வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (12:03 IST)

சினி பாப்கார்ன் - அம்மணமாக போஸ்டரில் தோன்ற ஆசைப்படும் நடிகை

ஜேசுதாஸ், மம்முட்டி கருத்து - பாய்ந்து தாக்கும் தாய்க்குலங்கள்
 
பெண்கள் அணியும் உடையால்தான் ஆண்கள் டெம்ப்டாகி கற்பழிப்புகள் நடக்கின்றன என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் ஆண், பெண் பேதமில்லை. இந்திய கலாச்சாரத்தை கட்டி நிமிர்த்தும் நோக்கமுடைய அனைவரும் அதையேதான் சொல்கிறார்கள்.
பெண்கள் எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதநேரம் இந்த கருத்துகளை பெண்கள் எதிர் கொள்கிற விதமும் கவனத்துக்குரியது. ஜேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் அணிவது நமது கலாச்சாரத்துக்கு சரியில்லை என்று பேசியது பிரச்சனையாகி ஆங்கிலத்தின் நான்கெழுத்து கெட்டவார்த்தையில் சில பெண் போராளிகள் அவரை சமூகவலைத்தளத்தில் திட்டி தீர்த்தார்கள். ஜேசுதாஸ் ஜிப்பா, வேட்டி தவிர வேறு எதுவும் அணிவதில்லை. அமெரிக்கா சென்றால் கோட் அணிந்து கொள்வார். மற்றபடி வேட்டிதான் அவரது உடை. 
 
ஜேசுதாஸைப் போன்ற பெரியவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களிடம் ஜீன்ஸ் வேண்டாம், ஸ்க்ரிட் வேண்டாம் என்று கண்டிப்பு காட்டதான் செய்கிறார்கள். அவர்களையெல்லாம் நான்கெழுத்து கெட்டவார்த்தையில்தான் இவர்கள் திட்டுகிறார்களா? கேரளாவில் சில பெண்கள் வேட்டிகட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறhர்கள். ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டும் போது நாங்க ஏன் அப்படி கட்டக் கூடாது என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம். ஆண்கள் சட்டை கழற்றினால் நாங்களும் கழற்றுவோம் என்பது மாதிரி. இதில் எல்லாமா நானும் சமம் என்று போட்டி போடுவது?
மம்முட்டி கதை வேறு. பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே சமைத்து உணவு ஊட்ட வேண்டும் என்று கூறியது சர்ச்சையானது. சின்னக் குழந்தைகளுக்கு அம்மாவின் அரவணைப்பு அவசியம் என்ற நோக்கில் அவர் கூறிய கருத்து இது. வளர்ந்த குழந்தைகளுக்கும் அம்மாதான் சமைக்க வேண்டும், ஆண்கள் சமைக்கக் கூடாது என்றெல்லாம் அவர் கூறவில்லை. அதற்கும் கொடி பிடித்து போராட்டம்.
 
பெண்களின் உடையை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஜேசுதாஸ் போன்றவர்கள் அதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் பேசுகையில் அதனை கண்டிக்கவும், மறுக்கவும் பெண்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், தங்களின் பெண்ணியத்தை வெளிக்காட்ட இதனை ஒரு சந்தர்ப்பமாக நினைத்து கருத்து சொன்னவர்களை குத்திக்கீற பாய்வதும், கண்டபடி திட்டி தீர்ப்பதும் வேடிக்கையானது. இவர்களின் பெண்ணியம் குறித்த புரிதல் சந்தேகத்துக்குரியது.

நானும் அம்மணமாக நிப்பேன்
 
பிகே பட போஸ்டரில் அமீர் கான் அம்மணமாக போஸ் தந்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். கையில் ஒரு ட்ரான்சிஸ்டர் மட்டும் இல்லையென்றால் பலருக்கு ஜன்னி வந்திருக்கும். கடவுளுக்கு தோத்திரம். 
அம்மணமாக நின்று ஒரு படத்தை புரமோட் செய்ய வேண்டுமா என்று சர்ச்சை ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, நானும் அம்மணமாக வெறும் ட்ரான்சிஸ்டரை மட்டும் வைத்து போஸ் கொடுக்கப் போறேன் என்று கலங்கடித்துள்ளார் அனுஷ்கா சர்மா. அவரை யாரும் வற்புறுத்தியது போல் தெரியவில்லை.

பெண்களின் ஆபாச போஸ்டர்களை கிழிக்கும் பெண்ணிய அமைப்புகள் இந்த விவகாரத்தில் யாரை கிழிக்கப் போகின்றன? அம்மணமாக நிற்பேன் என்று தன்னிச்சையாக அறிவித்த அனுஷ்காவையா இல்லை, போஸ்டரை - அது வெளியானால் - வெறிக்கப் பார்க்கப் போகும் ஆண்களையா? இல்லை அமீர் கானின் போஸ்டரை கண்டுக்காமல் விட்டதைப் போல் இதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ளப் போகிறார்களா?
 
யாராவது விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்

கலைத்துறையா காக்கா கூட்டமா?
 
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனையும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் காட்டிய ஆதரவு ஒட்டு மொத்த இந்தியாவையே முகம் சுழிக்க வைத்தது. கட்சிக்காரர்கள் அங்கபிரதட்சணம் செய்கிறார்கள், மண் சோறு சாப்பிடுகிறார்கள், மொட்டை அடிக்கிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.

ஜெயலலிதாவைவிட்டால் அவர்களின் கட்சியை காப்பாற்ற இரண்டாம்கட்ட தலைவர்கள் ஒருவர்கூட கிடையாது. ஜெயலலிதா இல்லாமல் வாக்கு சேகரிக்கப் போனால் என்னாகும் என்பது அவர்களுக்கு தெரியும், இரட்டை இலை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இந்த மூவருக்கும் விழுகிற வாக்குகள்தான் அதிமுகவின் வாக்கு வங்கி. அவர்கள் மொட்டை மட்டுமில்லை எதுவும் செய்வார்கள். ஆனால் கலைத்துறை...?
 
ஊழல் அரசியல்வாதிகளை முச்சந்தியில் நிறுத்தி உதைக்கணும் என்று படம் எடுப்பவர்களும், அதில் பேசி நடிப்பவர்களும் கூட்டாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். தற்போது ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்த நிலையில் அதிமுக தொண்டர்களே கூசிப் போகிற அளவுக்கு அம்மா மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று ஜால்ரா வாசகங்களோடு அறிக்கை வெளியிட்டிருக்கிறது இயக்குனர்கள் சங்கம். பெப்சி சார்பிலும் அப்படியொரு ஜால்ரா அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அநீதிக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழும்புவது கலைத்துறையிலிருந்துதான். அப்படிதான் உலகம் முழுவதும் நடந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே அது தலைகீழாக நடக்கிறது. தனது சொத்துகள் எப்படி வந்தது என்பதற்கு, சொத்துகள் வாங்க ஏது பணம் என்பதற்கு ஜெயலலிதாவால் கணக்குக் காட்ட முடியவில்லை. விசாரணையில் இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதற்குப் பிறகும் நிரபராதி, பொய் வழக்கு என்றெல்லாம் இவர்களால் எப்படி கூசாமல் பொய்யுரைக்கு முடிகிறது? 
 
இதுவே கருணாநிதியின் ஆட்சியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு காக்காய்கூட வாய் திறந்திருக்காது. இந்த சந்தர்ப்பவாதத்தை முதலில் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.