1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 23 டிசம்பர் 2014 (13:11 IST)

4 நாளில் 100 கோடி - பிகே வசூலும் சர்ச்சையும்

அமீர் கான் நடித்துள்ள பிகே திரைப்படம் முதல் நான்கு தினங்களில் 100 கோடியை கடந்து வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் இந்திய அளவில் 7 -வது இடத்தைப் பிடித்த பிகே வார இறுதி வசூலில் 5 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. படம் மக்களால் ரசிக்கப்படுவதையும், ரசிகர்கள் ஆதரவு குறையாமல் இருப்பதையுமே இது காட்டுகிறது.
பிகே கடந்த 19 -ஆம் தேதி வெளியானது. அமீர் கானின் தூம் 3 படத்துடன் ஒப்பிடுகையில் விளம்பரங்களும், திரையரங்குகளின் எண்ணிக்கையும் பிகே -க்கு குறைவு. முதல் நாள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் படம் 26.63 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் சனிக்கிழமை 30.34 கோடியாக வசூல் அதிகரித்தது. மூன்றாவது நாளான ஞாயிறு 38.24 கோடிகள் வசூலித்து பிகே ஆச்சரியப்படுத்தியது.
 
முதல்நாள் வசூலில் 7 -வது இடத்தைப் பிடித்த பிகே, வார இறுதியில் 95.21 கோடிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. ஹேப்பி நியூ இயர் 108.86 கோடிகளுடன் முதலிடத்திலும், தூம் 3 107.61 கோடிகளுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை எக்ஸ்பிரஸ் 100.42 கோடிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஏக் த டைகர் 100.16 கோடிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
 
ஹேப்பி நியூ இயர் முதல்நாளில் 48 கோடிகள் வசூலித்தது. ஆனால் மூன்று தினங்களிலேயே வசூல் சரிந்து மொத்தமாக 202 கோடிகளையே அதனால் வசூலிக்க முடிந்தது. ஆனால் பிகே மூன்று தினங்களுக்குப் பிறகும் ஸ்டெடியாக உள்ளது. பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். அதனால் 200 கோடியை படம் அனாயாசமாக தாண்டும் என்பதில் சந்தேகமில்லை. 
 
வெளிநாடுகளிலும் வசூல் குவிகிறது. முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 22.18 கோடிகளை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மூன்று தினங்களில் 43 கோடிகளை தனதாக்கியுள்ளது. 
 
ஒருபுறம் ரசிகர்கள் படத்தை கொண்டாட இந்துத்துவா சக்திகள் படத்துக்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி உள்ளது. பிசாந்த் பட்டேல் என்பவர் இந்துக் கடவுள்களை குறிப்பாக சிவனை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள் என்று படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர்கள் விது வினோத் சோப்ரா, சித்தார்த் ராய் கபூர் மற்றும் நடிகர் அமீர் கான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் 153, 295ஏ பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
கடவுள் நம்பிக்கை மீது ஆழமான கேள்விகளை பிகே எழுப்புகிறது. அதனை கருத்துகளால் எதிர்கொள்ளாமல் வழக்கு தொடர்வது அவர்களின் பதட்டத்தையும் பலவீனத்தையுமே காட்டுகிறது. பிகே -க்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல். பிகே படைப்பாளிகளுடன் நாம் நிற்க வேண்டிய நேரமிது.