வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (10:48 IST)

நாற்பது வயதானால் நடிகைகள் அம்மாவா? - தபுவை முன்வைத்து...

நேற்று (நவ.4) நடிகை தபுவின் 45 -வது பிறந்தநாள். இந்தியின் முக்கியமான திறமைசாலிகளில் தபுவும் ஒருவர். தபுவின் நடிப்புத் திறமைக்கு அவர் இதுவரை நடித்திருக்கும் படங்களே சான்று.

 
தபுவைவிட மூத்த நடிகர்கள் இளம் நடிகைகளுடன் டூயட் பாடிக் கொண்டு நாயகர்களாக நடிக்கையில், பாலிவுட்டில் தபுக்கு இடமேயில்லை. அவரை நாயகியாக யோசிக்கவே பாலிவுட்டால் இயலவில்லை என்பதே உண்மை. திருமணமானால் அல்லது 35 வயதை எட்டினால் நடிகைகள் நாயகி அந்தஸ்தை இழந்துவிடுகிறார்கள். தமிழ், தெலுங்கில் இதற்கு விதிவிலக்காக ஒருசிலரே உள்ளனர். மலையாளம் பரவாயில்லை. திருமணமாகி குழந்தை பெற்றுக் கொண்ட பின்பும் அங்கு நாயகியாக மட்டுமில்லை, நாயகி மையப் படங்களில்கூட கலக்கலாம்.
 
இந்தியும் நிறைய மாறி வருகிறது. ஐஸ்வர்யா ராய்க்கு 43 வயதாகிறது. சென்ற வாரம் வெளியான ஏ தில் ஹே முஷ்கில் படத்தில் தன்னைவிட வயதில் குறைந்த ரன்பீருடன் நாயகியாக நடித்திருக்கிறார். ராணி முகர்ஜி, வித்யாபாலன் என்று அங்கு சில விதிவிலக்குகள் இருந்தாலும், இவர்களுக்கு இணையான தபுவின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அது, எல்லா மொழி நடிகைகளும் படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.
 
சினிமாவில் தனது இடத்தை எக்காரணம் கொண்டும் விட்டுத்தரக் கூடாது என்பது பாலபாடம். நாயகன் வேடம் தேடி வரும்போது, குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பேன் என்று தாராள முடிவெடுத்ததால்தான் தமிழ் நடிகர் கார்த்திக் குமார் சினிமாவைவிட்டே விலக நேர்ந்தது. அதேபோல், சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கும் நடிகைகள் விரைவில் சினிமாவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
 
2014 -இல் வெளியான JAIHO திரைப்படத்தில் தபு சல்மான் கானின் சகோதரியாக நடித்தார். அது பரவாயில்லை. ஆனால் ஹேதர் படத்தில் ஷாகித் கபூரின் அம்மாவாகவும், பிட்டூர் திரைப்படத்தில் கத்ரினா கைப்பின் அம்மாவாகவும் தபு நடித்தது, அவர் எடுத்த மிகத்தவறான முடிவு என்கிறார்கள். ஒருமுறை வளர்ந்த நடிகைகளுக்கு அம்மாவான பிறகு நாயகி வேஷத்தை ஒரு நடிகை எதிர்பார்க்கவே முடியாது... அதுதான் இந்தி திரைப்படங்களிலும் நிலைமை.
 
கஜோலுக்கு வயதான பிறகும் வயதான வேடங்களில் அவர் நடிப்பதில்லை. அதனால்தான் இன்றும் ஓரிரு படங்களில் நடித்தாலும் அதில் நாயகியாக இருக்க முடிகிறது. அதேபோல்தான் ஐஸ்வர்யா ராய்க்கும். இதில் இன்னொன்றும் இருக்கிறது. நடிகைகளின் தோற்றம்.
 
குழந்தை பிறந்தபின் குண்டான ஐஸ்வர்யா ராய் அதே தோற்றத்துடன் இருந்திருந்தால் எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது. அவர் தனது தோற்றத்தை மீண்டும் இளமையாக மாற்றிக் கொண்டார். தபுவுக்கு இயற்கையிலேயே முதிர்ந்த தோற்றம். அதுவும் அவர் விலக்கி வைக்கப்பட ஒரு காரணம்.
 
தமிழில் சிம்ரன் திருமணத்துக்குப் பிறகும் நாயகியாகவே நடிப்பேன் என்று அடம்பிடித்தார். அவருக்கு அவர் விரும்பிய வேடங்கள் கிடைத்திருக்கும். ஆனால், உப்பிப்போன அவரது தோற்றம் நாயகி வேஷத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. 
 
முப்பது வயதிலேயே வயிறு தள்ளிப்போன நடிகர்கள் அறுபது வயதிலும் நாயகர்களாக இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கையில் 35 வயதிலேயே நடிகைகள் புறந்தள்ளப்படுவது பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று.