1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By bala
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2017 (11:20 IST)

கபாலி, தெறியை முந்தியதா பைரவா?

விஜய்யின் பைரவா திரைப்படம் இதுவரையான அனைத்து ஓபனிங் சாதனைகளையும் முறியடித்ததாக சிலர் கூறி வருகின்றனர். படம் 4 தினங்களில் 100 கோடிகளை கடந்ததாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 

உண்மையில் பைரவாவின் வசூல் எவ்வளவு? கபாலி, தெறி படங்களின் வசூலை மிஞ்சியதா?

நாம் எப்போதும் கூறுவதுதான். தமிழ் சினிமா வர்த்தகம் போல், வெளிப்படைத்தன்மையில்லாத வியாபாரம் இந்தியாவில் வேறில்லை. பைரவா பட டிக்கெட்கள் சில மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு விற்கப்படுகிறது. மற்ற திரையரங்குகளில் 200 முதல் 400 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. அதனால், பைரவாவின் சரியான வசூலை கணக்கிடுவது கடினம். அரசுக்கு காட்டப்படும் வசூலை வைத்தே நாம் தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை கணக்கிட முடியும். இது விஜய்யின் பைரவாவுக்கு மட்டுமில்லை ரஜினி, அஜித் படங்களுக்கும் பொருந்தும்.

பைரவா படத்தின் வசூல் 4 தினங்களில் 100 கோடிகளை தாண்டியதாக அறிவிக்கப்பட்டாலும் மாநிலம்வாரியாக இன்னும் வசூல் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை. நமது கைவசம் இருக்கும் ஒரேயொரு துருப்புச்சீட்டு, சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

முதல்நாளில் அதாவது ஜனவரி 12 வியாழக்கிழமை பைரவா சென்னையில்  89 லட்சங்களை வசூலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இதன் வசூல் 2.20 கோடிகள். இந்த மூன்று நாள் சராசரி 73 லட்சங்கள் வருகிறது. இது முதல்நாள் வசூலைவிட குறைவு. ஆக, முதல் 4 தினங்களில் பைரவாவின் சென்னை வசூல், 3.09 கோடிகள்.

விஜய்யின் தெறி திரைப்படம் முதல் 4 தினங்களில் சென்னையில் 3.06 கோடிகளை வசூலித்தது. பைரவாவைவிட தெறியின் ஓபனிங் வசூல் 3 லட்சங்கள் குறைவு.

அதேபோல் விஜய்யின் கத்தி 5 தினங்களில் சென்னையில் 3.01 கோடியை மட்டுமே வசூலித்தது. பைரவாவின் 4 நாள் வசூல் கத்தியின் 5 நாள் வசூலைவிட அதிகம்.

அஜித்தின் வேதாளம் 6 தினங்களில் 3.50 கோடிகளை வசூலித்தது. நிச்சயம் இந்த வசூலை பைரவா 6 தினங்களில் கடந்துவிடும். அஜித்தின் என்னை அறிந்தால் 4 தினங்களில் 2.92 கோடிகளை மட்டுமே வசூலித்தது. அதேபோல் விஜய்யின் புலி 4 தினங்களில் 2.84 கோடிகளை மட்டுமே தனதாக்கியது.

ஆக, மேலே பார்த்த படங்களைவிட பைரவா அதிக ஓபனிங்கை பெற்றிருப்பது தெரிய வருகிறது.

ஷங்கரின் ஐ திரைப்படம் முதல் 5 தினங்களில் 3.83 கோடிகளை வசூலித்தது. 5 தினங்களில் இந்த வசூலை பைரவா எட்ட வேண்டுமென்றால், திங்கள்கிழமை அப்படம் சென்னையில் 74 லட்சங்களை வசூலித்திருக்க வேண்டும். பைரவாவின் முதல்வார வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களின் வசூல் சராசரியைவிட இது அதிகம். அதனால் திங்கள்கிழமை பைரவாவால் 74 லட்சங்களை வசூலிக்க இயலாது. அந்தவகையில் ஐ படத்தின் ஓபனிங்கைவிட பைரவா குறைவாகவே வசூலித்துள்ளது நிரூபணமாகிறது.

ரஜினியின் கபாலி 4 தினங்களில் சென்னையில் 3.49 கோடிகளை வசூலித்தது. பைரவாவைவிட 30 லட்சங்கள் அதிகம்.

பைரவா இதுவரையான அஜித், விஜய் படங்களின் சென்னை ஓபனிங் வசூலை முறியடித்ததும் கபாலி, ஐ படங்களின் வசூலைவிட குறைவாக வசூலித்ததும் இதிலிருந்து தெரிய வருகிறது.