வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. க‌ட்டுரை
Written By John
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (13:55 IST)

A Soft Porn Star’s Life - ஷகிலாவின் ஆத்மகதா

நடிகை ஷகிலா தனது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதிய புத்தகம் ஆத்மகதா என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் A Soft Porn Star’s Life   என்ற பெயரில் ஆத்மகதாவை மொழிப் பெயர்த்துள்ளனர். இந்தப் புத்தகம் ஷகிலா என்ற கவர்ச்சி நடிகை மீதான சினிமா மினுமினுப்பை அகற்றி ரத்தமும் சதையுமான ஒரு நடுத்தரவர்க்க பெண்ணை கண்முன் கொண்டு வருகிறது. 
பிறரால் இழிவாக பார்க்கப்படும் வாழ்வை யாருமே விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கைச் சூழல் அப்படியான கசடுகளை நோக்கி அவர்களை தள்ளுகிறது. ஷகிலாவின் வாழ்க்கையை அவர் விரும்பாத திசைகளில் செலுத்தியவர் அவரது தாய். தனது தாயைப் பற்றி நல்லதாக நினைவுகூர எதுவுமேயில்லை என குறிப்பிடுகிறார். பதினாறு வயது பருவத்தில் குடும்பக் கடன்களை அடைக்க பணக்காரர் ஒருவரிடம் ஷகிலா அவரின் தாயால் அனுப்பி வைக்கப்பட்டார். பயத்திலும், வேதனையிலும் அந்த முதல் அனுபவத்தை எதிர்கொண்ட ஷகிலா பிறகு அடிக்கடி இதேபோல் அவரது தாயால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தனது கன்னித்தன்மை எப்போது பறிபோனது என்பதை ஷகிலாவால் இப்போது நினைவுகூர முடியவில்லை.
 

ஷகிலாவுக்கு முதல் பட வாய்ப்பை வாங்கித் தந்தவர் ஒரு மேக்கப்மேன். அவர் சிபாரிசு செய்த படத்தில் சில்க் ஸ்மிதா நாயகி. முதல்நாள் படப்பிடிப்பில் சின்ன ஸ்கிரிட்டை தந்து ஷகிலாவை அணியச் செய்தார்கள்.

பிடிக்கவில்லை என்றாலும், நீண்டநாள் கனவான சினிமாவில் நடிக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு என்பதால் அந்த அரைகுறை உடையை போட்டுக் கொண்டார். மேலும், அவரின் விருப்ப நடிகையான சில்க்கின் தங்கையாக நடிக்கப் போகிறோம் என்ற பரவசம். 
முதல் ஷாட். அறையிலிருந்து வெளியே வரும் சில்க்கிடம் காபி கோப்பையை தந்து, இதையாவது குடித்துவிட்டு போங்கள் என்று சொல்ல வேண்டும். சில்க் அந்த காபி கோபையை தட்டிவிட்டு ஷகிலாவை அறைய வேண்டும். சில்க் அந்தக் காட்சியில் ஷகிலாவை நிஜமாக...பலமாக அறைந்தார்.

ஷகிலாவுக்கு பொறி கலங்கிப் போனது. அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறினார். பெரிய ஸ்டார் என்ற மிதப்பில் சில்க் ஸ்மிதா தன்னை வேண்டுமென்றே அடித்தார் என்றே ஷகிலா நம்பினார். காட்சி தத்ரூபமாப வரவேண்டும் என்றுதான் அப்படி அடித்தேன் என சில்க் சொன்னதை அவரால் ஏற்க முடியவில்லை.
 

ஆனால், அந்த நிகழ்வுக்குப் பிறகு சில்க் ஸ்மிதாவின் கருணையான உள்ளத்தை புரிந்து கொண்டதாக ஷகிலா எழுதுகிறார். அடுத்த நாளே அறிமுக நடிகையான ஷகிலாவை அப்போதைய ஸ்டார் நடிகையான சில்க் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மதிய விருந்தளித்தார். பிறகு அடிக்கடி அவர்கள் சந்தித்துக் கொண்டனர். 
ஷகிலாவின் வாழ்க்கை சீரழிவுக்கு அவரது அம்மா காரணம் என்றால் அவரது பொருளாதார சரிவுக்கு காரணம் சொந்த தங்கை நூர்ஜகான். ஷகிலா சம்பாதித்த பணத்துக்கு அவர்தான் பொறுப்பாளர். நடித்ததும், சம்பாதித்ததும் போதும், இனி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம் என்று ஷகிலா சொன்ன போது அவரது அம்மாவும் தங்கையும் அதிர்ந்து போயினர்.

ஷகிலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என இருவருமே வற்புறுத்த ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான் நூர்ஜகான் தனது சம்பாத்தியம் முழுவதையும் அபகரித்துக் கொண்டதை ஷகிலா அறிந்தார்.
 
ஆத்மகதா ஷகிலா என்ற நடிகையின் வாழ்க்கை சரிதம் மட்டும் கிடையாது. பிறப்பால் வளர்ப்பால் தவறான பாதைக்கு திருப்பப்படும் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கைப்பாடுகள். இவர்களுக்கு முதலிலும் முற்றிலுமாகவும் மறுக்கப்படுவது சமூகத்துடனான சகஜமான வாழ்க்கை. 
 
 

அம்மா, தங்கை குறித்த பகுதிகளில் அவர்களை குற்றஞ்சாட்டுவது போலில்லாமல் நடந்த யதார்த்தத்தை முன் வைப்பதாகவே ஷகிலாவின் சித்தரிப்பு உள்ளது. தனக்கு ஏற்பட்ட இழப்புகளை சொல்வதன் வழியாக கருணையைக் கோரும் முயற்சி அவரது எழுத்தில் இல்லை. அந்தரங்க விஷயங்கள் அனைத்தையும் தனது எழுத்தில் முன் வைக்கிறார்.
ஷகிலாவை பேட்டி காண்பவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி, செக்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது தூண்டுதல் அடைவீர்களா என்பதாகவே இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகள் ஒன்றும் தனியாக எடுக்கப்படுவதில்லை. படப்பிடிப்பில் பலருக்கு நடுவே எப்படி என்ஜாய் பண்ண முடியும். செக்ஸ் என்பது பெண்களைப் பொறுத்தவரை வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. மனதளவில் நெருக்கம் இல்லாத ஒருவருடன் செக்ஸில் ஈடுபடும்போது எந்த சந்தோஷமும் கிடைப்பதில்லை என்று எழுதுகிறார் ஷகிலா.
 
ஆண்கள் மீது துவேஷத்தைவிட பரிதாபமே ஷகிலாவுக்கு மேலோங்கியுள்ளது. குடிக்கும் போது ஆண்களைவிட பெண்களின் துணையை நாடுவதாகவும், ஆண்கள் சிறிது குடித்ததுமே தான் செக்சுக்கு விரும்புவதாலேயே சேர்ந்து குடிப்பதாக நினைத்துவிடுகிறார்கள், பாவம் ஆண்கள் என்று எழுதுகிறார். 
ஆத்மகதா ஷகிலா மீதான பார்வையை மாற்றி அமைத்திருக்கிறது. ஷகிலா என்ற நடிகையை தாண்டி ஒரு பெண்ணை, அவளின் விருப்பத்துக்கு மாறான துயர்மிகு வாழ்வை இப்புத்தகம் முன்வைக்கிறது. பெண்களை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள ஆத்மகதா உதவும்.