வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (11:41 IST)

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்... - பாரதி சரியா? இளையராஜா சரியா?

தயாரிப்பாளர்கள் சங்கம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா அன்னதானம் திட்டத்தை தொடங்கியது. அதனை ஆரம்பித்து வைத்த இளையராஜா பேசுகையில், தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாருடைய வரிகளை கேட்கும்போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி, என்றுதான் நினைப்பேன்.
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போடுவோம் என்று பாடியிருக்கணுமே தவிர, ஜெகத்தினை எதுக்கு அழிக்கணும்? சாப்பாடு போடுவதற்குத்தான் இங்கு இயற்கை காத்துக் கிடக்கிறதே. மழை பொழிந்தால் பயிர்கள் எல்லாம் விளைகின்றன என்றார். 
 
இதில் யாருடைய கூற்று சரி?
 
ஒருவனுக்கு உணவில்லை என்றால் இருப்பவன் அவனுக்கு உணவளிக்கலாம் என்ற தரும சிந்தனையின் வெளிப்பாடு இளையராஜாவின் பேச்சு. அது பாராட்டத்தக்கது. இந்த தரும சிந்தனையில், கொடுப்பவன் மகிழ்ச்சியடைகிறனே தவிர, வாங்குகிறவன் தனது நிலைக்கு வருந்துகிறவனாகவே இருப்பான். தருவதுதான் இன்பம். பெறுவது எப்போதும் இழிநிலைதான். தனது திறமையால் ஒருவன் உயிர் வாழ்வதற்கும் மற்றவர்களின் கருணையால் உடல் வளர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
 
உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைத்திடும் குறைந்தபட்ச சமத்துவமாவது இந்த உலகில் நிலைபெற வேண்டும். அதற்காக கனவு கண்டவன் பாரதி. உணவுக்கே ஒருவன் கையேந்தி நிற்கும் அவலநிலை மறைந்து அடிப்படை சமத்துவம் நிலைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன்.
அடிப்படை தேவையான உணவுக்கே ஒருவன் கையேந்தும் நிலை இந்த உலகத்தில் நீடித்தால் அந்த உலகத்தை அழித்திடுவது மேல் என்ற உயர்ந்த எண்ணத்தில், பரந்த தளத்தில் பாரதி பாடிய வரிகள் அவை. அதனை நமது தரும சிந்தனையைக் கொண்டு குறுக்க நினைக்கலாமா?
 
தருவது தர்மம் என்பவர்கள் ஒருபோதும் பெறுகிற நிலையில் தங்களை இருத்திப் பார்க்க விரும்புவதில்லை. அவர்களுக்கு தெரியும், பெறுவது எப்போதும் இழிநிலை என்று. உணவு என்பது ஒரு மனிதனின் அடிப்படை தேவை. அதனை இன்னொருவனின் கருணையின்றி அவனாகவே சம்பாதிக்கும் சமத்துவமே தேவையன்றி சோறு போடும் கருணையில்லை. 
 
தருவதே தர்மம், தருவேதே இன்பம் என்பவர்கள் தங்களின் தேவைக்கு மிகுதியாக சம்பாதித்து வைத்திருக்கும் கார்களில் ஒன்றிரண்டை தானமாக தரலாம். நாலைந்து வீடுகள் வைத்திருப்போர் அதில் இரண்டை வீடில்லாதவர்களுக்கு தரலாம். இப்படி சொல்லும் போதே அது எவ்வளவுதூரம் சாத்தியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆக, இவர்கள் சொல்லும் தர்மமும் கருணையும் சோறு போடும் தர்மம். அதனை யாரும் சொல்லாமலே எளிய மக்கள் தங்களால் முடிந்தவரையில் இயல்பாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

முக்கியமாக பெறுகிறவனுக்கு குற்றவுணர்வு ஏற்படாதவகையில். பொதுக்கூட்டம் போட்டு போட்டோபிராஃ;பரை வரவழைத்து சோறு போடும் தர்மம் இருப்பதிலேயே மிகப்பெரிய அதர்மம். அதற்குப் பதில் தேவைக்கு மிகுதியாக சேகரித்து வைத்திருக்கும் ஆடம்பரங்களை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து தரலாம். துரதிர்ஷ்டவசமாக சோற்றைத் தாண்டி இவர்களின் தர்மமும் கருணையும் செல்லுபடியாவதில்லை.