வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 9 ஜனவரி 2016 (11:13 IST)

பொங்கல் படங்கள் ஒரு பார்வை

இந்த பொங்கலுக்கு நான்கு படங்கள் வெளியாகின்றன. வெளியாகும் என்று எதிர்பார்த்த மிருதன் பிப்ரவரிக்கு தள்ளிப் போக, கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்திருக்கிறது கெத்து. 
 
தாரை தப்பட்டை:
 
பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்திருக்கும் படம். நாட்டுப்புற கலையை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது ஆயிரமாவது படம் இது.
 

 
நாட்டுப்புற கலையை மையப்படுத்தியது என்றாலும் பாலா தனது வழக்கமான வன்முறைக் காட்சிகளை படத்தில் குறைவில்லாமல் திணித்திருக்கிறார். அதனால் படத்துக்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் தந்துள்ளது.
 
கதகளி:
 
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேதரின் தெரேசா நடித்துள்ள ஆக்ஷன் படம். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள். இரண்டும் முதல்பகுதியில் வர, படத்தின் இரண்டாவது பகுதி பாடல்கள் இல்லாமல் நகர்கிறது.
 

 
ஒரு தொலைபேசி அழைப்பினால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் மையம் என்றார் விஷால். பாண்டிராஜின் படங்கள் வரிசையாக வெற்றி பெறுவதால் கதகளி மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. யு சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

ரஜினி முருகன்:
 
திருப்பதி பிரதர்ஸின் ரஜினி முருகன் குறித்து ஏற்கனவே வேண்டிய அளவு பேசியாகிவிட்டது. பென் மூவிஸ் என்ற மும்பை நிறுவனம் தோள் கொடுத்திருப்பதால் இந்தமுறை படம் எப்படியும் திரைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
பொன்ராமின் நகைச்சுவை கலந்த இயக்கம், சிவ கார்த்திகேயன் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு, சூரியின் காமெடி ஆகியவை, படம் தாமதமாக வந்தாலும் வெற்றியை எளிதாக்கும்.
 
கெத்து
 
தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரித்து, நடித்திருக்கும் படம். மான் கராத்தே திருக்குமரன் இயக்கியிருக்கிறார். மான் கரோத்தேயே சுமாரான படம்தான்.
 

அவர் கெத்துவை எப்படி இயக்கியிருக்கிறார் என்பது உத்தரவாதமில்லாத எதிர்பார்ப்பு. உதயநிதியுடன் ஏமி ஜாக்சன் நடிக்க, ஹாரிஸ் இசையமைத்துள்ளார். முதல்முறையாக உதயநிதி ஆக்ஷன் முயன்று பார்த்திருக்கிறார்.
 
இந்த நான்குப் படங்களே இன்றுவரை பொங்கலுக்கு இறுதி செய்யப்பட்டுள்ளன.