வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 12 ஜனவரி 2015 (21:12 IST)

திரையரங்குகளின் கட்டண கொள்ளை - நடிகர்கள், ரசிகர்கள் செய்ய வேண்டியது என்ன?

லிங்கா நஷ்டம் என்ற விநியோகஸ்தர் சிங்காரவேலனின் போராட்டம் திரையுலகின் திரைமறைவு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு விநியோகஸ்தர்கள், ஒரு படம் ஆரம்பிக்கும்போதே சிறிய தொகையை தயாரிப்பாளரிடம் தந்துவிடுவார்கள். அதனால் தயாரிப்பாளரின் சுமை குறையும். ஆனால், இப்போது எந்த விநியோகஸ்தரும் பணம் தருவதில்லை. படம் வெளியாகும் போதுதான் அவர்களிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் பெரிய படங்களுக்கு மட்டும். சின்னப் படங்கள் என்றால் திரையரங்குக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டி தயாரிப்பாளருக்கு பட்டை நாமம் சார்த்திவிடுகின்றனர். இதில் திரையரங்குகளும், விநியோகஸ்தர்களும் பரஸ்பர கூட்டாளிகள்.


 
லிங்கா படத்தைப் பொறுத்தவரை முதல் மூன்று தினங்கள் பெரும்பாலான திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தைவிட பல மடங்கு வசூலித்தன. அவர்கள் கணக்கு காட்டுவது டிக்கெட் கட்டணத்தை மட்டுமே. அவர்களின் கணக்குப்படி படம் முதல் 3 தினங்களில் இரண்டு கோடிகளை வசூலித்தது என்றால் உண்மையான வசூல் ஆறு கோடிகளாவது இருக்கும்.

திரையரங்குகள் ஒவ்வொன்றும் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பதால் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்று கண்டறிவது கடினம். அந்த தைரியத்தில்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, கறாராக டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று திரையரங்குகளை அரசு வலியுறுத்த வேண்டும். டிக்கெட் கட்டணத்துக்கு மேல் வசூலிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதேபோல் சரியான டிக்கெட்டை விநியோகிக்காமல் ரிசர்வேஷன் கூப்பனை மட்டும் தந்து அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், சின்னப் படங்களின் தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். ரசிகர்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதற்கும் முடிவு ஏற்படும். ஆனால், இதனை திரையுலகினரே விரும்புவார்களா என்பதுதான் சந்தேகம். முதல் மூன்று தினங்கள் கண்டபடி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி ரசிகர்களை கசக்கி பிழிவதால்தான் மாஸ் ஹீரோக்களுக்கு அவர்களின் தகுதிக்கு மீறிய சம்பளம் தரப்படுகிறது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களின் படங்கள் வெளியாகும் போது, திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கட்டணத்தைவிட பலமடங்கு ரசிகர்களிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று பகிரங்கமாக பேச முன்வர வேண்டும்.

 
 
உன் குடும்பம்தான் உனக்கு முக்கியம், குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் இவர்கள் அத்துடன், சரியான டிக்கெட் கட்டணம் தந்தே என்னுடைய படத்தை பார்க்க வேண்டும். டிக்கெட் கட்டணத்துக்கு மேல் கொள்ளையடிக்கும் திரையரங்குகளை புறக்கணிக்க வேண்டும் என்று ரசிகர்களை அறிவுறுத்த வேண்டும். திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள் என்று அறிவுறுத்தும் இவர்கள், டிக்கெட் கட்டணத்துக்கு மேல் வசூலிக்கும் திரையரங்குகளில் படத்தை பார்க்காதீர்கள் என்று சொல்வதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்?
 
எங்கள் தலைவர் தன்னலவாதியல்ல, வள்ளல், பணத்தாசை பிடித்தவரல்ல என்று சொல்லும் ரசிகர்கள், திரையரங்கு கட்டண கொள்ளையில் அனைத்து நடிகர்களும் - தங்களின் தலைவர்கள் உள்பட - மௌனம் காப்பதற்கு என்ன விளக்கத்தை சொல்லப் போகிறார்கள்?
 
ரசிகர்களிடம் முறைகேடாக பிடுங்கிக் கொள்ளும் பணம்தான் இவர்களின் வசூல் சாதனையாக கொண்டாடப்படுகிறது. இல்லை என்பவர்கள் - ரசிகர்களாக இருந்தால், டிக்கெட் கட்டணம் மட்டுமே தந்து படம் பார்ப்பேன் என்று உறுதி எடுங்கள்.

நடிகர்களாக இருந்தால், டிக்கெட் கட்டணத்துக்கு மேல் வசூலிக்கும் திரையரங்குகளில் என்னுடைய படத்தைப் பார்க்காதீர்கள் என்று ரசிகர்களை அறிவுறுத்துங்கள். அதுவரை திரையரங்குகளின் கட்டண கொள்ளையின் ஒர் அங்கமாகவே நீங்களும் பார்க்கப்படுவீர்கள்.