செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 19 மார்ச் 2015 (13:34 IST)

கருத்து சுதந்திரத்தை கத்தரிக்கும் தணிக்கைக்குழு

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மத, சாதி அடிப்படைவாத சக்திகளின் இலைமறை காய் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை பெறத் தொடங்கின. 
 
தாலி புனிதமானது அதுபற்றி விவாதம் நடத்தக் கூடாது என்று தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. மத அடிப்படைவாத சக்திகளின் ஆட்டம் குறைவாக காணப்படும் தமிழகத்தில் இந்த வன்முறைச் சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான விளைவு தணிக்கைத்துறையிலும் பிரபதிலிக்கிறது. மத்திய தணிக்கைத்துறையில் பணிபுரிந்த முக்கிய அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தனர். அப்படியொரு சூழலுக்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பதில் நியமிக்கப்பட்டவர்கள் மத, சாதி அடிப்படைவாதிகளின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒத்திசைவான பின்னணியை கொண்டவர்கள்.
 
கலாச்சாரம், புனிதம், மரபு என்ற பெயர்களில் கருத்து சுதந்திரத்தை மறுக்கும் வேலையில் தணிக்கைத்துறை இறங்கியுள்ளது. முதல்கட்டமாக, மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவரான நிகலானி ஆட்சேபத்திற்குரிய வார்த்தைகள் என்று 28 வார்த்தைகளை பட்டியலிட்டு திரைப்பட தணிக்கை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதற்கு பலதரப்புகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த சுற்றிக்கை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், மறைமுகமாக தங்களின் எண்ணத்தை தணிக்கைத்துறை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
 
சமீபத்தில் வெளியான, தும் லகா ஹே ஹைசா திரைப்படத்தில் இடம்பெற்ற லெஸ்பியன் என்ற வார்த்தையை சென்சார் அனுமதிக்கவில்லை. உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதக் கூடாது என்ற கருத்து கவலுப்பெற்று வருகிறது. இப்படியொரு சூழலில், லெஸ்பியன் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று கருத்து சுதந்திரத்தின் கழுத்தை தணிக்கைத்துறை நெரித்திருக்கிறது.

அதேபோல், உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படத்துக்கு மத்திய தணிக்கைத்துறை அனுமதி மறுத்துள்ளது. வில் ஸ்மித் நடித்த ஃபோகஸ் திரைப்படமும் தணிக்கைத்துறையின் கெடுபிடிக்குப் பிறகே இந்தியாவில் திரையிடப்பட்டது.
தமிழ் சினிமா இந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும், வழக்கம் போல இங்குள்ள சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் அம்மா அன்னதான திட்டம் போன்ற அடிமை சேவகத்தில்தான் கவனம் செலுத்துகின்றனர். தணிக்கைத்துறைக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுக்கும், உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்க்கும் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. அதேநேரம், இந்தி சினிமாவைச் சேர்ந்த அனுராக் காஷ்யப், ஷபனா ஆஸ்மி, அமீர் கான், கரண் ஜோஹர், தீபிகா படுகோன், மகேஷ் பட் உள்பட 30 பேர் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை சந்தித்து தணிக்கைத்துறை வெளியிட்ட, ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகள் சுற்றறிக்கை மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
தமிழ் திரையுலகமும் அதுபோன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தணிக்கைக்கு எதிரான தனித்தனி குரல்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். இது உரிமைகளை பெறுவதற்கான போராட்டம் இல்லை, இருக்கிற உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சி என்பதை திரையுலகம் உணர வேண்டும்.