வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By -ஜேபிஆர்
Last Updated : புதன், 9 ஜூலை 2014 (11:30 IST)

2014 ஆம் ஆண்டில் திரைப்படங்கள் - அரையாண்டு அலசல்

2014 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜுன் 30 வரை) 103 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் 15 திரைப்படங்கள் அதிகம். எண்ணிக்கையைப் போல் தரத்திலும் இந்த வருடம் தமிழ் சினிமா முன்னோக்கி நகர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு உவப்பான பதிலை அளிப்பது சிரமம்.


 
மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெயருடன் இந்த வருடம் கோச்சடையான் வெளியானது. தொழில்நுட்பம் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்காது எனினும் புதிய தொழில்நுட்பத்துக்கான இந்திய வெள்ளோட்டமாக கோச்சடையான் அமைந்தது ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. படங்களின் உள்ளடக்கத்தில் குறிப்பிடும்படியான எந்த முயற்சியும் இந்த வருடம் முன்னெடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

சென்ற வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பரதேசி, சூது கவ்வும், நேரம் மற்றும் ஹரிதாஸ் வெளியாயின. சூது கவ்வும், நேரம் இரண்டும் நேர்கோட்டு கதை சொல்லலிலிருந்து விலகி, வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்களை கவர்ந்தன. இரண்டுமே தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவமாக அமைந்தது. அதேபோலொரு அனுபவத்தை தர இந்த வருட திரைப்படங்கள் தவறிவிட்டன. இவ்விரு படங்களின் தொடர்ச்சியாகவே முண்டாசுப்பட்டியையும், யாமிருக்க பயமேயையும் கூற முடியும். குறிப்பிடத்தகுந்த இன்னொரு படம் விஜய் மில்டனின் கோலிசோடா. துப்பறியும்வகை திரைப்படங்கள் எப்போதுமே சுவாரஸியமானவை. தமிழ் சினிமா அதிகம் கண்டு கொள்ளாத இந்தவகைமையில் வெளியான தெகிடி பரவலான வரவேற்பை பெற்றது. இவை தவிர குறிப்பிடத்தகுந்த வேறு படங்கள் இந்த அரையாண்டில் வெளியாகவில்லை.


 
வசூல்ரீதியாகவும் இந்த வருடம் பலகீனமாகவே உள்ளது. சென்ற வருடம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, விஸ்வரூபம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், உதயம், சூது கவ்வும், குட்டிப்புலி, தீயா வேலை செய்யணும் குமாரு என பல படங்கள் முதல் அரையாண்டில் லாபம் சம்பாதித்தன. இந்த வருடம் மஞ்சப்பை, கோலிசோடா, யாமிருக்க பயமே என எண்ணிக்கை குறைவு. தெகிடி, குக்கூ, வாயை மூடி பேசவும் மூன்றும் பார்டரில் பாஸான படங்கள்.


கோச்சடையான், ஜில்லா, வீரம் படங்களின் வசூல் குறித்து திட்டவட்டமாக கூற முடியாது என்பதே யதார்த்தம். ஜில்லா 100 கோடியை தாண்டி வசூல் செய்ததாக படத்தின் இயக்குனர் நேசன் பேட்டிளித்தார். அதேபோல் வீரம் சில தினங்களில் எண்பது கோடிகள் சம்பாதித்ததாக கூறப்பட்டது. இந்த லாபக் கதைகள் மீடியாவில் பேசப்பட்ட சில தினங்களில், சினிமா விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், சமீபத்தில் வெளியான பிரமாண்டப் படங்களால் தயாரிப்பாளர்களுக்கு பைசா லாபமில்லை என ஜில்லா, வீரம் இரண்டையும் பெயர் குறிப்பிடாமல் தாக்கினார். இதில் எது உண்மை?


 
இதற்கு திட்டவட்டமான பதிலை கூற முடியாது. இரு தரப்பிலும் உண்மைகள் இருக்க வாய்ப்புள்ளது. 
 
