வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (09:20 IST)

சேரனின் சினிமா டூ ஹோம் திட்டம் ஒரு பார்வை

புதிய படங்களின் டிவிடிகளை குறைந்த விலைக்கு வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் சேரனின் சினிமா டூ ஹோம் (சி2ஹெச்) திட்டம் நேற்று விமரிசையாக தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி முதல் படமாக சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை டிவிடியாக வெளியிடப்பட்டது. 
திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படியே கிடைத்தாலும் இரண்டு தினங்களுக்கு மேல் திரையரங்குகள் சின்னப் படங்களை திரையிடுவதில்லை.
 
ரசிகர்களும் பெரிய படங்களை மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நெருக்கடிகளுடன் திருட்டு டிவிடி பிரச்சனைவேறு சிறு படங்களின் கழுத்தை நெரிக்கிறது.
 
இதற்கெல்லாம் தீர்வாக சேரன், புதுப்படங்களை நேரடியாக டிவிடியில் வெளியிடும் திட்டத்தை முன்வைத்து அதற்கான முயற்சியில் இறங்கினார். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான முகவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் கீழ் ஏராளமானோர் டிவிடிகளை வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் வேலையை செய்வர்.
 
சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை புது டிவிடி 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. வெறும் ஐம்பது ரூபாயில் ஒரு குடும்பமே அப்படத்தை வீட்டில் கண்டு களிக்கலாம். இந்தத் திட்டத்தில் மேலும் பல படங்கள் வெளியாக உள்ளன. சரியாக செயல்பட்டால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு சேரனின் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். 
 
சேரனின் சி2ஹெச் திட்டத்தால் திருட்டு டிவிடிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும். நாற்பதும், ஐம்பதும் ரூபாய் தந்து திருட்டு டிவிடி வாங்குகிறவர்கள், அதே பணத்துக்கு ஒரிஜினல் டிவிடி கிடைக்கும் போது திருட்டு டிவிடி வாங்குவதை விட்டுவிட அதிக வாய்ப்புள்ளது. மேலும், திரையரங்குகளுக்கு சென்று நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்களும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
 
சேரனின் திட்டத்துக்கு கமல் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம் என முக்கிய சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்தன. விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்தான் இந்தத் திட்டத்தால் கவலையடைந்துள்ளனர்.
 
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் கொள்ளையடிக்கும், தின்பண்டங்களுக்கு யானை விலை குதிரை விலை கேட்கும் கொள்ளைக்கூடாரமாக திரையரங்குகள் மாறியதன் ஒரு நல்ல பக்கவிளைவுதான் சேரனின் இந்த சி2ஹெச் திட்டம். சேரனின் தயாரிப்பில் ரோகிணி இயக்கியுள்ள அப்பாவின் மீசை, பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில் ஜெய் நடித்த அர்ஜுனனின் காதலி என ஏராளமான படங்கள் சி2ஹெச் திட்டத்தில் வெளிவர உள்ளன. 
 
சேரனின் இந்த முயற்சி சிறு படங்களுக்கான வணிக கதவை  திறந்திருக்கிறது. திரையரங்குகளின் கட்டண கொள்ளை, திருட்டு டிவிடி என இருபெரும் பூனைகளுகளுக்கு துணிந்து மணி கட்டியிருக்கிறார் சேரன். வாழ்த்தி வரவேற்போம்.