வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (12:47 IST)

கத்தி சர்ச்சை - லைகா நிறுவனர் சுபாஷ்கரண் அல்லிராஜா முதல்முறையாக விளக்கம்

சாதி சங்கங்கள், தமிழ் தேசிய அமைப்புகள், உதிரி அரசியல் கட்சிகள் போன்றவை தங்கள் மீது கவனத்தை திருப்ப அடிக்கடி கையிலெடுக்கும் விஷயம் சினிமா. எந்த சினிமாவை சர்ச்சைக்குள்ளாக்கினால் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதை கணித்து அதற்கு எதிராக கல்லெறிவது இவர்களின் வழக்கம்.
கத்தி படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு நெருக்கமானது என்றுகூறி பிரச்சனையை வளர்த்து வருகின்றனர். 65 அமைப்புகள் கருத்தொற்றுமையுடன் கத்திக்கு எதிராக கச்சைகட்டியுள்ளன. ராஜபக்சேயுடன் உறவு வைத்திருக்கும் நிறுவனங்கள், அரசுகள் அனைத்தையும் எதிர்த்து தனித்த நிலைபாடு எடுக்க தங்களால் முடியாது என்பது இந்த 65 அமைப்புகளுக்கும் தெரியும்.

மீனவர்களை விடுவித்து அவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் ஒப்படைக்காமல் தன்னிடமே வைத்துள்ளது இலங்கை அரசு. அப்படி வைத்திருக்க நான்தான் அறிவுரை சொன்னேன் என்று இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுப்பிரமணியசாமி சொல்கிறார்.
 

லைகாவைவிட இது எவ்வளவு பெரிய பிரச்சனை. இதற்காக இந்த அமைப்புகளால் இந்திய அரசை தள்ளி வைக்க முடிந்ததா? இன்றைய உலகமயமாக்கப்பட்ட நுகர்வு உலகில் இலங்கையுடன் தொடர்பு உள்ள வர்த்தக நிறுவனங்களை, நபர்களை தனிமைப்படுத்தி ஓர் அரசியல் நிலைப்பாடு எடுக்க முடியாது என்பது நடைமுறை யதார்த்தம்.

அது இந்த அமைப்புகளுக்கும் தெரியும். அதேநேரம் தங்களின் இருப்பை நிலைநிறுத்த, கைக்கெட்டிய தூரத்தில் உள்ள - உண்மையில் தமிழர்களுக்கு எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாத - கத்தி போன்ற சினிமா பிரச்சனைகளை கிளறிவிட இவர்கள் தயாராக இருக்கின்றனர். இது சாதி சங்கங்களின், தமிழ் தேசிய அமைப்புகளின், உதிரி அரசியல் கட்சிகளின் இருப்பை நிலைநிறுத்த மேற்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல்.
 
கத்தி பிரச்சனையில் இதுவரை மௌனமாக இருந்த லைகா சுபாஷ்கரண் அல்லிராஜா தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதல்முறையாக பதிலளித்துள்ளார்.
 
1. நான் 1989 -இல் இலங்கையைவிட்டு வெளியேறினேன். என்னுடைய குடும்பத்தார், உறவினர்கள் அனைவரும் ஈரோப்பில்தான் உள்ளனர். இலங்கையில் யாருமில்லை. லைகா ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்றால், லண்டன் மற்றும் பிற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஏன் லைகாவுக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? தமிழகத்தில் மட்டுமே ஏன் எதிர்க்கிறார்கள்?
 
2. ராஜபக்சேயை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஏன் சந்திக்க வேண்டும்? தவிர, தமிழகத்தில் படம் தயாரிப்பது விடுத்து தமிழகத்தில் செய்ய ராஜபக்சேக்கு எதுவுமில்லையா? எல்லாவற்றுக்கும் மேல் கத்தி படத்தை ராஜபக்சே தயாரிக்க வேண்டிய தேவை என்ன? ஈழத்தமிழர்களுக்கு எதிரான எதுவும் கத்தியில் உள்ளதா? அவருக்கு எந்தவிதத்திலும் உதவாத ஒரு படத்தை அவர் ஏன் தயாரிக்க வேண்டும்?
 
