வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : ஞாயிறு, 7 செப்டம்பர் 2014 (17:28 IST)

பார்க்காமலே தேர்வு செய்தாரா? - பாரதிராஜா மீது மலையாள படவுலகு சரமாரி குற்றச்சாட்டு

2013 -ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருது தேர்வுக்குழு தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலான தேர்வுக்குழு விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. விருதுப் பட்டியல் வெளியானதுமே பிரச்சனைகள் ஆரம்பமாயின. 
பாரதிராஜா தலைமையிலான தேர்வுக்குழு 2013 - ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ஃபகத் பாசிலையும், லாலையும் தேர்வு செய்தது. சிறந்த காமெடி நடிகராக தேர்வு செய்யப்பட்டவர் சுராஜ். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், பேரறியாதவர் படத்துக்காக சில தினங்கள் முன்புதான் சுராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். தேசிய அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்த ஒருவரை, சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு ஏன் தேர்வு செய்தனர்? சுராஜ் என்ன இருந்தாலும் ஒரு காமெடி நடிகன் மட்டும்தான் என்று தேர்வுக்குழுவினர் நினைக்கிறார்களா? அவருக்கு இந்த விருதை தராமலே இருந்திருக்கலாம் என்று பேரறியாதவர் படத்தை இயக்கிய டாக்டர் பைஜு சர்ச்சையை கிளப்பினார்.
 
சுராஜ் அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர். அவர் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களுக்காகதான் அவரை சிறந்த காமெடி நடிகராக தேர்வு செய்திருந்தனர். பேரறியாதவர் படத்துக்காக அல்ல.
 

இந்த விஷயத்தை சர்ச்சையாக்க பல தொலைக்காட்சிகள் முயன்றன. சுராஜிடம் நேரடியாக இன்டர்வியூ நடத்தினர். இது உங்களை காயப்படுத்தத்தானே என்று மீண்டும் மீண்டும் கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஆனால் சுராஜ், அந்த கேள்விகளுக்கு நேரடியான பதிலை தரவில்லை. ஒரே வருடத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த காமெடி நடிகருக்கான மாநில விருதும் கிடைத்தது இரணட்டிப்பு இனிப்பு கிடைத்த மாதிரி. என்னால் இரண்டு விதமாகவும் நடிக்க முடியும் என்பதை இந்த விருதுகள் நிரூபிக்கின்றன என்றார்.
சுராஜின் இந்த பதிலால் சர்ச்சையை தொலைக்காட்சிகளால் நீட்டிக்க முடியவில்லை. மேலும், லால் போன்றவர்கள் டாக்டர் பைஜுவின் சர்ச்சைக்குரிய பேச்சை, அவர் எப்போதும் அப்படிதான் என்று நிராகரித்தனர்.
 
ஆனால் பிரச்சனை அத்துடன் முடியவில்லை. பாரதிராஜா தேர்வுக்குழுவுக்கு வந்த படங்களில் சிலவற்றை மட்டுமே பார்த்தார் என்ற புதுக்குற்றச்சாட்டுடன் சிலர் கிளம்பியுள்ளனர். 
 

விருதுப் போட்டிக்கு வந்த மொத்த படங்கள் 85. இந்தப் படங்கள் அனைத்தையும் பாரதிராஜா பார்த்தாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. இயக்குனர் சஜின் பாபு தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பாரதிராஜா எத்தனை தினங்கள் கேரளாவில் தங்கியிருந்தார் என்ற விவரத்தை கேட்டுப் பெற்றுள்ளார். அதில், ஏழு தினங்கள் பாரதிராஜா கேரளாவில் இருந்ததாக தகவல் தரப்பட்டுள்ளது. ஏழு தினங்களில் 85 படங்களைப் பார்க்க வழியில்லை. குறைந்தது 15 தினங்களாவது வேண்டும். இதனை வைத்து பாரதிராஜா மீதான குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபிக்க துடிக்கின்றனர். 
ஆனால், பாரதிராஜா தரப்போ, ஏழு தினங்களுக்குப் பிறகு அவசர வேலையாக பாரதிராஜா சென்னை திரும்பியதாகவும், வேலை முடிந்த பின் கேரளா சென்று மீதி படங்களைப் பார்த்ததாகவும் கூறுகிறது.
 
தனுஷ் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்ற போது அவருடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பகிர்ந்து கொண்ட நடிகர் சலீம் குமார் தனது, மூணாம் நாள் ஞாறாழ்ச்சா படத்தை பாரதிராஜா பார்க்கவே இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அதற்கான ஆதாரங்களை திரட்டியிருப்பவர், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்குகள் என்னவாகும் என்பது தெரியாது. ஆனால் கேரள மாநில அரசின் திரைப்பட விருது தேர்வுக்குழு தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டது அங்குள்ள திரைக்கலைஞர்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அது சகஜம்தான். தமிழக அரசின் திரைப்பட தேர்வுக்குழு தலைவராக வேறு மாநிலத்தவரை நியமித்தால், நம் தமிழ்ப் படங்களை தேர்வு செய்ய ஒரு தமிழன் கிடைக்கவில்லையா என்று இப்போது சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவே கேட்டிருப்பார். 
 
ஆனால், இப்போதைய பிரச்சனை, திட்டமிட்டு பாரதிராஜாவை கட்டம் கட்டுகிறார்களா இல்லை அவர்கள் கூறுவது போல் சில படங்களை மட்டும் பார்த்து விருதுக்குரிய படங்களையும், கலைஞர்களையும் பாரதிராஜா தேர்வு செய்தாரா என்பதுதான். 
 
தேர்வுக்குழுவில் பாரதிராஜாவைத் தவிர ஆறு பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் மலையாளிகள். அந்த ஆறு பேரும் பாரதிராஜாவுக்கு உடந்தையாக இருக்க வாய்ப்பில்லை. அதாவது சில படங்களை மட்டும் பார்த்து விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய மற்ற ஆறு பேரும் சம்மதித்திருக்க மாட்டார்கள். பாரதிராஜா மீது குற்றம்சாட்டுகிறவர்கள் ஆறு மலையாளிகள் குறித்து வாயே திறக்கவில்லை.
 
வழக்கு விசாரணைக்குப் பிறகுதான் நடந்தது என்ன என்பது தெரியவரும்.