வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 3 செப்டம்பர் 2014 (13:43 IST)

படத்தில் இருப்பது கமல் அல்ல, சுயம்புலிங்கம்

த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தின் தொடக்கவிழா படங்கள் வெளியான போதே கமல் சர்ச்சையில் சிக்கினார். தன்னை நாத்திகராக சொல்லிக் கொள்ளும் அவர், கையில் கிளாப் போர்டுடன் சாமி படங்களுக்கு முன் நின்றிருக்கும் புகைப்படம் வெளியாகி கமலின் நாத்திகத்தை கேள்விக்குள்படுத்தியது. இப்போது நான்குநேரி வானமாமலை ஆலயத்தின் ஜீயரின் முன்னால் கமல் நெற்றியில் விபூதியுடன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி, மீண்டும் அவரது நாத்திகத்தை கேள்விக்கும், கேலிக்கும் உட்படுத்தியுள்ளது.
பலர் பலவிதங்களில் இதனை பேசினாலும் அந்த உரையாடலின் அடிப்படையாக இருப்பது, ஆன்மீக விஷயத்தில் கமல் இரட்டை வேடம் போடுகிறாரா என்பதுதான்.
 
சினிமா என்பது சென்டிமெண்ட்களின் உலகம். இங்கு நாத்திகராக இருந்தாலும் பூஜையின் போது கற்பூரத்தை உங்கள் முன் நீட்டும் போது தொட்டு கும்பிடாமல் விட்டால், அந்தப் படத்தின் முதல் எதிரியாக நீங்கள் மாறிவிடுவீர்கள். உதவி இயக்குனர் போன்று ஏதாவது ஒரு வகையில் அந்தப் படத்துடன் நீங்கள் தொடர்புள்ளவர் என்றால் உடனடியாக அந்தப் படத்திலிருந்து நீக்கப்படுவீர்கள்.
இதற்கு மாறாக பூஜையே போடாமல் எந்த சென்டிமெண்டுக்கும் ஆளாகாமல் படமெடுப்பவர் மணிரத்னம். அவரே தயாரிப்பாளராகவும் இருப்பதால் பூஜையும் போடுவதில்லை, பூசணிக்காயும் உடைப்பதில்லை. கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் பூஜை, பூசணிக்காய் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதில்லை.
 

பாபநாசம் வேறொருவர் தயாரிக்கிற படம். அவர்களின் நம்பிக்கையின்படி பூஜை போடும்போது படத்தின் நாயகன் என்ற முறையில் அதில் கலந்து கொள்வதை தவறாக கருத முடியாது. அதனை வைத்து அவர் ஆத்திகராகிவிட்டார் என்பது அபத்தம்.
 
நான்குநேரி வானமாமலை விஷயம் குறித்து ஜெயமோகன் தனது இணையத்தில் எழுதியுள்ளார். பாபநாசத்துக்கு அவர் வசனம் எழுதுவதால் படப்பிடிப்பில் நடந்த விஷயங்களை அவர் நேரடியாக பார்த்து எழுதியிருக்கிறார்.
நான்குநேரி வானமாமலை ஆலயம் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை. வானமாமலை ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் சில இடங்கள் மட்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் படப்பிடிப்பு நடத்த ஜீயரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவரும் அனுமதி தந்துள்ளார். அதற்காக அவரை சந்தித்து கமல் நன்றி சொன்ன போது எடுத்த புகைப்படங்கள்தான் மீடியாவில் வெளியானவை. 
 
த்ரிஷ்யம் படத்தின் நாயகன் கிறிஸ்தவர். பாபநாசத்தில் அதனை இந்துவாக மாற்றியுள்ளனர். நாயகனின் - அதாவது கமலின் கதாபாத்திர பெயர் சுயம்புலிங்கம். நேட்டிவிட்டிக்காக இந்த மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கமல் - அதாவது சுயம்புலிங்கம் நெற்றியில் விபூதியுடன் தோன்றுகிறார். படப்பிடிப்பின் போது நெற்றியில் பூசிக்கொண்ட விபூதியுடன் ஜீயரை சந்தித்ததைதான் கமல் ஆன்மீகவாதியாகிவிட்டார் என்று எழுதுகின்றனர். 
 
பாபநாசம் படத்தின் நாயகன் நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். தனது குடும்பத்துக்கு ஒரு இக்கட்டு வருகையில் தனது அனுபவத்தின் மூலம் கிடைத்த பட்டறிவை பயன்படுத்தி குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதாவது தனது சுயமான அறிவுடன். அதனால்தான் படத்தில் கமலின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக சுயம்புலிங்கம் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.
 
இந்த விவரங்கள் தெரியாமலே, கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கும் படத்தை வைத்து இணையத்தில் சர்ச்சையை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். 
 
கேட்க செவியுள்ளவர்கள் கேட்கக்கடவது.