வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜேபிஆர்
Last Updated : சனி, 19 ஜூலை 2014 (11:01 IST)

சினி பாப்கார்ன்: தியேட்டர் கொள்ளை, தைரியமாகச் சொன்ன டி.ஆர்.

நீங்க நாத்திகரா இல்லை ஆத்திகரா?
 
பாலாவின் தாரை தப்பட்டை மற்றும் அவரது பி ஸ்டுடியோ அதர்வாவை வைத்து தயாரிக்கும் படங்களின் பூஜை சமீபத்தில் நடந்தது. பரிவட்டம்கட்டி கடவுளர்களின் படங்களின் முன்னால் பயபக்தியுடன் காணப்பட்டார் பாலா. பாலாவை நாத்திகர் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்த காட்சி அது. பேட்டியில் மட்டுமின்றி சினிமா விழாவிலும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பாலா பேசியிருக்கிறார். மைனா படத்தின் நிகழ்ச்சியில் பிரபுசாலமனின் வெற்றிக்கு கடவுளை காரணம் காட்ட, கடவுள் அல்ல திறமைதான் காரணம் என்றார் பாலா. அதில் தனது நாத்திகக் கொள்கையை கொஞ்சம் அழுத்தமாகவே அவர் வெளிப்படுத்தினார். அப்படிப்பட்டவர் சொந்தப் படத்தை பூஜை புனஸ்காரங்களுடன் தொடங்கியது பயமா இல்லை பக்தியா?
கமலும் நாத்திகர்தான். த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் அவர் அப்படத்தின் ஸ்கிரிப்டை ஜீத்து ஜோசப்பிடம் கடவுள் படங்களின் முன்னால் நின்றுதான் வழங்கினார். அப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார். சொந்தப் படத்துக்கு பூஜை எதுவும் போடாத கமல் இந்தப் படத்தின் பூஜையில் கலந்து கொண்டதுக்கு காரணம் இதன் தயாரிப்பாளர் கமல் கிடையாது வேறொருவர். அவரது நம்பிக்கைக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்றுதான் கலந்து கொண்டாராம்.

தியேட்டர் கொள்ளை, தைரியமாகச் சொன்ன டி.ஆர்.
 
டி.ராஜேந்தர் மைக்கைப் பிடித்தால் இரண்டு நிமிடங்கள் வாயால் ட்ரம்ஸ் வாசிக்காமல் விட மாட்டார். உண்மைகளை பட் பட்டென்று அவர் போட்டுடைக்கும் போது அரங்கே கரவொலியில் நிரம்பும். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அதே மாறாத எனர்ஜியுடன் இந்த மனிதரால் மட்டும் எப்படி பேச முடிகிறது? டி.ஆர். ஒவ்வொருமுறை மேடையேறும் போதும் யோசிக்க வைக்கிற கேள்வி இது.
டி.ஆர். வந்தால் விழா களைகட்டும் என்பதற்காகவே அவரை அழைப்பவர்கள் இருக்கிறார்கள். தகடு தகடு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டவர் வழக்கம் போல வாயால் ட்ரம்ஸ் வாசித்து முடித்து, திருட்டு டிவிடி விற்பவர்களை ஒருபிடிபிடித்தார். காப்பி ரைட் குறித்து லோக்கல் போலீஸிடம் பேசினால் அவர்களுக்கு அதுபற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. அரசாங்கம் டிவிடியை ஒழிக்கும்ங்கிறது எல்லாம் நடக்காத காரியம் என்று அவர் சொன்னதெல்லாம் சத்தியத்தில் கடைந்தெடுத்தவை.
 
மக்கள் திரையரங்குக்கு வராததுக்கு காரணம் தியேட்டர்கார்களின் டிக்கெட் கொள்ளைதான் என்று தைரியமாக பேசியதற்கு ஒரு சபாஷ் போடலாம். "ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டால்ல ஒரு டிக்கெட் அம்பது ரூபாய். அங்க வர்ற கூட்டத்தை போய் பாரு" என்று அவர் சொன்னது சத்தியமான வார்த்தைகள். சினிமா அழிவதற்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லும் ஜாம்பவான்களைவிட தௌpவாக இருந்தது டி.ஆரின் பேச்சு. தயாரிப்பாளர்களின், நடிகர்களின் பேராசைதான் அனைத்துக்கும் காரணம் என்றது இன்னொரு நெத்தியடி.
 
டி.ஆரின் பேச்சை காமெடியாக எடுத்துக் கொள்கிறவர்கள் தகடு தகடு விழாவில் அவரது பேச்சை கேட்டிருந்தால் தங்களின் அபிப்ராயத்தை மாற்றியிருப்பார்கள். டி.ஆருக்கு ஒரு ராயல் சல்யூட்.
 
(கொசுறு தகவல் - தகடு தகடு படமே யுவகிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன் நாவலின் முறையற்ற தழுவல்தான்)

அடிடா தம்பி.... அரிமா நம்பி
 
ஒரு நல்ல படைப்பு உங்களுக்கு எதையாவது ஞாபகப்படுத்த வேண்டும் என்பார்கள். அரிமா நம்பி மிக நல்ல படைப்பு. அதை பார்க்கையில் ஒன்றல்ல மூன்று படங்களை ஞாபகப்படுத்தியது. வில் ஸ்மித் நடித்த எனிமி ஆஃப் த ஸ்டேட்ஸில் ஒரு கொலை எதிர்பாராமல் ஒரு கேமராவில் பதிந்துவிடும். கொலை செய்பவர் அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறையில் பெரிய பதவியில் இருப்பவர். அந்த வீடியோ கேசட் இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத வில் ஸ்மித்தின் கைகளுக்கு வந்து சேரும். பாதுகாப்புத்துறையின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வீடியோவை வில்லன் ட்ரேஸ் செய்வதும், வில் ஸ்மித் அதிலிருந்து மீள்வதும்தான் கதை.
அரிமா நம்பியிலும் ஒரு வீடியோ டேப். ஒரு கொலை. ட்ரேஸிங் எல்லாமிருக்கிறது. அரிமா நம்பியில் கொலை செய்வது மத்திய மந்திரி. கொலை செய்யப்படுவது தான் ரகசியமாக உறவு வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையை. கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் அப்செல்யூட் பவர் படத்தில் இதே போலொரு கொலை. கொலை செய்வது அமெரிக்க அதிபர். கொல்லப்படுவது அவரது ரகசியமான ஆசை நாயகி. விக்ரம் பிரபுவையும், ப்ரியா ஆனந்தையும் எதிரிகள் துரத்தும் காட்சி பார்ன் அல்டிமேட்டம் படத்தில் அப்படியே வருகிறது.
 
சும்மா கதையையும் காட்சியையும் வைத்து சொல்லவில்லை. மேலே உள்ள படங்களில் குறிப்பிட்ட காட்சிகள் எப்படி வருகிறதோ அப்படி அச்சு பிசகாமல் அரிமா நம்பியில் வருகிறது. ஒரே படத்தில் மூன்று நினைவுகள். அரிமா நம்பி... நல்லா வருவீங்க தம்பி.