செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (09:45 IST)

சினி பாப்கார்ன் - நாய்க்காக போராடிய விஷால் மீது காய்க்காக கோபித்த மலையாளிகள்

தனுஷை காயும் கலாம் பக்தர்கள்

அப்துல் கலாம் இறந்த அன்று தனுஷுக்கு பிறந்தநாள். நாடே அப்துல் கலாமுக்கு போஸ்டர் ஒட்டி, கண்ணீர் அஞ்சலி ப்ளெக்ஸ் வைத்துக் கொண்டிருந்த இரவில், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா, அண்ணன் செல்வராகவன் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின. இதனைத் தொடர்ந்து தனுஷ் மீது வசைமாரிகள்.

இயக்குனர் மு.கஞ்சியம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து, தனுஷை செருப்பால் அடிக்க விரும்புகிறவர்கள் இந்த செய்தியை பகிரவும் என குறிப்பிட்டுள்ளார். பின்னூட்டத்திலும் தனுஷ் மீதான குரோதம் கொப்பளிக்கிறது. சொந்த வீட்டில் ஒரு மரணம் நடந்தால் பிறந்தநாள் கொண்டாடுவார்களா என்று கேள்விகள்.

இதில் யார் பக்கம் நியாயம்? சொந்த வீட்டில் துக்கம் நடந்தால் யாரும் அன்று பிறந்தநாள் கொண்டாட மாட்டார்கள். போலவே, ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அஞ்சலி கவிதைகளும் எழுத மாட்டார்கள்.

மகேஷ்பாபுக்கு பிடித்த கமல்ஹாசன்

சில தினங்கள் முன்பு மகேஷ்பாபு நடித்துள்ள, ஸ்ரீமந்துடு படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. தெலுங்கு திரையுலகின் வெங்கடேஷ் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மகேஷ்பாபு, தனக்குப் பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்றார்.

மகேஷ்பாபு தெலுங்கின் முன்னணி நடிகர். அவர் கமல்ஹாசனின் பெயரை பிடித்த நடிகர் என்று சொல்லும் போது கேட்க பெருமையாக இருக்கிறது. கொஞ்சகாலம் முன்பு நடிகர் சித்தார்த், தனக்குப் பிடித்த நடிகர்கள் என்று தமிழர் அல்லாத பிற நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டார். தமிழ் நடிகர் எப்படி தமிழர் அல்லாத நடிகர்களின் பெயரை சொல்லலாம் சில மொழித்தூய்மைவாதிகள் கண்டனம் செய்தனர். அதே அவர்கள்தான் மகேஷ்பாபு கமலை பிடிக்கும் என்று சொன்னதை வரவேற்று பாராட்டியிருக்கிறார்கள்.

மகேஷ்பாபு கமலின் பெயரை சொல்லும் போது உங்களைப் போன்ற ஆந்திராவின் மொழித்தூய்மைவாதிகளின் மனம் புண்படாதா?

மொழியை கடந்து கலையை, கலைஞனை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் நடிகர்கள் நடித்ததால் பாகுபலியை புறக்கணிக்கப் போவதாகச் சொன்ன சுரேஷ் போன்ற நடிகர்களின் அதே ஆந்திராதான், கமலை பிடிக்கும் என்ற மகேஷ்பாபுவையும் தந்திருக்கிறது. மகேஷ்பாபுவை வாழ்த்துவோம்.

நாயும் காயும்

கேரளாவில் தெரு நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, டோண்ட் கில் டாக்ஸ் என்ற போஸ்டருடன் போராட்டத்தில் விஷால் குதித்தார். அதனை, டோண்ட் கில் மலையாளிஸ் என்று மாற்றி மலையாளிகள் இணையதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
 

 


நாய்க்காக கவலைப்படும் விஷால், தமிழ்நாட்டிலிருந்து வரும், பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட காய்கறிகளால் மலையாளிகள் சாவதை தடுக்க முதலில் முயற்சி செய்யட்டும் என சில மலையாளிகள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
 
தண்ணி முதற்கொண்டு எதுவும் தர மாட்டார்கள். அதேநேரம், தமிழ்நாட்டு காய்கறிகள் தரமற்றது என்று வசையும் பாடுகிறார்கள். மலையாளிகளைப் போல் சுயநலமிகள் யாருமில்லை என்றும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு விதத்தில்,
 
மலையாளிகள் தங்கள் ஆறுகளில் மணல் எடுப்பதில்லை,
 
வருமானம் குறையும் என்று தெரிந்தும் மக்களின் நலனுக்காக பார்களை மூடியிருக்கிறார்கள்.
 
தண்ணீர் அதிகமிருந்தும் கோக் ஆலைக்கு தண்ணீர் தர மறுத்திருக்கிறார்கள்.
 
அணு உலை, நியூட்ரான் திட்டம் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்கள் கேரளாவில் வராமல் ஒரே அணியில் நின்று எதிர்த்திருக்கிறார்கள்.
 
இப்போது பூச்சிக்கொல்லி பயமில்லாத காய்கறிகள் வேண்டும் என்கிறார்கள்
 
- என நேர்மறையாக எடுத்து, நாமும் அதேவழியில் பயணிக்கவும் செய்யலாம். எதை தேர்வு செய்வது என்பது அவரவர் விருப்பம்.