வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (17:51 IST)

எல்லைகளை அழிக்கும் இந்திய சினிமாக்கள்

டிசம்பர் 18 -ஆம் தேதி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் சரித்திரப் படம், பஜிராவ் மஸ்தானி வெளியாகிறது.


 


முதல்முறையாக பன்சாலி இயக்கியிருக்கும் படம் ஒன்றை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர். இந்த புதிய முயற்சி பன்சாலியை உணர்ச்சிவசப்படுத்தியது.
 
"இந்த முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன். இந்தியப் படங்கள் எல்லா ரசிகர்களுக்கும் ஏற்றதாக வெளிவருகின்றன. கமலின் தூங்கா வனத்தை தமிழ்ப் படம் என்றோ, கோர்ட் திரைப்படத்தை மராத்தியப் படம் என்றோ,  கூற முடியாது.

அதேபோல் மராத்தி வீரனை மையப்படுத்தி எடுத்திருக்கும் பஜிராவ் மஸ்தானியை ஒரு மொழிக்குள் சுருக்கிவிட முடியாது, படத்தில் வரும் காதல், தேசபக்தி, விசுவாசம் அனைத்தும் உலகளாவியது" என பன்சாலி தெரிவித்துள்ளார்.
 
இந்திப் படங்கள் காலங்காலமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் ஓடுகிறது. சமீபத்தில் வெளிவந்த சல்மான்கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டனர். விரைவில் பஜிராவ் மஸ்தானியும் தமிழில் வெளியாக உள்ளது. ஆக, இந்திப் படங்கள் எப்போதோ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்ற எல்லையை தாண்டிவிட்டன. 
 
ஆனால், தென்னிந்திய மொழிப் படங்கள்தான் இதுவரை எல்லைகளை தாண்டாமல் இருந்தன. இன்று அதனை சாதித்திருக்கிறது பாகுபலி மற்றும் காக்கா முட்டை திரைப்படங்கள்.
 
பாகுபலி கமர்ஷியலாக இந்தியில் ஓடும் என்று இந்திப்படவுலகைச் சேர்ந்த யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். அதுவும் இந்திய அளவில் சரித்திர வசூல் படைக்கும் என நினைத்தேயிருக்க மாட்டார்கள். பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல் தென்னிந்திய சினிமாவை பாராட்டியுள்ளார். பாகுபலி, காக்கா முட்டை என சரியான திசையில் தென்னிந்திய சினிமா செல்கிறது என்று அவர் பாராட்டியுள்ளார்.
 
பாகுபலி வடஇந்தியாவில் பெற்ற வெற்றிதான் பஜிராவ் மஸ்தானியை தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட அவர்களை தூண்டியிருக்கிறது. தூங்கா வனம், கோர்ட் படங்கள் குறித்தெல்லாம் பன்சாலியை பேச வைத்திருக்கிறது.
 
வெற்றிமாறனின் விசாரணை, கார்த்திக் சுப்பாராஜின் இறைவி, ஷங்கரின் எந்திரன் 2, மணிகண்டனின் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் வெளிவரும் போது மொழி எல்லைகள் மேலும் அழியும் என்று நம்பலாம்.