வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:20 IST)

சேரனின் அருவருப்பு விமர்சனமும் மழுப்பல் சமாதானமும்

ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேசி அனைவரின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார் சேரன். உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஒரு மழுப்பல் விளக்க அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.


 
 
கன்னா பின்னா படவிழாவில்தான் சேரன் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். படத்தின் பெயர் கன்னா பின்னா என்பதால் அவர் அப்படி பேசினாரா தெரியவில்லை. 
 
திருட்டு டிவிடியும், இணையத்தில் படத்தை பதிவேற்றம் செய்வதும் சினிமா தொழிலை நசித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கான காரணத்தை ஆராயாமல் ஒட்டு மொத்த பழியை ஈழத்தமிழர்கள் மீது சேரன் சுமத்துவது கண்டனத்துக்குரியது. 
 
முன்பு ஒருமுறை, திருட்டு டிவிடி பணம்தான் குண்டு வைக்க பயன்படுகிறது என்று பேசி முஸ்லீம்களின் கண்டனத்துக்கு ஆளானார் கமல். இப்போது சேரன். திருட்டு டிவிடி அதிகம் புழங்க திரையரங்குகளே முக்கிய காரணம். அவர்கள் நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் பெரும் தொகை வைத்து வசூலிக்கிறார்கள். அதன் காரணமாகவே மக்கள் திருட்டு டிவிடியை நாடுகின்றனர். தனது தலைவர் என்று சேரன் கொண்டாடும் ரஜினியின் கபாலி பட டிக்கெட் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு கவுண்டரில் விறக்கப்பட்ட போது சேரன் எங்கு போயிருந்தார்? மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிப்பவர்கள் மீது அவருக்கு அப்போது அருவருப்பு ஏற்படவில்லையா?
 
சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சைவிட மோசமாக உள்ளது அவரது விளக்கம்.
 
"இதுவரை திரையுலகில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களைக் கண்டித்து வெளியிடவில்லை. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா.
 
உலகெங்கும் நண்பர்களைக் கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக் கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களைத் தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்.
 
ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு. நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும். அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்" என்று தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
திருட்டு டிவிடியை தடுக்க வேண்டியது அரசின் கடமை. காவல்துறையின் வேலை. கேரளாவில் ஒரு படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பிறகே திருட்டு டிவிடி சந்தைக்கு வருகிறது. அதற்கு முன் வெளிவந்தால், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். அதையும் மீறி சில சம்பவங்கள் நடந்தாலும் திருட்டு டிவிடி பாதிப்பு தமிழ் அளவுக்கு மலையாளத்தில் இல்லை. காரணம் எளிது.
 
அங்குள்ள அரசும், காவல்துறையும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை ஆதரிப்பதும் இல்லை அனுமதிப்பதும் இல்லை. கறாராக அதனை தடுக்கிறார்கள். அதே கறார்தனத்தை அவர்கள் திருட்டு டிவிடி விஷயத்திலும் காட்டுகிறார்கள். ஆனால் இங்கு? 
 
திரையரங்கு கட்டண கொள்ளை பற்றி ஒரு வார்த்தை சேரன் பேசவில்லை. அப்படி கொள்ளையடிக்கும் திரையரங்குகளை கண்டு கொள்ளாமல்விடும் அதே காவல்துறை திருட்டு டிவிடியை மட்டும் தடு என்றால் எப்படி தடுக்கும்? முதலில் திரையரங்கு கட்டண கொள்ளையை தடுங்கள், திருட்டு டிவிடி தானாக ஒழியும்.