ரஜினி, விஜய், அஜீத் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களுக்கு திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை மட்டும் நம்பி லட்சங்கள் செலவளிப்பதில்லை. உதாரணமாக கோச்சடையான் திரைப்படத்தை பல திரையரங்குகள் 75 -25 என்ற சதவீத அடிப்படையில் வாங்கின. டிக்கெட் கட்டணத்தில் 75 சதவீதம் தயாரிப்பாளருக்கு, 25 சதவீதம் திரையரங்குக்கு. இது முதல்வார சதவீதம். இரண்டாவது வாரத்தில் இது 60 - 40 என்று மாறும்.

டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் ஒரு டிக்கெட்டுக்கு தயாரிப்பாளருக்கு 75 ரூபாயும், திரையரங்குக்கு 25 ரூபாயும் கிடைக்கும். இரண்டாவது வாரத்தில் 60 ரூபாயும், 40 ரூபாயும். ஆனால் திரையரங்குகள் ரஜினி, விஜய், அஜீத் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை கணிசமாக உயர்த்திவிடும். ஒரு டிக்கெட் 250 ரூபாய்வரை கவுண்டரில் விற்கப்படும். ஆனால் தயாரிப்பாளருக்கு கிடைப்பது அதே 75 ரூபாய்தான். திரையரங்குகளுக்கு 175 ரூபாய். இந்த டிக்கெட் கட்டண உயர்வு மாஸ் நடிகர்களின் படங்களுக்கே செல்லுபடியாகும். அதனால்தான் முன்னணி நடிகர்களின் படங்களை கட்டுப்படியாகாத விலையில் வாங்க திரையரங்குகள் ரிஸ்க் எடுக்கின்றன. 


 
மேலும், கணக்குப்படி திரையரங்குகளுக்கு வரும் வருவாய் டிக்கெட்டுக்கு 25 ரூபாய். ஆனால் கணக்கிற்கு வெளியே டிக்கெட்டுக்கு கூடுதலாக 150 ரூபாய்வரை அவை சம்பாதித்து விடுகின்றன. அதனால்தான் மாஸ் நடிகர்களின் படங்கள் அனைவருக்கும் லாபம் சம்பாதித்து தந்ததா இல்லையா என்று கணிக்க முடிவதில்லை. தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை, ஆடியோ ரைட்ஸ், வெளிநாட்டு திரையரங்கு உரிமை, ரீமேக் உரிமை என பலவழிகளில் கணிசமான கோடிகளை சம்பாதித்து விடுகின்றனர். திரையரங்கு வசூலை மட்டும் வைத்து அவர்களின் லாபத்தையும் கணக்கிட இயலாது.
 
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் கோச்சடையான், ஜில்லா, வீரம் படங்களின் வசூலையும், அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்ததா என்பதையும் அறுதியிட்டு கூற முடியாது.

மூன்று முக்கிய காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்தப் படங்கள் இந்த வருடம் வெளியாயின. வடிவேலின் தெனாலிராமனுக்கு - மூன்றுவருட வனவாசத்துக்குப் பின் வெளியானதால் - மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதனை நிறைவேற்ற படம் தவறிவிட்டது. சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விவேக்கின் நான்தான் பாலா மோசமான தோல்வியை தழுவியது. 


 
நகைச்சுவை நடிகர்கள் காமெடிக்கு மேலாக எதுவோ சாதித்தாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலே இருப்பதே காமெடிதான் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். சென்ற வருடம் வெற்றி பெற்ற கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தீயா வேலை செய்யணும் குமாரு என அனைத்துமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட்டவை. அவைகளின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்ததும் நகைச்சுவைதான். 
 
தெனாலிராமனில் வடிவேலு கதாபாத்திரத்தை மேதமையாக காட்ட முயன்றதும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஆக்ஷன் ஹீரோவாக முயன்றதும், விவேக் குணச்சித்திர கதைநாயகனாக பரிமாணம் கொள்ள நினைத்ததும் அந்தப் படங்களின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன.


