1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (12:09 IST)

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தாதது பெருங்குற்றமா? - அஜீத்தை முன் வைத்து

அப்துல் கலாமின் மறைவு இந்திய தேசத்தை உலுக்கி விட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு எந்தவொரு தலைவருக்கும் பொதுமக்கள் இப்படி விரும்பி அஞ்சலி செலுத்தியதில்லை. கடைகளை அடைத்ததில்லை. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று பால், வயது பாராமல் அனைவரும் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர்.
 
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நேரம், அவரது போதாமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அப்படி விவாதித்தவர்களை இந்தியாவின் எதிரிகள் போல் பாவித்து அப்துல் கலாமின் விசுவாசிகள் தூற்றினர். 
 
கலாம் இறந்த துக்கத்தில் நாடே இருந்த போது தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்று அவரை வசைமாரி பொழிந்தனர். செருப்பால் அடிக்க வேண்டும் என்று அவரது துறையில் இருக்கும் இயக்குனர் மு.களஞ்சியம் எழுதினார்.
 
ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதும் கூடாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம், உரிமை. அதேபோல் அப்துல் கலாம் இறந்ததால் பிறந்தநாள் கொண்டாடலாமா வேண்டாமா என்பது தனுஷின் தனிப்பட்ட விஷயம், முடிவு. அதனை கேள்வி கேட்கவோ, விமர்சனம் செய்யவோ யாருக்கும் உரிமையில்லை. 
 
அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என அஜீத்தின் மீது சிலர் பாய்ந்துள்ளனர். அஜீத் எந்த விஷயத்திற்கும் கருத்து தெரிவிக்காதவர். அப்படிப்பட்டவர் அப்துல் கலாமின் மறைவை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது அவருக்கு மட்டும் தெரிந்த ரகசியம். அதில் கேள்வி கேட்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
 
உங்கள் வீட்டில் ஒரு துக்கம் நடந்தால் நீங்கள் அவர்களின் குறைகளையா பேசிக் கொண்டிருப்பீர்கள் என, அப்துல் கலாமை விமர்சித்தவர்கள் மீது அவரது விசுவாசிகள் பாய்ந்திருந்தனர். நல்ல கேள்வி. நமது வீட்டில் ஒரு துக்கம் நடந்தால் அவரது குறைகளை பட்டியலிட மாட்டோம். போலவே, கணினியின் முன் உட்கார்ந்து அஞ்சலிக் குறிப்பும், கவிதையும் எழுத மாட்டோம். நம் வீட்டில் நடந்த துக்கம் நமக்கு அந்தரங்கமானது. அந்த துக்கம் உண்மையானது. அது நம்மை நேரடியாக பாதிக்கிறது. அதனால் நாம் அஞ்சலிக் குறிப்பும், கவிதையும் எழுதி அதனை பிரகடனப்படுத்துவதில்லை.

அப்துல் கலாமின் மரணம், அவர் எதற்காக இந்த தேசத்தில் முன்னிறுத்தப்பட்டாரோ, எதெற்கெல்லாம் புனிதராக்கப்பட்டாரோ அதற்கெல்லாம் நானும் ஆதரவாக இருக்கிறேன், அதனை நானும் மதிக்கிறேன், அப்துல் கலாமின் பாதையில்தான் நானும் பயணிக்கிறேன், அவரைப் போலவே நானும் கனவு காணுகிறேன் என உலகத்தின் முன் பிரகடனப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு. அதனை அனைவரும் அஞ்சலிக் குறிப்பு எழுதியும், பிளெக்ஸ் வைத்தும், கண்ணீர்விட்டும் உலகத்தின் முன் சாட்சி பகிர்ந்தனர்.

அஜீத் அப்படி செய்யாததில் அவர்களுக்கு வலிக்கிறது. அவர் மட்டும் என்ன பெரிய இதுவா என்று கோபிக்கிறார்கள். ஒருவேளை அவர் அப்துல் கலாமின் மறைவை சொந்த வீட்டில் நடந்த துக்கத்தைப் போல் கருதியிருக்கலாம். அந்த துக்கத்தை அஞ்சலிக் குறிப்பு எழுதி கொச்சைப்படுத்த வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். 
 
