செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (18:10 IST)

த்ரிஷ்யம் ஜப்பான் நாவலின் தழுவலா? - த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்குக்கு மேலும் சிக்கல்

த்ரிஷ்யம் படத்தின் கதை ஜப்பானிய நாவல், த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸின் (The Devotion of Suspect X) தழுவல் என ஜீத்து ஜோ‌சப் த்ரிஷ்யத்தை மலையாளத்தில் இயக்கி வெளியிட்டபோது ஒரு சர்ச்சை எழுந்தது. அது குறித்த சிறிய செய்தி ஒன்றை அப்போது நாமும் வெளியிட்டிருந்தோம். விரைவில் த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில் அந்தப் பிரச்சனை சட்டபூர்வமாக மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
2005 -ல் ஜப்பானிய எழுத்தாளர்  Keigo Higashino  எழுதிய டிடெக்டிவ் நாவல் த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ். இது அவரது துப்பறியும் நாவல் வரிசையான டிடெக்டிவ் கலிலியோவின் (Detective Galileo)  மூன்றாவது புத்தகம். இந்த மூன்று நாவல்களின் பிரதான அம்சம் அதில் இடம்பெறும் டாக்டர் மனபு யுகாவா (Dr. Manabu Yukawa) என்ற கதாபாத்திரம். அறிவுஜீவியும், கொஞ்சம் எக்சென்ட்ரிக்குமான இந்த கதாபாத்திரம் மூன்று நாவல்களிலும் வருகிறது. 
 
த டிவோஷன் ஆஃப் சக்ஸ்பெக்ட் எக்ஸ் நாவலில் விவாகரத்தான ஒரு தாயும் அவளது மகளும் இடம்பெறுகிறார்கள். தாய் சிறிய ஹோட்டல் ஒன்றில் வேலை செய்கிறாள். அவர்களுக்கு அடுத்த வீட்டில் குடியிருப்பது ஒரு கணித பேராசிரியர். அறிவுஜீவி.
 

இந்நிலையில் ஒருநாள் தாயின் முன்னாள் கணவன் அவர்களின் வீட்டிற்கு வந்து பணத்துக்காக தாயையும் மகளையும் மிரட்டுகிறான். அந்த சண்டையில் முன்னாள் கணவன் தாய் மகள் இருவராலும் எதிர்பாராதவிதமாக கொல்லப்படுகிறான். என்ன செய்வது என்று அறியாமல் தவித்துப் போகும் அவர்களுக்கு பக்கத்துவீட்டு கணித பேராசிரியர் உதவ முன் வருகிறார். இறந்தவனின் உடலை அப்புறப்படுத்துவது மட்டுமின்றி, அவர்கள் போலீஸின் பார்வையில் குற்றவாளிகளாக தெரியாமல் இருப்பதற்கான அலிபிகளையும் ஏற்படுத்துகிறார்.
இறந்தவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாகிறது. வழக்கை விசாரிக்கும் டிடெக்டிவால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அவன் தனது நண்பனும் முன்னாள் கல்லூரித் தோழனுமான டாக்டர் யுகாவாவின் உதவியை நாடுகிறான். கணித பேராசிரியருடன் கல்லூரிக்கு செல்லும் யுகாவா, பேராசிரியரின் கணக்குகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் திறமையை அறிந்து கொள்கிறார். அடுத்தமுறை சந்திக்கும் போதே கொலையில் பேராசிரியருக்கு ஏதோ பங்கிருப்பதையும் உணர்ந்து கொள்கிறார். இரண்டு புத்திஜீவிகளின் நீயா நானா மோதல் கடைசியில் என்னாகிறது என்பதை நாவல் விளக்குகிறது.
 

2005 -ல் வெளியான நாவல் வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பல்வேறு விருகளை வென்றது. 2008 -ல் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற பெயரில் படமாகவும் எடுக்கப்பட்டது.
இந்த நாவலைத் தழுவி த்ரிஷ்யம் எடுக்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. இதனை முன் வைத்திருப்பவர் இந்திப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர்.
 
