வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 28 மே 2016 (18:00 IST)

சினி பார்ப்கார்ன் - அமித் ஷா வீட்டில் ஐஸ்வர்யா ராய் படவிழா

சினி பார்ப்கார்ன் - அமித் ஷா வீட்டில் ஐஸ்வர்யா ராய் படவிழா

பாடப்புத்தகத்தில் மகேஷ்பாபு படம்


 
 
மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தின் கதையை ஆந்திராவில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். கொரட்டல சிவா இயக்கிய இந்தப் படத்தில் பணக்காரரான மகேஷ்பாபு பின்தங்கிய தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்து வளப்படுத்துவதாக காட்டியிருந்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை பூஸ்ட் செய்யும் விதமாக மகேஷ்பாபு தனது சொந்த கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தார். ஆந்திராவை மட்டும் கவனித்தால் போதுமா? தெலுங்கானாவையும் கவனிங்க என்று அரசியல்வாதிகள் கோரிக்கை வைக்க, அங்கேயும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார்.
 
அவரைத் தொடர்ந்து, பிரகாஷ்ராஜ் உள்பட வேறு சிலரும் பின்தங்கிய கிராமங்களை தத்தெடுத்தனர். இப்போது கிராமங்களை தத்தெடுப்பது ஆந்திரா, தெலுங்கானாவில் பேஷனாகிவிட்டது. 
 
கிராமங்கள் ஏன் பின்மங்கியுள்ளன என்பதை கண்டறிந்து அதனை களைவதுதான் சரியான பாதை. கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சிக்கு கொண்டு வருவதெல்லாம் கண் துடைப்பு. கந்தசாமி படம் வெளியான போது இதுபோலத்தான் 30 கிராமங்களை தத்தெடுப்பதாகச் சொன்னார்கள். என்னவானது அந்த கிராமங்களின் கதி...?
 
வருங்கால தலைமுறையை நினைத்தால் பகீரென்றிருக்கிறது.
 
மோகன்லாலின் தேசபக்தி கொட்டாவி
 
எல்லையில் ராணுவ வீரர்கள் சாகும் போது, டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தலாமா என்று, எக்ஸ்ட்ரா மீல் சாப்பிட்ட கிறக்கத்தில் மோகன்லால் ஒரு தேசபக்தி கொட்டாவி விட்டதும், அதனை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விளக்குமாறால் சாத்துவதும் அறிந்ததே. இந்த கௌரவ கர்னலின் கயமைத்தனங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சாத்து தொடர்கிறது.
 
சில வருடங்கள் முன்பு மோகன்லால் தனது வீட்டில் சட்டத்துக்கு புறம்பாக யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. எனக்கு பரிசாக கிடைத்தது, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் பசப்பி, பிரச்சனையிலிருந்து தலையை உருவினார் மோகன்லால். அப்போதே பிடித்து உள்ளே போட்டிருந்தால் இப்போது இந்த தேசபக்தி கொட்டாவியை அவர் விட்டிருக்க மாட்டார். 
 
சட்டத்துக்கு புறம்பாக யானை தந்தங்கள் வைத்திருந்தவர் தேசபக்தியை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது என்று கேரளாவிலுள்ள மாணவர்கள் லாலை போட்டுத் தாக்குகிறார்கள்.
 
சோம்பல் ஏப்பம் வந்தால் அதை ஏன் அடுத்தவர்கள் மீது விடுகிறீர்கள் மிஸ்டர் மோகன்லால்?
 
அமித் ஷா வீட்டில் ஐஸ்வர்யா ராய் படவிழா


 
 
சரப்ஜித் சிங்கை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஞ்சாப்காரர். பல வருடங்களாக சிறையில் வாடும் இந்த அப்பாவியை விடுவிக்க வேண்டும் என்று சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆள் இருந்தால்தானே விடுவிக்க வேண்டும் என்று, 2013 -இல் சரப்ஜித் சிங்கை சிறையிலேயே அடித்துக் கொன்றனர். சக கைதிகள் அடித்துக் கொன்றனர் என பாகிஸ்தான் சொன்னாலும், பாகிஸ்தான் அரசின் திட்டமிட்ட கொலை இது.
 
இதனை இந்தியில் படமாக எடுத்துள்ளனர். சரப்ஜித் சிங்காக ரந்தீப் ஹுடாவும், அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். படத்தின் கதையில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதாலா தெரியவில்லை, அதன் பர்ஸ்ட் லுக்கை பாஜக இன் தேசிய தலைவர் அமித் ஷா வீட்டில் அமித் ஷா, நிதின் கட்கரி முன்னிலையில் வெளியிட்டனர்.
 
குஜராத்தில் இந்துத்துவ அடிப்படை சக்திகள் நடத்திய வெறியாட்டத்தை பற்றி ஒரு படம் எடுத்தால் இந்த கோஷ்டிகள் அதனை வெளியிடவே அனுமதிக்க மாட்டார்கள். பாகிஸ்தான் வெறுப்பில்தான் இந்தியாவில் பாசிசத்தை கட்டவிழ்க்கின்றன பாஜக வும் அதன் வானரப் படைகளும்.