1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 7 நவம்பர் 2014 (14:49 IST)

சினி பாப்கார்ன் - தெரிந்த படங்கள் தெரியாத ரகசியங்கள்

மிஸ்ட்ரி பிகைன்ட் மீகாமன்
 
மீகாமன் படத்தை இயக்கும் மகிழ்திருமேனிதான் சுசீந்திரன் இயக்குனரானதற்கு காரணம். அதிர்ச்சியாக இருக்கிறதா? அதுதான் சினிமா.
 
இமேஜின் கிரியேஷன் நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கி 2008 -இல் மகிழ்திருமேனி ஒரு படத்தைத் தொடங்கினார். யமைனை அஞ்சோம். எமனை அல்ல யமனை. விஷ்ணு ஹீரோ. முதல் ஷெட்யூல்ட் தூத்துக்குடி துறைமுகத்தில். நாற்பது நாள்கள் படத்தை எடுத்து சென்னை வந்து போட்டுப் பார்த்தால் படம் மொத்தமாக பதினைந்து நிமிடங்கள் ஓடியது. அதில் பாதிக்கும் மேல் ஒரு சேஸிங் சீக்வென்ஸ். 
தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்துவிட்டார். இதேவேகத்தில் போனால் இரண்டு மணிநேர படத்தை எடுக்க 400 நாள்கள் ஷுட்டிங் நடத்த வேண்டியிருக்கும். போதும்டா சாமி என்று படத்தை நிறுத்திவிட்டார். மகிழ்திருமேனி வேறொரு தயாரிப்பாளரை அழைத்து வந்து, எடுத்த படத்தை என்னிடம் தாருங்கள், செலவான பணத்தை தந்துவிடுகிறேன் என்று பதினைந்து நிமிட ஃபுட்டேஜை வாங்கிக் கொண்டார். இமேஜின் கிரியேஷனுக்கு இது கௌரவப் பிரச்சனையாகிவிட்டது.
 
மகிழ்திருமேனி யமனை அஞ்சோம் படத்தை முடிப்பதற்குள் நாம் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டாக வேண்டும். யார் இயக்குனர், என்ன கதை என்பதெல்லாம் பிரச்சனையில்லை. பைண்டிங் ஸ்கிரிப்ட் யார் வைத்திருந்தாலும் அவர்தான் இயக்குனர்.
 
அப்போதுதான் சுசீந்திரன் அவர்களிடம் அகப்பட்டார். வெண்ணிலா கபடிக்குழு ஸ்கிரிப்டை பக்காவாக முடித்து வைத்திருந்த அவரை, கதை என்ன காட்சி என்ன என்பதெல்லாம் கேட்காமல் இயக்குனராக ஒப்பந்தம் செய்தனர். யமனை அஞ்சோமில் நடித்த அதே விஷ்ணு ஹீரோ. அதே தொழில்நுட்பக் கலைஞர்கள். படம் வெளியாகி வெற்றிபெற சுசீந்திரன் என்ற இயக்குனரும், விஷ்ணு என்ற நடிகரும் நாட்டுக்கு கிடைத்தார்கள்.
 
சரி, மகிழ்திருமேனி...?
 
புதிதாக அவர் அழைத்து வந்த தயாரிப்பாளரும் யமனை அஞ்சோமை தயாரிக்கவில்லை. படம் ட்ராப். அதன் பிறகு 2012 -இல்தான் அவரால் படம் இயக்க முடிந்தது. அருண் விஜய் நடித்த தடையறதாக்க. தற்போது ஆர்யாவை வைத்து மீகாமன் படத்தை இயக்கி வருகிறார். யமனை அஞ்சோமின் அதே லொகேஷனில்தான் இதன் படப்பிடிப்பும் நடந்தது. அதே கதைதான் இது என கூறுகிறார்கள். 
 
படத்தைவிட இந்த பிளாஷ்பேக் சுவாரஸியமாக இருக்குதில்லையா.

தங்கர்பச்சானின் களவாடிய காலங்கள்
 
எழுத்தாளர் அஜயன்பாலா மைலாஞ்சி என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அஜயன்பாலாவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருப்பவர் இயக்குனர் விஜய். ஒளிப்பதிவு செய்கிறவர் தங்கர்பச்சான்.
 
விஜய் ஏன் அஜயன்பாலா படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. விஜய்யின் தெய்வத்திருமகள் போன்ற உல்டா படங்களை ஒரிஜினலிருந்து தமிழுக்கு மாற்றிய பெருமைக்குரிய டீமில் முக்கிய பங்கு வகித்தவர் அஜயன்பாலா. அந்த ஒரு படம் இல்லை. விஜய்யின் ஏறக்குறைய எல்லா படங்களிலும் அஜயன்பாலாவின் எழுத்தாள மூளை பங்கெடுத்திருக்கிறது.
சரி, தங்கர்பச்சான்...?
 
சிலகாலம் அஜயன்பாலா தங்கர்பச்சானிடம் தொழில் பயின்றிருக்கிறார். அப்போதுதான் மலையாள நடிகரும், திரைக்கதையாசிரியருமான சீனிவாசனின் சிந்தாநிஷ்டயாய சியாமளா படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற ஐடியா தங்கர்பச்சானுக்கு தோன்றுகிறது.

இந்த இடத்தில் சீனிவாசன் குறித்து சொல்ல வேண்டும். தமிழில் வெளியான குசேலன், வெள்ளித்திரை, திண்டுக்கல் சாரதி போன்ற பல படங்களின் மலையாள ஓரிஜினலின் திரைக்கதையை எழுதியவர் இவர். வடக்குநோக்கு எந்திரம், சிந்தாநிஷ்டயாய சியாமளா இரண்டும் அவர் இயக்கி நடித்த படங்கள். இரண்டும் தேசிய விருதை பெற்றன. அதில் வடக்குநோக்கு எந்திரத்தைதான் திண்டுக்கல் சாரதியாக தமிழில் நையப்புடைத்தனர். 
 
சிந்தாநிஷ்டயாய சியாமளா தேசிய விருது பெற்ற படம், ரீமேக் ரைட்ஸ் கேட்டால் பல லட்சம் தர வேண்டியிருக்கும் என்று தங்கர்பச்சான் நேரடியாக படத்தின் ரைட்ஸை கேட்காமல் அஜயன்பாலாவை சீனிவாசனிடம் அனுப்பி வைக்கிறார். சீனிவாசன் சென்னை வந்தால் கோயம்பேடு அருகில் உள்ள ஹோட்டலில்தான் தங்குவது வழக்கம். நானொரு ஏழை எழுத்தாளன், முதல் படமாக உங்களின் படத்தைதான் ரீமேக் செய்யலாம் என்று இருக்கிறேன்.

பார்த்து ரேட்டு சொல்லுங்க என்று மிகமிக குறைந்த பணத்துக்கு படத்தின் ரைட்ஸை வாங்கிக் கொள்கிறார். ஆனால் அதனை படமாக்கியவர் அஜயன்பாலா அல்ல, தங்கர்பச்சான். அதுதானே அவர்களின் உடன்பாடு. அப்படி சீனிவாசனின் அப்படமும் தங்கர்பச்சானால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற பெயரில் கழுவேற்றப்பட்டது.
 
இயக்குனரான பிறகு பெரியார் படத்துக்கு மட்டும் ஒளிப்பதிவு செய்தார் தங்கர். அஜயன்பாலா படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது பழைய நன்றிக்கடன்.