு பார்வை

அரையாண்டில் கரையேறிய படங்கள் ஒரு பார்வை

அரையாண்டை தமிழ் சினிமா வெற்றிகரமாக கடந்திருக்கிறது. வெற்றிகரமாக என்றது சம்பிரதாயமான வார்த்தை. 


 
 
உண்மையில் இந்த அரையாண்டு எத்தனை படங்களுக்கு வெற்றியாக அமைந்தன?
 
2016 -இல் தமிழ் சினிமாவின் உற்பத்தி எப்போதும் போல் தன்னிறைவை தாண்டியது. 100 -க்கும் அதிகமான படங்கள் முதல் அரையாண்டில் வெளியாயின. அதில் தமிழ் சினிமாவின் ரசனை தளத்தில் புதுரத்தம் பாய்ச்சிய படங்கள் என்று ஒன்றுகூட இல்லை. இறைவி, உறியடி போன்ற ஒன்றிரண்டு அரைகுறை முயற்சிகள். அதனை விட்டால், பணமே எல்லாம் ஜெயமே எல்லாம்.
 
போட்ட பணத்துக்கு சேதாரம் விழைவிக்காத படங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் சேதுபதி, தோழா, இறுதிச்சுற்று, வேலைன்னு வந்திட்டா வெள்ளக்காரன் என நான்கு படங்கள் தேறும். இறுதிச்சுற்று விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த நான்கில் முதலிடத்தைப் பிடிக்கிறது. 
 
ஹிட் என்று சொல்லத்தக்கவை இரண்டேயிரண்டு. ரஜினி முருகன், பிச்சைக்காரன். இதில் பிச்சைக்காரன் தெலுங்கில் வெளியாகி அங்கேயும் கோடிகளை கொய்கிறது.
 
பிளாக் பஸ்டர் என்றால் அது விஜய்யின் தெறி. ஏன் எல்லோரும் மாஸ் நடிகர்களின் பின்னால் அலைகிறார்கள் என்பதற்கு தெறி சிறந்த உதாரணம். அதரபழசான கதையையும் கொஞ்சம் சுவாரஸியமாக தந்தாலே மாஸ் நடிகர்களின் படங்கள் பிளாக் பஸ்டராகிவிடும். தெறி திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை பொழிந்தது.
 
இந்தப் படங்கள் தவிர்த்து அரண்மனை 2, மனிதன், காதலும் கடந்து போகும், இது நம்ம ஆளு போன்ற சில படங்கள் நல்ல ஓபனிங்கை பெற்றும் அதனை தக்க வைக்க இயலவில்லை. 100 -க்கும் அதிகமான படங்கள் வெளியான தமிழ் திரையுலகில் ஏழே ஏழு படங்கள்தான் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை தந்திருக்கிறது.
 
கமலின் தூங்கா வனம், சூர்யாவின் 24, தனுஷின் தங்க மகன் என்று ஏமாற்றம் தந்த பட்டியல் மிகப்பெரியது. 
 
அதேநேரம் இரண்டாவது அரையாண்டின் முதல் நாளில் (ஜுலை 1) வெளியான படங்களில் ஜாக்சன் துரை நல்ல ஓபனிங்கை பெற்று நம்பிக்கை அளிக்கிறது. ரஜினியின் கபாலி, விக்ரமின் இரு முகன், கமலின் சபாஷ் நாயுடு, விஜய்யின் புதிய படம், கார்த்தியின் காஷ்மோரா, தனுஷின் கொடி, தொடரி என்று நிறைய படங்கள் இந்த இரண்டாவது அரையாண்டில் வெளியாக உள்ளன. அதனால் 2016 -இன் வெற்றிக் கணக்கு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.