செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2016 (13:35 IST)

திரைப்பட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - பரபரப்பான பின்னணி தகவல்கள்

24-11-16 அன்று, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் - பெப்சி - ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன் காரணமாக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் முடங்கின. டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளும் தடைபட்டன.

 
பெப்சியின் தலைவராக சிவா இருக்கிறார். பொதுச்செயலாளராக இருப்பவர் கே.ஆர்.செல்வராஜ். பெப்சி தலைவர் சிவா மீது ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீராம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனை கண்டிக்கும் விதத்தில் இன்று ஒரு நாள் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று பெப்சி பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்துதான் படப்பிடிப்புகள் முடங்கின.
 
பி.சி.ஸ்ரீராம் ஏன் சிவா மீது புகார் அளிக்க வேண்டும்? விசாரித்தால் ஊழல் பூதம் வெளிவருகிறது.
 
ஒளிப்பதிவாளர் சங்கத்தில் முன்பு தலைவராக என்.கே.விஸ்வநாதனும், பொதுச்செயலாளராக சிவாவும், பொருளாளராக கே.ஆர்.செல்வராஜும் பதவி வகித்து வந்தனர். கடந்த தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு பி.சி.ஸ்ரீராம் தலைவரானார்.
 
புதிய நிர்வாகிகள் பதவியேற்றதும் கணக்கு வழக்குகளை கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது பல தில்லுமுல்லுகள் நடந்தது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக ஒளிப்பதிவாளர்கள் நடத்திய நட்சத்திரகலைவிழா கணக்கில் பல லட்சம் ஊழல் நடந்திருப்பதை புதிய நிர்வாகிகள் கண்டு பிடித்துள்ளனர். சங்கத்துக்கு முறையாக வரி செலுத்தாததால், நன்கொடைகளுக்கு வரிவிலக்கு பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை முன்னாள் நிர்வாகிகளிடம் கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை, கணக்கும் முறையாக காட்டப்படவில்லை.
 
இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் பி.சி.ஸ்ரீராம் சிவா, விஸ்வநாதன், செல்வராஜ் மூவரையும் சங்கத்தைவிட்டு தற்காலிகமாக நீக்கியுள்ளார். அவர்கள் மீது போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.
 
சிவா தற்போது பெப்சி தலைவராகவும், செல்வராஜ் பொதுச்செயலாளராகவும் உள்ளார். அதன் காரணமாக பெப்சி தொழிலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒருநாள் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தனர்.
 
முறையாக கணக்கு காட்டுவதை விடுத்து பெப்சி தொழிலாளர்களை போராட்டத்தில் இறக்கியது கண்டிக்கத்தக்கது.  தயாரிப்பாளர்கள் சங்கம் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. கடைசியாக கிடைத்த தகவலின்படி ஒளிப்பதிவாளர் சங்கம் இந்த சமாதான  நடவடிக்கையை ஏற்கவில்லை. கணக்கு காட்டாதவர்கள், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் உறுதியாக உள்ளது.