3. பல வருடங்களுக்கு முன்னால், முத்தையா முரளீதரனின் ட்ரஸ்டுக்கு நாங்கள் பண உதவி செய்தோம். அந்தப் புகைப்படங்கள் அப்போது அனைத்து மீடியாக்களிலும் வெளியானது. ஆனால், அதன் பிறகான அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அப்படியிருக்க, என்றோ வெளியான புகைப்படத்தை இப்போது வெளியிடுவதில் என்ன நேர்மை இருக்கிறது?
 

4. விஜய் இந்தப் பிரச்சனையில் செய்வதற்கு எதுவும் இல்லை. இது எங்களுடைய நிறுனத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல். அதனால், இது பற்றி பேசும்படி விஜய்யை நான் கேட்கப்போவதில்லை. நான் இதற்கு முன் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தேன். அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அதற்கு காரணம், அந்தப் படத்தின் நடிகரும், இயக்குனரும் இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அளவுக்கு பிரபலம் கிடையாது. 
5. நான் ஒருபோதும் சீமானை சந்தித்ததில்லை, பேசியதில்லை. சீமானுடன் இணைந்து நான் படம் செய்வதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் எங்களை ஆதரிக்கவில்லை, அவர் உண்மையை பேசுகிறார்.
 
6. சூர்யாவை வைத்து படம் செய்ய அவரை நாங்கள் அணுகியதில்லை.
 
7. சட்டத்துக்கு புறம்பான படம் எடுப்பதாக லைகா மீது எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. 
 
8. விடுதலைசிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, நாங்கள் (விடுதலை சிறுத்தைகள்) சர்வதேச நிறுவனங்களை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் என்னுடைய தாய். எந்த மகனும் தாய்க்கு துரோகம் செய்ய மாட்டான். அதை புரிந்து கொண்டால் போதும்.
 
- இவ்வாறு சுபாஷ்கரண் அல்லிராஜா விளக்கமளித்துள்ளார்.
 
கத்தி படத்தை தடை செய்யக் கூடாது என்பதே நம்முடைய நிலைப்பாடு. அதேநேரம் சுபாஷ்கரண் சொல்லியிருப்பதில் இரண்டாவது விஷயத்தை அப்படியே ஏற்பதற்கும் இல்லை.
 
கத்தியில் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துகள் இல்லை. அப்படி ஒரு படத்தை தயாரிப்பதால் ராஜபக்சேக்கு என்ன லாபம் இருக்கிறது என்று கேட்கிறார் சுபாஷ்கரண். 
 
லாபம் இருக்கிறது.
 
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பாக தமிழகத்திலேயே வர்த்தகரீதியாக காலூன்ற ராஜபக்சே நினைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நினைத்தால், ஈழத்தமிழருக்கு எதிரான படத்தைதான் தயாரிக்க வேண்டும் என்றில்லை. ராஜபக்சேயின் ஆள்களும், பினாமிகளும் வர்த்தகரீதியாக தமிழகத்தில் காலூன்றினாலே அது ராஜபக்சேக்கு கிடைத்த வெற்றிதான். ராஜபக்சேயின் எந்த ரகசிய திட்டத்துக்கும் தான் உடைந்தையில்லை என்று நிரூபிக்க வேண்டியதுதான் சுபாஷ்கரணின் கடமை. அதைவிடுத்து, கத்தியை ராஜபக்சே தயாரித்தால் அதனால் அவருக்கு என்ன லாபம் என்று கேள்வி கேட்டால், 
 
லாபம் கண்டிப்பாக உண்டு என்பதுதான் பதில். அதற்கு சுபாஷ்கரண் அல்லிராஜா என்ற தமிழர் உடந்தையாக இருக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும், எதிர்பார்ப்பும்.