வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (10:12 IST)

இந்தியில் அதிகம் வசூல் செய்த ஐந்து படங்கள்

இந்திய மொழிகளில் தயாராகும் படங்களில், இந்தி சினிமாவுக்கே வியாபார சந்தை பெரிது. இந்தி பேசுகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், தமிழ், தெலுங்கைவிட பல மடங்கு அதிக ரசிகர்கள் இந்தி சினிமாவுக்கு இருக்கிறார்கள். அதேபோல் வெளிநாடுகளிலும்.
 

 

இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் பத்து இடங்களை இந்திப் படங்களே வைத்திருந்தன. முதல்முறையாக அந்த பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது பாகுபலி. அதன் வசூலை கணக்கிடும் போது. பாகுபலி இந்தப் பட்டியலில் 3- வது இடத்துக்கு வருகிறது.

இந்தி சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எவை? முதல் ஐந்து இடங்களைப் பார்க்கலாம்.

5. ஹேப்பி நியூ இயர்

ஷாருக்கான் நடிப்பில் பராகான் இயக்கிய, ஓம் சாந்தி ஓம் படத்தில் பணிபுரிந்த ஷாருக், பராகான், தீபிகா படுகோன் மூவரும் மீண்டும் இணைந்த படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு.
 

 

வெளியான சில தினங்களிலேயே இந்தியாவில் 100 கோடிகளை கடந்தது. ஆனால், மிகச்சுமாரான படம் என்பதால் அதன் இந்திய வசூல் அடுத்தடுத்த தினங்களில் கணிசமாக குறைந்தது. உள்ளூர், வெளியூர் எல்லாம் சேர்த்து இதன் மொத்த வசூல் 383 கோடிகள்.

4. 3 இடியட்ஸ்
 
இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலில் 200 கோடிகளைத் தாண்டிய படம், 3 இடியட்ஸ். முதலில் 100 கோடிகளைத் தாண்டிய படம், அமீர் கானின் கஜினி.

அமீர் கான், மாதவன் நடித்த  3 இடியட்ஸ் ஓபனிங் வசூலைத் தாண்டி பல வாரங்கள் நின்று ஓடியது. வெளிநாடுகளிலும் கணிசமான வசூல்.
 
இதன் உள்நாடு, வெளிநாடு வசூல் மொத்தமாக 392 கோடிகள்.
 
3. சென்னை எக்ஸ்பிரஸ்
 
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கிய இந்தப் படம் உலக ஓட்டம் ஓடியது. இந்தியாவில் மட்டும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. முதல்நாள் வசூலில் இந்தப் படமே இன்றும் முன்னிலையில் உள்ளது.
 
இந்த பிரமாண்ட வசூலுக்கு ஷாருக்கானின் விளம்பர யுத்தியும் ஒரு காரணம். இதன் ஒட்டு மொத்த வசூல் 423 கோடிகள்.
 
2. தூம் 3
 
தூம் ஒன்று இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றிருந்ததால் மூன்றாவது பாகத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அமீர் கான் வில்லனாக நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது.
 

 

அமீர்கானின் கச்சிதமான புரமோஷன் ரசிகர்களை படம் பார்த்தே தீர வேண்டும் என்று எண்ண வைத்தது. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படம் உலகம் முழுவதும் 540 கோடிகளை வசூலித்தது.

1. பிகே
 
யாரும் அவ்வளவு எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில் பிகே உள்ளது. இது ஓபனிங் ஜோ‌ரில் ஓடிய படம் அல்ல. நின்று ஓடிய படம். இந்திய சினிமா சரித்திரத்தில் 300 கோடிகளை முதலில் தாண்டிய படம். இப்போதும் இந்த சாதனை பிகே படத்துக்கு மட்டுமே உரியது.
 

 

இந்தியாவில் வசூலானதைப் போல் வெளிநாடுகளிலும் பிகே வசூலித்தது. 2014 -இல் திரைக்கு வந்த இப்படம் மொத்தமாக 740 கோடிகளை வசூலித்து எட்ட முடியாத முதலிடத்தில் உள்ளது.
 
சமீபத்தில் வெளியான பாகுபலி இதுவரை 450 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. எனில் அது இந்த பட்டியலில் 3 -வதாக வருகிறது (இது இந்திப் படங்களின் பட்டியல் என்பதால் பாகுபலி இடம்பெறவில்லை).
 
சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் கடந்த 28 -ஆம் தேதிவரை உலக அளவில் 377.12 கோடிகளை வசூல் செய்துள்ளது. அது ஹேப்பி நியூ இயர், 3 இடியட்ஸ் படங்களின் வசூலை எளிதாக முறியடிக்கும். 423 கோடிகளுடன் 3 -வது இடத்தில் இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸை தாண்டி மூன்றாவது இடத்தை பஜ்ரங்கி பைஜான் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.
 
இந்திய அளவில் இப்படம் 28 -ஆம் தேதிவரை 259.12 கோடிகளை வசூலித்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் இந்த வசூல் 300 கோடியை தாண்டும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.