1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2015 (11:35 IST)

மேகி நூடுல்ஸ் - மனுஷ்யபுத்திரன் முதல் குஷ்பு வரை

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், அவ்விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி பீகார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் மதுரை நீதிமன்றமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
அரசு அனுமதித்த ஒரு பொருளின் விளம்பரத்தில் நடிக்க யாருக்கும் உரிமை உண்டு. அந்தப் பொருள் நுகர்வோருக்கு ஏற்றதாக இல்லையெனில் அதனை கண்டு பிடிக்க வேண்டியதும், நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் கீழ் இதற்கென இயங்கும் துறைகளின் கடமையே தவிர, அந்த பொருள்களை கண்காணிக்க வேண்டியது அந்த பொருள்களின் விளம்பரங்களில் நடிப்பவர்கள் அல்ல.
 
அப்படியே அவர்களை குற்றவாளியாக்கினால், அதே குற்றத்தைதானே அந்த விளம்பரங்களை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளும் செய்தன. அதே தவறைத்தானே அந்தப் பொருளை விற்பனை செய்த கடைக்காரரும் செய்துள்ளார். அவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடரப்படுமா?
 
விளம்பரங்களில் நடித்தவர்கள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல என்பதே நமது கருத்து. அதனை எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், நடிகர்கள் விஷால், ஆர்யா, குஷ்பு ஆகியோரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மனுஷ்யபுத்திரன்
 
மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த நடிகர் நடிகைகள் மேல் நடவடிக்கை எடுப்பது கேலிகூத்தானது. எல்லா விளம்பரங்களுமே புனைவுத்தனமை கொண்டவை. விளம்பரங்களில் நடிக்கிற ஒருவர் ஒரு பொருள அல்லது ஒரு சேவையின் எல்லா அம்சங்களையும் தெரிந்துகொண்டு நடிப்பது எப்படி சாத்தியம்? அப்படிப் பார்த்தால் இந்தியாவில் வெளியிடப்படும் அத்தனை விளம்பரங்களிலும் நடித்தவர்கள் மேல் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க முடியும்.

பொருள்கள் அல்லது சேவைகளின்மீது தரக்கட்டுபாடு சார்ந்து கண்காணிக்க வேண்டியது அரசு அமைப்புகள் சார்ந்த ஒரு பணி. ஆனால் அவை ஊழலில் ஊறிப்போய் மக்கள் விரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றன. இதைக் கேள்விகேட்க வேண்டுமேயன்றி விளம்பரங்களில் நடித்தவர்களையல்ல. அப்படிப் பார்த்தால் மேகி நூடுல்ஸ்ஸை விற்பனை செய்த அத்தனை கடைக்காரகளின்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் தொடர்பான பயங்கரமான செய்திகள் வருவது புதிதல்ல. ஆனால் அவற்றின் மீது எந்த தொடர் விசாரணைகளோ கண்காணிப்புகளோ இருந்ததில்லை. அவை சில நாட்களில் மூடி மறைக்கப்பட்டு, மறக்கபட்டுவிடுகின்றன.

ஒரு குறிபிட்ட பிராண்ட் உணவுவகை இந்தியாவில் தயாரிக்கப்படும் தரத்திற்கும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தயாரிக்கப்படும் தரத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. நுகர்வோர் இயக்கம் வலிமையாக இல்லாத, பொறுப்பற்ற ஊழல் அரசமைப்புகள் கோலோச்சுகின்ற ஒரு நாட்டில் மக்களை குப்பையைக் கூட நேரடியாக தின்ன வைக்க முடியும். விஷத்தைக் கூட நேரடியாக குடிக்க வைக்க முடியும்.
மேகி நூடுல்ஸின் விஷத்தன்மை தொடர்பான சர்ச்சை இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் தொடர்பான கண்காணிப்பாக மாறவேண்டும். நமது பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்சிக்கு இது இட்டுச் செல்லவேண்டும்.
 
ஆனால் நெஸ்லே நிறுவனத்தின் கைகள் மிக நீளமானவை. அசுர பலம் படைத்தவை. அடுத்த சிலநாட்களில் இந்தப் பிரச்சினை ஊடகங்களில் இருந்து எப்படி காணாமல் போகிறது என்று பாருங்கள்.
 
எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.
 
குஷ்பு
 
நெஸ்லே போன்ற ஒரு நிறுவனத்தின் உணவுப்பொருளை உணவு அமைப்பு அங்கீகரித்த பின்பே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? கடையில் ஒரு பொருள் விற்கப்படுவதற்கு முன்பு அதைச் சோதனை செய்யமாட்டார்களா? அல்லது அதை நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? முதலில் பொருள் வாங்கப்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டபிறகு சோதனை செய்வோமா?
 
விஷால்
 
நான் விளம்பர படமொன்றில் நடிக்கிறேன். அதற்கு எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கம்பெனி மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும். விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பொறுப்பு ஏற்க முடியாது.

ஆர்யா
 
இறக்குமதியாகும் உணவு பண்டங்கள் மற்றும் உள்நாட்டு உணவு பொருட்கள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த அமைப்பு சான்று அளித்த பிறகுதான் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. உணவு வகைகள் நுகர்வோர் சாப்பிட உகந்தது என அரசு சான்று அளித்த பிறகே அவற்றில் நாங்கள் நடிக்கிறோம்.

விளம்பரங்களில் நடிப்பதற்காக எங்களுக்கு தரப்படும் சம்பளத்துக்கு வருமான வரியும் கட்டி விடுகிறோம். எனவே உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்சினையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தரமான உணவு என சான்று அளித்த அரசுதான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். கே.எப்.சி., பவுன்டன் டேவ் நிறுவனங்களுக்கு நான் விளம்பர தூதுவராக இருக்கிறேன். அவற்றை அடிக்கடி சாப்பிடவும் செய்கிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.
 
இவ்வாறு பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஜங்க் ஃபுட் உடல்நலத்துக்கு தீங்கு என்பது உலகம் முழுவதும் ஆராய்ந்து நிலைநிறுத்தப்பட்ட உண்மை. அதனை அரசு அனுமதிப்பதே தவறு. அவற்றை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. 
 
அப்படி தடை செய்யாமல் அனுமதிக்கும் பொருள்களின் விளம்பரங்களில் சமூக பொறுப்புள்ள ஒருவர் நடிக்காமலிருக்க வேண்டும். நடித்தால், அவரது சமூக பொறுப்பை கேள்விக்குட்படுத்தலாமே தவிர சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது முறையாகாது. ஏனெனில் அரசு சட்டபூர்வமாக அனுமதித்த பொருளின் விளம்பரத்தில்தான் அவர்கள் நடித்துள்ளனர்.
 
அந்தவகையிலேயே மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை கூடாது என்கிறோம்.
 
அதனை சாக்காக வைத்து, கேஎப்சி போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவங்களை அரசு அனுமதித்திருக்கும் காரணத்துக்காகவே, அதன் உணவுகள் சிறந்தவை என்று ஆர்யா கூறுவது பொறுப்பின்மையின் அடையாளம்.