செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (12:17 IST)

சினிமா ஹீரோக்களின் போலி சமூக அக்கறை - வாசகர்களின் எதிர்வினையும் முட்டாள் ரைட்டர்களும்

நமது தளத்தில் நேற்று வெளியான, சினிமா ஹீரோக்களின் போலி சமூக அக்கறை - கத்தியை முன் வைத்து கட்டுரைக்கு சிலர் எதிர்வினை புரிந்துள்ளனர். இந்த எதிர்வினைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது நமது கடமை. எதிர்வினை புரிந்தவர்களின் கேள்வியை, விளக்கத்தை முன் வைத்து பதில் சொல்வதே சரியாகும்.
 
1. காசுவாங்கிக் கொண்டு கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த விஜய்க்கு விவசாயிகள் பிரச்சனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறதென்று பரவலாக ஸ்டேடசுகளை பார்க்க முடிகிறது. அவரு சொல்லித்தான் கொக்கொ கோலா வாங்கி குடிச்சீங்கன்னா, இன்னக்கி அவரு விவசாயம் பார்க்க சொல்றாருன்னா போயி வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நிலத்துல இறங்கி விவசாயம் பாக்க வேண்டியது தானே. விஜய் சொன்னால்தான் கேட்பீர்கள் என்றால், தமிழன் படத்தில் அவர் சட்டம் படிக்க சொன்னார், நீங்கள் சட்டம் படித்தீர்களா இல்லை, கில்லி படத்தில் அவர் கபடி விளையாண்டார் என்பதால் கிரிக்கெட்டை விட்டுவிட்டு கபடியை வளர்த்தீர்களா?
இது ஒரு வாசகரின் எதிர்வினை. இந்த வாசகர் இங்க சொல்லிருப்பதைதான் நாங்களும் கட்டுரையில் சொல்லியிருக்கோம். 
 
சினிமாவில் இப்படி தொட்டுக்க ஊறுகாயாக சொல்லப்படும் எந்தப் பிரச்சனையும் ஜனங்களை விழிப்படையச் செய்து அந்தப் பிரச்சனைக்கு எதிராக போராட வைத்ததாக சரித்திரம் இல்லை.
 
நீங்க ஆறேழு வரிகளில் சொன்னதை நாங்க ரெண்டு வரியில சொல்லியிருக்கோம். அப்புறம், விஜய், முருகதாஸ் எல்லாம் மக்கள் தலைவர்கள் இல்லை. அவர்கள் காசு தேடும் வியாபாரிகள்  என்றொரு கமெண்டையும் அவர் சேர்த்துள்ளார். கரெக்ட். திரையில் மக்கள் பிரச்சனைக்காக போராடுவது போல் நடிக்கும் பலரும் நிஜத்தில் அந்தப் பிரச்சனைக்கு காரணமானவர்களின் கைப்புள்ளையாகதான் இருக்கிறார்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேnம்.
 
இந்த வாசகரின் கோபம் விஜய், முருகதாஸ் மாதிரியான வியாபாரிகளை விமர்சிக்கும் நீங்கள் இதற்கு காரணமான அரசியல்வாதிகளை, கார்ப்பரேட்களை கண்டு கொள்வதில்லையே என்பது. யார் சார் அப்படி சொன்னது. அரசியல்வாதிகளை துணிச்சலுடன் விமர்சிக்கும் ஒருசில தளங்களில் வெப்துனியாவும் ஒன்று. முந்தைய கட்டுரைகளை வாசித்தாலே உங்களுக்கு அது புரியும்.
 
நடிகர்கள் சொல்லி சட்டம் படிக்காதவர்கள், கபடி விளையாடாதவர்கள் அவர் சொல்லாமலே கட் அவுட் வைப்பதும் பால், பீர் அபிஷேகம் செய்வதும் ஏன்? 2016 -இல் ஜார்ஜ் கோட்டை, 2026 -இல் டெல்லி கோட்டை என்று போஸ்டர் ஒட்டுவது ஏன்? யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சொல்லும் வியாபாரிகள் எடுக்கும் படங்கள் நடிகர்களை நடிகர்களாக இல்லாமல் சூப்பர் ஹீரோக்களாக காட்டுவதன் விளைவு இது. திரையில் பார்க்கும் நடிகரின் சூப்பர் ஹீரோ பிம்பம்தான் அவரது நிஜமான ஆளுமை என்று நினைக்க ஆரம்பிப்பதன் தீய விளைவுதான் நடிகனை நாடாள அழைப்பதும், கோஷமிடுவதும்.

