வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Geetha priya
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (12:52 IST)

சினி பாப்கார்ன் - ஒரு பக்கம் போதை, ஒரு பக்கம் புகழ்

காலண்டர் கேர்ள்ஸ்
 
தேசிய விருது பெற்ற இயக்குனர் மதூர் பண்டார்கருக்கு மேல்தட்டு மனிதர்களை துகிலுரிப்பதில் ஓர் ஆனந்தம். பேஜ் 3, ஃபேஷன், ஹீரோயின் என்று இவர் எடுத்த படங்களில் பல பெண்களின் மீது ஏவப்படும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது. இவை நுட்பமான மேல்தட்டு வன்முறை.
ஹீரோயினுக்கு அடுத்து அவர் இயக்கிவரும் படம், காலண்டர் கேர்ள்ஸ். அரைகுறை உடையில் காலண்டருக்கு போஸ் தரும் ஐந்து மாடல்களைப் பற்றிய கதையிது. காலண்டர் கலாச்சாரம் தெரியாதவர்களுக்கு இது என்னடா இழவு கதை என்று தோன்றும். சாராய சக்ரவர்த்தி விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் காலண்டரில் பிகினியில் போஸ் கொடுத்து பிரபலமானவர்கள்தான் இன்று இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் பல நடிகைகள். 
கத்ரினா கைஃப், தீபிகா படுகோன், இஷா குப்தா... எல்லோரும் மல்லையாவின் கிங் ஃபிஷர் காலண்டரால் புகழடைந்தவர்கள். மல்லையாவின் சரக்கு போதை என்றால் காலண்டர் புகழ். என்னா ஒரு டபுள் உலகம். 

தேவி காம்ப்ளக்சுக்கு ஒரு சலாம்
 
கோச்சடையானுக்கு வரி விலக்கு அளித்த விவகாரத்தில் திரையரங்குகள் வரிச் சலுகையை பார்வையாளர்களுக்குதான் அளிக்க வேண்டும், பொது மக்களிடம் அதனை வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உறுதிபட கூறிய பிறகும் அதனை தமிழகத்திலேயே ஒருசில திரையரங்குகள்தான் கடைபிடித்தன. சென்னையில் தேவி திரை வளாகம் மட்டும் வரிப் பணத்தை பார்வையாளர்களிடம் வசூலிக்கவில்லை.
வேலையில்லா பட்டதாரி படத்துக்கு 120 ரூபாய் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, படத்துக்கு வரிச்சலுகை கிடைத்தது அறிந்ததும் டிக்கெட் கட்டணத்தில் முப்பது சதவீதத்தை தேவி திரையரங்கு திருப்பித் தந்தது. மற்ற திரையரங்குகள் வரிச் சலுகையினையும் பொதுமக்களிடம் வசூலித்து நீதிமன்ற ஆணையை தொடர்ந்து அவமதித்து வருகின்றன. 
வெளிப்படையான இந்த கொள்ளையை தட்டிக் கேட்க அதிகாரிகளோ, அரசோ முன் வரவில்லை. இதேபோலொரு கேவலமான, அசிங்கமான, அவமானகரமான வழிப்பறி சொரணைகெட்ட தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். 
 
கூட்டத்தோடு தானும் கொள்ளையடிக்க முடியும் என்பது தெரிந்தும் அதனை செய்யாமல் திருட்டு கும்பலிலிருந்து தனித்து நிற்கும் தேவி திரைவளாகத்துக்கு நமது ராயல் சல்யூட்.

என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்
 
வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப் போகிறார் என்று மீடியா முழுக்க ஒரே கரைச்சல். இளையராஜாவிடம் மீண்டும் இணைய வைரமுத்து கொஞ்ச காலமாக முட்டி மோதுகிறார். கடைசியாக இடம் பொருள் ஏவலில் யுவன் இசையில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்ததும், நான் யுவன் இசையில் பாட்டு எழுதுற மாதிரி இளையராஜா என்னோட பசங்களுக்கு - மதன் கார்க்கி, கபிலன் - பாட்டெழுத வாய்ப்பு தரணும் என்று பிளாக்மெயில் ஸ்டைலில் ஒரு கோரிக்கை வைத்தார். ராஜாவா கொக்கா. வழக்கம் போல அந்த சைடில் மௌனம்.
ஆனாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத கவிப்பேரரசு பாலாவின் மூலம் தூது விட்டிருக்கிறார். தாரை தப்பட்டையில் இளையராஜா இசையில் பாடல் எழுதுவதற்கு. தாராளமா எழுதிக்கோ, ஆனால் நான் இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா கறார் காட்ட அங்கேயும் தோல்வி. 
 
இந்நிலையில்தான் வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் பாரதிராஜா கலந்து கொண்டார். நண்பன்தானே என்ற உரிமையில் டா போட்டு பேச, அந்த மேடையிலேயே அதனை கண்டித்தார் வைரமுத்து. பாதியிலேயே மேடையிறங்கிப் போனார் பாரதிராஜா. அன்னக்கொடி ஆடியோ விழாவில் இப்படி இளையராஜாவை டா போட்டு பேச, பதிலுக்கு அவர் பாரதிராஜாவை பத்திரிகை கேள்விப் பதிலில் வெளுக்க, பால்ய நண்பர்கள் இப்போது பேசிக் கொள்வதில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது கவிப்பேரரசு. இளையராஜா மாதிரியே பாரதிராஜாவை ட்ரீட் செய்தார். அதனால் இளையராஜாவின் மனம் கனிந்திருக்கும் என்ற நினைப்பில், இடம் பொருள் ஏவலில் தன்னுடைய பாடலுக்கு இளையராஜா குரல் தருவார் என மனப்பால் குடித்திருக்கலாம். அய்யகோ... அது கானல் பால். 

இது பூகம்பத்துக்குள் பல பூக்கள்
 
காஸா மீது தனது இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தாக்குதலையும், அழிவையும் அம்மக்கள் பல வருடங்களாக அனுபவப்படுகிறார்கள். இதற்கெல்லாம் என்ன தீர்வு?
இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது, பாலஸ்தீன பெண்மணி ஒருவர் கண்ணீர் புகைக்குண்டு சேம்பேர்களை சேகரித்து அதில் பூச்செடிகளை வளர்த்து வருகிறார்.

அழிவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது வன்மத்தையல்ல அன்பை.

 

இந்த படம் உங்களுக்குள் அதிர்வை ஏற்படுத்தினால் நீங்கள்தான் விருமாண்டி சொன்ன அந்த வீரன்.