இந்த வருடம் ஏழு முக்கிய தழுவல் படங்கள் தமிழில் வெளியாயின. ஏழுமே தோல்வி. ஆஷிக் அபுவின் 22 பீமேல் கோட்டயம் படத்தை ஸ்ரீப்ரியா 22 மாலினி பாளையங்கோட்டை என்ற பெயரில் எடுத்தார். ஆஷின் அபுவின் இன்னொரு படமான சால்ட் அண்ட் பெப்பரை பிரகாஷ்ராஜ் உன் சமையலறையில் என்ற பெயரில் தயாரித்து இயக்கி நடித்தார். இரண்டுமே மலையாள ஒரிஜினல் பெற்ற பாராட்டையும் வசூலையும் பெற தவறின. தமிழில் அப்படங்களை இயக்கிய இருவரும் - ஸ்ரீப்ரியா, பிரகாஷ்ராஜ் - அந்தப் படங்களின் ஆன்மாவை கண்டறிய தவறியதே தோல்விக்கு காரணம்.



கோட்டயம் கிறிஸ்தவரான டெசாவின் கதாபாத்திரத்தை ஆஷிக் அபு இயல்பாக உருவாக்கி எடுத்த லாவகமும், பின்புலமும் பாளையங்கோட்டை மாலினிக்கு இல்லை. அதேபோல் சால்ட் அண்ட் பெப்பரின் ஜீவனான வேலைக்காரன் கதாபாத்திரத்தை (பாபுராஜ் நடித்தது) தம்பி ராமையா தனது மிகை நடிப்பால் முடிந்தளவு நாசமாக்கியிருந்தார். அவருடன் வரும் குமரவேலின் கதாபாத்திரம் இம்சையான இடைச்செருகல். சால்ட் அண்ட் பெப்பரின் நாயகன் ஆதிவாசி ஒருவரை தன்னுடன் வைத்துக் கொள்ளும் காட்சிகள் எவ்வளவு இயல்பாக படத்தில் பொருந்தியதோ அதே அளவுக்கு அது தமிழில் பொருந்தாமல் போனது. ஏன் என்று காரணம் அறிய இரண்டு படங்களையும் பார்க்க வேண்டியதில்லை. இரண்டு படங்களிலும் ஆதிவாசியாக நடித்தவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே போதுமானது.
 
எந்த கதை நம் மண்ணிற்கும், நம் ரசிகர்களுக்கும் பொருந்தி வரும், கதாபாத்திரங்களுக்கு எந்த மாதிரியான நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பனவற்றில் கோட்டைவிட்டதால் மற்ற ரீமேக் படங்களும் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஆஹா கல்யாணம், புலிவால், நீ எங்கே என் அன்பே, அதிதி - தோல்வியை தழுவின. இயல்பாக நடிக்கும் குணச்சித்திர நடிகர்களுக்கான பஞ்சம் தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடுவதை மலையாளப் படங்களின் ரீமேக்குகள் வெளிச்சமிட்டு காட்டின.
 
அரையாண்டு படங்களை தொகுத்துப் பார்க்கையில் அறுசுவை உண்டி மட்டுமே அருந்துவோம் என்று அடம்பிடிக்கும் குணம் தமிழ் ரசிகர்களுக்கு இல்லை என்பது திண்ணம். கூழோ கஞ்சியோ (அஜினமோட்டோ போட்டாவது) கொஞ்சம் சுவைக்கிற மாதிரி தந்தாலே ஆஹா ஓஹோவென கொண்டாடிவிடுவார்கள். மஞ்சப்பை, யாமிருக்க பயமே எல்லாம் ஓடியது தரத்தினால் என்பதைவிட ரசிகர்களின் தாராளத்தினால் என்பதே சரி.