இது சரியா? திரையில் நீங்கள் பார்க்கும் சூப்பர் ஹீரோ பிம்பத்துக்கும் அந்த நடிகரின் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை சொல்வதன் வழியாக மட்டுமே, அந்த சூப்பர் ஹீரோ பிம்பத்தை கலைப்பதன் வழியாக மட்டுமே இந்த ஆபத்தை எதிர்கொள்ள முடியும். ஒரு விமர்சகன் தனக்கு சம்பந்தமே இல்லாத நடிகனை விமர்சிக்க வேண்டிய சூழலுக்கு இதன் காரணமாகவே தள்ளப்படுகிறான்.

இன்னொரு வாசகர் கொஞ்சம் கடுமையான மொழியிலேயே எதிர்வினை புரிந்துள்ளார். அதன் சாரம்சம் இதுதான். விஜய் கோக் விளம்பரத்தில் நடித்ததும், கத்தியில் நடித்ததும் வெறும் நடிப்புதான். ஒரு படத்தில் திருடனாக நடித்துவிட்டு இன்னொரு படத்தில் போலீசாக நடிக்கக் கூடாதா... முட்டாள் ஆர்டிகிள் ரைட்டரே என்று கேட்டிருக்கிறார்.
 
விஜய்யுடையது வெறும் நடிப்பு, அவர் வெறும் நடிகர் என்று சொல்லிவிட்டுப் போனால் நமக்கென்ன வந்தது ஐயா. ஆனால், ரசிகர்களும், மீடியாக்களும் அவரை வெறும் நடிகர் என்று மட்டுமேதான் பார்க்கிறார்களா? மேலே நாம் சொன்ன விளக்கத்துக்குப் பிறகும் அவரது படங்கள் அவரை வெறும் நடிகராக மட்டுமே உருவாக்கவில்லை என்பதை மறுக்க இயலுமா?
திருடனோ, போலீசோ அந்த கதாபாத்திரம் எந்த வகையான பிம்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் முக்கியம். இங்கே இரண்டுவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்கள். சிவாஜி கணேசன் அப்படிதான் நடித்தார். திருடன் என்றால் அவர் திருடனாகதான் இருப்பார். போலீஸ் என்றால் போலீஸ்.

ஆனால் இன்னொருவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மாதிரி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்களைக் குறித்த சூப்பர் ஹீரோ இமேஜைதான் அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தும். திருடனாக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும். நல்லவனாக இருக்கும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும், எதிரிகளை அழிக்கும், மக்களையும் நாட்டையும் காப்பாற்றும். 
 
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் இந்த சூப்பர் ஹீரோ இமேiஜ தாண்டி ஏதாவது கதாபாத்திரம் செய்திருக்கிறார்களா? திருடனாக இருந்தாலும் போலீசாக இருந்தாலும்? சிவாஜி கணேசன் மாதிரியான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவரை நடிகராக மட்டுமே பார்த்தனர். கட் அவுட் கலாச்சாரத்தைத் தாண்டி அரசியலுக்கு வந்த போது அவர் தோற்றுப் போக அதுதான் முக்கிய காரணம்.

ஆனால் இரண்டாவது வகை நடிகர்களை நிஜத்திலும் சூப்பர் ஹீரோவாக பார்க்கும்படி அவர்கள் நடிக்கும் படங்கள், கதாபாத்திரங்கள் பயிற்றுவிக்கின்றன. தலைவா வா தலைமை ஏற்க வா என்ற கோஷம் இங்கிருந்துதான் தோன்றுகிறது. திரைக்கு வெளியே அவர்களின் திரை பிம்பம் தலைக்காட்டும் போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை, போலித்தனத்தை முட்டாள் ரைட்டர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதில் தனிப்பட்ட துவேஷம் எங்கிருந்து ஐயா வந்தது? 
 
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் திரை பிம்பம் வெறும் ஜம்பம். அதை தியேட்டரோடு விட்டு விட வேண்டும் என்ற புரிதல் பார்வையாளர்களுக்கு வரும்போது முட்டாள் ரைட்டர்களும் காணாமல் போய் விடுவார்கள். ஆக, முட்டாள் ரைட்டர்களை ஒழிக்கும் துருப்புச் சீட்டு ரசிகர்களின், பார்வையாளர்களின் கையில்தான் இருக்கிறது.