1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 31 டிசம்பர் 2016 (10:13 IST)

2016 தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள்

2016 -இல் வெளிவந்த வெற்றிமாறனின் விசாரணை சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா  சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. வெனிஸிலில் இப்படம் சர்வதேச விருது ஒன்றையும் வாங்கியது. இந்தப் படம் தவிர சர்வதேச  அளவில் கவனம் ஈர்த்த எந்தப் படமும் 2016 -இல் தமிழில் வெளிவரவில்லை. என்றாலும், சில இயக்குனர்கள் நம்பிக்கை  கொள்ளும் சில முயற்சிகளை செய்தனர்.

 
சசி
 
சசி இயக்கும் படங்கள் சராசரிக்கும் மேலானவை. ஆனால் இதுவரை அவருக்கு கமர்ஷியல் வெற்றி கைகூடாமல் இருந்தது.  பிச்சைக்காரன் படம் லாபத்தையும், நல்ல வணிக சினிமா என்ற பாராட்டையும் பெற்றுத் தந்தது. பிச்சைக்காரன் படம்  காரணமாக சசியின் புதிய படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமுள்ளது.
 
சுதா கொங்கரா
 
முதல் படத்திலேயே வித்தியாசமான களத்துடன் வந்தார் சுதா கொங்கரா. பெண்கள் பாக்சிங்கை மையப்படுத்திய இறுதிச்சுற்று  தமிழ் சினிமாவின் புத்துணர்ச்சி படமாக அமைந்தது. சுதா இறுதிச்சுற்று படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். அவரது அடுத்த  தமிழ்ப் படம் என்ன என்பதில் ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
 
நலன் குமாரசாமி
 
காதலும் கடந்து போகும் படம் கொரிய திரைப்படத்தின் தழுவலாக இருந்தாலும் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்கள்  இல்லாமல் படமாக்கியிருந்தார் நலன் குமாரசாமி. கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை காட்சிப்படுத்தியிருந்தவகையில்  நலன் குமாரசாமியின் இரண்டாவது படம் அவர் மீதான நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
 
சுசீந்திரன்
 
ஜீவா படத்தில் சாதிப் பிரச்சனையை லேசாக தொட்டவர், மாவீரன் கிட்டு படத்தில் அதனை காத்திரமாகவே பேசியிருந்தார்.  தலித் அடையாளத்துடன் படம் எடுக்கிறேன் என்று அம்பேத்கரின் படத்தையம், நாலு வசனத்தையும் வைக்கும் இயக்குனர்கள்  மத்தியில் மாவீரன் கிட்டு முக்கியமான முயற்சி. சுசீந்திரன் இதே வழித்தடத்தில் பயணிப்பாரா இல்லை ஆக்ஷன் அதிரடி என்று  களம் மாற்றி கால் பதிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
 
ராஜு முருகன்
 
ஜோக்கர் இந்த வருடத்தின் நல்ல அரசியல் நையாண்டி சினிமா. சாகஸ நாயகன் போதை கடத்தல் எதிரியை போட்டுத்தள்ள  கோட் போட்டது போல் இல்லாமல் ஒரு சராசரி மனிதன் சமூக சீர்த்திருத்தத்துக்காக கோட் அணிந்த படம். சராசரி மனிதனை  நாயகனாக்கியது ஜோக்கர் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. விலையுயர்ந்த உடைகள், பென்ஸ் கார் சகிதம் எதிரிகளை  அழிப்பவனை புரட்சிக்காரனாக சித்தரித்த தமிழ் சினிமாவில் அந்த மனநிலைக்கு ராஜு முருகன் தந்த செருப்படி ஜோக்கர். ராஜு  முருகனிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
 
மணிகண்டன்
 
மணிகண்டனின் குற்றமே தண்டனை உருவாக்கரீதியில் சிறப்பாக இருந்தாலும் படத்தின் கருப்பொருளும், அதில் வெளிப்பட்ட  அறமும் அரைகுறை உணர்வையே தந்தன. ஆண்டவன் கட்டளை நல்ல வணிக சினிமா. கமர்ஷியல் சினிமாவுக்குள்ளும்  யதார்த்தத்தை வைத்த வகையில் மணிகண்டனின் சினிமாக்கள் எதிர்பார்ப்புக்குரியனவாக மாறியுள்ளன.
 
வெற்றிமாறன்
 
காவல்துறை என்ற அதிகாரத்தின் துஷ்பிரயோகங்களை விசாரணை காத்திரமாக முன்வைத்தது. வெற்றிமாறனின் முந்தையப்  படம் ஆடுகளம் அளவுக்கு விசாரணை கலாபூர்வமான அணுகுமுறை இல்லை என்பது பெருங்குறை. அதையும் தாண்டி 2016  -இன் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வெற்றிமாறன் திகழ்கிறார்.
 
இவர்கள் தவிர உறியடி படத்தை இயக்கிய விஜயகுமார், மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன், ஒருநாள் கூத்து  படத்தின் இயக்குனர் நெல்சன் ஆகியோரும் இந்த வருடம் நல்ல சினிமாவுக்கான முயற்சியை ஓரளவேனும்  முன்னெடுத்தவர்கள்.
 
நல்ல சினிமாவுக்கான முயற்சி எடுத்தவர்கள் என்று 2016 இல் அடைமயாளப்படுத்தப்பட்டவர்கள் அடுத்த வருடத்தில் நல்ல  சினிமா எடுத்தவர்களாக மாற வேண்டும்... வாழ்த்துகள்.