Keigo Higashino  -ன் நாவலை இந்தியில் படமாக்குவதற்காக அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கியுள்ளார் ஏக்தா கபூர். த்ரிஷ்யம் படம் நாவலின் தழுவல் என்று ஏற்கனவே அவர் சர்ச்சையை கிளப்பியிருந்தாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எதுவும் அவர் எடுக்கவில்லை. படம் மலையாளத்தில் வெளியாகி பிறகு கன்னட, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அவையும் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகின்றன. இதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஏக்தா கபூர், தமிழில் கமல் நடிப்பில் த்ரிஷ்யம் ரீமேக்கிற்கு பூஜை போட்ட உடன் இயக்குனர் ஜீத்து ஜோ‌சப்புக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 

இது குறித்து கருத்து தெரிவித்த ஜீத்து ஜோ‌சப், த்ரிஷ்யம் ஜப்பான் நாவலின் தழுவல் கிடையாது. இந்தப் பிரச்சனை கிளம்பிய பிறகு சஸ்பெக்ட் எக்ஸ் படத்தைப் பார்த்ததாகவும், அதற்கும் த்ரிஷ்யத்துக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல, இப்படியான ஒற்றுமைகள் ஏற்படுவது சகஜம்தான் எனவும் கூறியுள்ளார்.
உண்மையில் நாவலின் தழுவலா த்ரிஷ்யம் படம்?
 
இதற்கு இரண்டின் கதைகளையும் ஒப்பு நோக்க வேண்டும். த்ரிஷ்யத்தில் தாயும் மகளும் இருக்கிறார்கள். கணித பேராசிரியரின் இடத்தில் குடும்பத் தலைவர். அவர் இன்டெலக்சுவல் கிடையாது. நாலாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். அதேநேரம் சினிமா பார்த்துப் பார்த்து லாஜிக்கை உருவாக்குவதில் நிபுணரானவர். நாவலில் கொலையுண்டவனின் உடல் கிடைத்த பிறகே விசாரணை ஆரம்பிக்கிறது. ஆனால் த்ரிஷ்யத்தில் கொலையுண்டவனின் உடல் கிடைப்பதில்லை.

உடல் எங்கே என்பதுதான் இறுதிவரை கேட்கப்படும் கேள்வி. அது எங்கே என்பது கொலை செய்த தாய்க்கும், மகளுக்கும்கூட தெரிவதில்லை. உடலை மறைத்து வைத்த குடும்பத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். படத்தின் இறுதியான அதிர்ச்சி கிளைமாக்சும் இந்த கேள்விக்கான பதில்தான். நாவலுக்கும், த்ரிஷ்யத்துக்கும் உள்ள பிரதான வித்தியாசம் இது. 
இன்னொன்று குடும்ப உறவுகளின் பிணைப்பு. த்ரிஷ்யத்தில் கதையும், உணர்வுகளும் குடும்பத்தை முன்னிறுத்தியே நகர்கிறது. நாவலில் அது இல்லை. இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருந்தாலும் நாவலின் அப்பட்ட காப்பி த்ரிஷ்யம் என்று நிறுவுவது கடினம். ஏக்தா கபூரின் லீகல் நோட்டீஸால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
 

இதுஒருபுறம் இருக்க கூத்தமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்பால் என்பவர் த்ரிஷ்யம் படம் என்னுடைய ஒரு மழைக்காலத்து என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அந்தக் கதைக்கான உரிமை என்னிடம்தான் உள்ளது. அதன் ரீமேக் உரிமையும் எனக்கே சொந்தம்.

என்னுடைய அனுமதியில்லாமல் த்ரிஷ்யத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டுக்குப் போனார். எர்ணாகுளம் நீதிமன்றமும் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் எதுவும் கேட்காமல் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்குக்கு தடை விதித்துள்ளது.
ஏக்தா கபூர், நான் உரிமை பெற்ற ஜப்பான் நாவலின் தழுவல் த்ரிஷ்யம் என்கிறார். கூத்தமங்கலம் சதீஷ்பால் த்ரிஷ்யம் என்னுடைய ஒரு மழைக்காலத்து கதை என்கிறார். இந்தப் பிரச்சனையின் நதிமூலம் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால்,
 
த்ரிஷ்யத்தைவிட சுவாரஸியமான ஒரு த்ரில்லர் கிடைக்கலாம்.