அப்துல் கலாமுக்கு அஞ்சலி குறிப்பு எழுதவில்லை என்று குறைபட்டுக் கொள்வது போலவே, அவரை விமர்சிப்பவர்களுக்கும் பல குறைகள் உள்ளன. குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் இந்தியாவின் தலைகுனிவான குஜராத் படுகொலைகள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லையே. ஈழப்படுகொலை குறித்து வாய் திறக்கவில்லையே.

கிரீன் ஹண்ட் என்ற பெயரில் ஆதிவாசிகள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்போது, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, தர்மாபுரி சாதிக் கலவரத்தின்போது அப்துல் கலாம் எதுவும் கூறிவில்லையே என அவர்கள் கேட்கிறார்கள். அந்த நிகழ்வின் போதெல்லாம் கண்மூடி இருந்தவர்கள்தான் இப்போது அப்துல் கலாமுக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதவில்லையா என்று கோபிக்கிறார்கள்.

தனுஷ் பிறந்தநாள் கொண்டாடிவிட்டாரே, அஜீத் அஞ்சலிக் குறிப்பு எழுதவில்லையே என வருத்தப்படுகிறவர்களுக்கு லக்ஷ்மி மணிவண்ணனின், அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறவன் கவிதை சமர்ப்பணம்.
 
பராக்..பராக் ...பராக் ...
 
உடனடி அஞ்சலிக்கூட்டம் நடத்துபவன்
நடந்து வந்து கொண்டிருக்கிறான் 
எச்சரிக்கையாயிருங்கள்
 
ஒவ்வொரு ஊரிலும் அவனுக்கு 
ஒவ்வொரு திருநாமம்
 
சில சமயங்களில் அவன் கவிஞன் 
சில சமயங்களில் இலக்கியவாதி 
தொண்டூழியன் 
அரசியல்வாதி
பக்திமான்
தியான போதகன்
வெம்போக்கிரி
ஞானி
இன்னபிற
 
அவன் கைகளில் அஞ்சலிப் பூமாலைகள் 
ஏந்தியிருப்பது 
வடிவமாய் புலப்படுவதில்லை.
எப்பொதும் வாடாத இளமலர் 
மாலைகளை 
உடன் வைத்திருக்கிறான்.
 
அவன் உங்களுக்கு விருதோ, பரிசோ 
தர முனைந்தால் மனம் நோகா வண்ணம் ஒளிந்து கொள்ளுங்கள்.
அஞ்சலிக்கூட்டம் நடத்துவது பற்றி அவன் 
இங்கிருந்துதான் திட்டமிடத் தொடங்குகிறான்...
 
யார் யாரை வரவழைப்பது? 
எப்படி மேடையமைப்பது?
எவ்வண்ணம் அஞ்சலிக் கூட்டம் அமைந்தால் 
நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள்?
அதுவொரு வழக்கமான சடங்குக் கூட்டமாக 
இல்லாமல் ...
புதுமை மங்காமலும் சீர்திருத்தமாகவும் 
அமைந்தால் எவ்வாறிருக்கும்?
 
புகைப்படங்களுடன் கூடிய ஒளித்தட்டிகளை 
நீங்கள் அனுமதிப்பீர்களா?
எல்லாவற்றையும் ...
 
உடனடி அஞ்சலிக்கூட்டம் நடத்தும்
கால அவகாசத்தை நீங்கள் அவனுக்குத் 
தர மறுப்பது 
அவனுக்கு நீங்கள் அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கு
ஒப்பானது.
 
திடீரென ஒருநாள் 
அவனிடமிருந்து உங்கள் 
தொலைபேசி எண்ணுக்கும் 
அழைப்பு வரும் 
நிர்வாகத்திற்கு மனு எழுதிப் போட்டு 
அவ்வெண்ணையே நீங்கள் 
மாற்றிக் கொள்ளவேண்டும் .
 
உடனடி அஞ்சலிக்கூட்டம் நடத்துபவன்
நடந்து வந்து கொண்டிருக்கிறான் 
தயை செய்து எச்சரிக்கையாயிருங்கள்.
 
- லக்ஷ்மி மணிவண்ணன்