வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2016 (16:33 IST)

தொடர்ச்சியாக படம் இயக்கும் தோல்விப்பட இயக்குனர்

தொடர்ச்சியாக படம் இயக்கும் தோல்விப்பட இயக்குனர்

ஒரு படம் தோல்வியடைந்தால் ஒன்பது வருடங்கள் அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பவர்களே இங்கு அதிகம். தமிழின் இந்த தரித்திர சூழலிலும் சில இயக்குனர்கள் மட்டும் தோல்வி மேல் தோல்வி தந்தும் தொடர்ச்சியாக படம் இயக்குகிறார்கள்.


 


அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் ஏ.எல்.விஜய்.
 
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்து, 2007 -ஆம் ஆண்டு கிரீடம் படத்தின் மூலம் இயக்குனரானார். முதல் படமே, மலையாளத்தில் வெளியான கிரீடம் படத்தின் தழுவல். லோகிததாஸ் திரைக்கதையில், சிபி மலையில் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 1989 -இல் கிரீடம் வெளியானது. மலையாளத்தின் கிளாசிக் படங்களில் அதுவும் ஒன்று. அப்படத்தை தமிழில் அதே பெயரில் 
ஏ.எல்.விஜய் ரீமேக் செய்தார். அஜித்தின் மாபெரும் தோல்விப் படங்களில் கிரீடமும் ஒன்றானது.
 
மாஸ் நடிகரை வைத்து ஒரு தோல்விப் படம் தந்தும், அடுத்த வருடமே விஜய்யின் இரண்டாவது படம், பொய் சொல்லப் போறோம் வெளியானது. இது இந்தியில் வெளியான கோஸ்லா க கோஸ்லா படத்தின் தமிழ் தழுவல். விஜய்யின் குரு ப்ரியதர்ஷன் தயாரித்த இப்படம் சுமாராகவே போனது.
 
2010 -இல் வெளியான மதராசப்பட்டிணம் இன்றுவரை விஜய்யின் ஒரேயொரு நல்ல படமாக எஞ்சியிருக்கிறது. என்றாலும், இப்படமும் டைட்டானிக் உள்ளிட்ட பல படங்களின் தழுவல் என்பது முக்கியமானது.
 
2011 -இல் வெளிவந்த தெய்வத்திருமகள் ஐ யாம் சாம் படத்தின் அப்பட்டமான தழுவல். இந்த விஷயம் ஐ யாம் சாம் படத்தை தயாரித்த நியூ லைன் சினிமாவுக்கு தொரியவர, அவர்கள் வழக்கு தொடரப் போவதாக கூறியதும், நியூ லைன் சினிமாவுக்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்டஈடு அளித்தது, தெய்வத்திருமகளை தயாரித்த யுடிவி நிறுவனம். படம் தோல்வி என்பதுடன் இந்த நஷ்டஈடும் தயாரிப்பாளர்களின் பல கோடிகளை காவு வாங்கியது. 

அடுத்த வருடமே விக்ரமை வைத்து தாண்டவம் படத்தை இயக்கினார். அது உதவி இயக்குனர் ஒருவரது கதை என்று பஞ்சாயத்தாகியது. பிறகு திரைமறைவில் இந்தப் பிரச்சனை செட்டில் செய்யப்பட்டது. படம், அட்டர் பிளாப். 
 
அடுத்த வருடமே தலைவா படத்தை விஜய்யை வைத்து எடுத்தார். ராம் கோபால் வர்மாவின் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் கலவையான இதுவும் மிகப்பெரிய தோல்வியடைந்தது. 
 
2014 -இல் வெளியான ஏ.எல்.விஜய்யின் கனவுப் படம் சைவமும் தோல்வி. 2015 -இல் விக்ரம் பிரபுவின், இது என்ன மாயம். படம் வந்ததும் தெரியவில்லை மாயமானதும் தெரியவில்லை. 
 
அஜித், விக்ரம், விஜய், விக்ரம் பிரபு நால்வருக்குமே அவர்களின் மிகப்பெரிய தோல்விப் படங்களில் ஒன்றாக விஜய் இயக்கிய படம் இருந்துள்ளது. அதிலும், தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்த விக்ரம் பிரபுக்கு விஜய்யின் படம் அட்டர் பிளாப்பாக அமைந்தது. மதராசப்பட்டிணம் தவிர்த்து அனைத்துப் படங்களுமே தோல்வி, அனைத்துப் படங்களுமே காப்பி. இது என்ன மாயம் படமும், 2010 -இல் வெளிவந்த தென் கொரியப் படமான Cyrano Agency படத்தின் அப்பட்டமான தழுவல். 
 
எடுத்தப் படங்களில் ஒன்றை தவிர அனைத்தும் தோல்வி, ஒன்றைத் தவிர அனைத்தும் தழுவல். இருந்தும் ஏ.எல்.விஜய்க்கு படங்கள் கிடைத்தவண்ணம் உள்ளன. இன்றைய தேதியில் மோஸ்ட் வாண்டட் நடிகரான ஜெயம் ரவியையும், பிரபுதேவாவையும் வைத்து அடுத்தப் படத்தை விஜய் இயக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
 
இந்திய சினிமா சரித்திரத்தில் இவ்வளவு தோல்விப் படங்களுக்குப் பிறகும் ஸ்டார் இயக்குனராக வலம்வரும் ஒரே அதிசய பிறவி ஏ.எல்.விஜய் மட்டுமே. தமிழ் சினிமா ஆச்சரியங்களின் கூடாரம்.