வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 2 ஜனவரி 2015 (11:37 IST)

2014 -இல் தமிழ் சினிமா - தழுவலும், காப்பியும்

சென்ற வருடமும் கணிசமான படங்கள் பிற மொழியிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டன. சில முறைப்படி அனுமதி வாங்கி, பல திருட்டுத்தனமாக.
 
மலையாளத்திலிருந்து சாப்பா குருசு, 22 பீமேல் கோட்டயம், சால்ட் அண்ட் பெப்பர், காக்டெய்ல் ஆகிய படங்கள் சென்ற வருடம் தமிழில் முறைப்படி அனுமதி வாங்கி ரீமேக் செய்யப்பட்டன.
இதில் 22 பீமேல் கோட்டயம், சால்ட் அண்ட் பெப்பர் ஆகியவை ஆஷிக் அபு இயக்கியவை. 22 பீமேல் கோட்டயம், மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் நடிகை ஸ்ரீப்ரியாவால் ரீமேக் செய்யப்பட்டது. கதாபாத்திர புரிதல் இல்லாத அவரது திரைக்கதையும், இயக்கமும் அப்படத்தை சாகடித்தது என்றே சொல்ல வேண்டும். அதே போல் சால்ட் அண்ட் பெப்பரை உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்து முடிந்தளவு பிரகாஷ்ராஜ் வீணடித்தார். தம்பி ராமையாவின் அசட்டு ஓவர் ஆக்டிங்கும், குமரவேலின் ஸ்டீரியோடைப் நடிப்பும் படத்தை அதலபாதாளத்தில் தள்ளின. 
 
சாப்பா குருசு படம், மலையாளத்தின் நியூ ஜெனரேசன் படங்களுக்கு உற்சாகப் புள்ளியாக அமைந்த படம். அது இங்கே புலிவால் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து வகையிலும் ஒரிஜினலின் புகழை கெடுப்பதாக இப்படம் அமைந்தது. மலையாளத்தின் காக்டெய் படம் அதிதி என்ற பெயரில் பரதனால் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நான்குப் படங்களில் ஓரளவு சரியான ரீமேக் என்று அதிதியை சொல்லலாம். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
 
இந்த நான்கில் சாப்பா குருசும், காக்டெய்லும் பிற மொழிப்படங்களின் அப்பட்ட காப்பி. சாப்பா குருசு ஹாங்காங் படமான ஹேண்ட்போனின் தழுவல். காக்டெய்ல் கனடா தயாரிப்பான, பட்டர்பிளை ஆன் எ வீல் படத்தின் மலையாள வடிவம்.

இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெற்றிபெற்ற கஹானி நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் நயன்தாரா நடிப்பில் சேகமர் கம்மூலாவால் ரீமேக் செய்யப்பட்டது. இது தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் வெளியானது. தெலுங்கு டப்பிங் போன்ற தோற்றம் இருந்ததால் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை.
கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ தெலுங்குப் படத்தின் மேக். சந்தானம் ஹீரோவான, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தெலுங்கு மரியாத ராமண்ணாவின் ரீமேக். இந்தப் படம் த ஹாஸ்பிடாலிட்டி ஆங்கிலப் படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. நானி, வாணி கபூர் நடித்த ஆஹா கல்யாணம் இந்திப் படத்தின் ரீமேக்.
 
ரீமேக்கை பொறுத்தவரை சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒருசதவீத வெற்றிகூட கிடைக்கவில்லை. அனைத்தும் தோல்வி. தேர்வு செய்த படங்கள் சிறப்பாக இருந்தும் கதாபாத்திர தேர்வு, ஒரிஜினலின் ஆன்மாவை ரீமேக்கில் கொண்டுவர இயலாமல் போனவை தோல்விக்கு காரணமாக அமைந்தன. முக்கியமாக, யதார்த்தமாக நடிக்கக் கூடிய குணச்சித்திர நடிகர்களின் போதாமையை இந்த ரீமேக் படங்கள் வெளிச்சமிட்டு காட்டின.
 
பேய் படங்களுக்கு உற்சாகமளித்த யாமிருக்க பயமே கொரிய படம், த கொயட் பேமிலியின் காப்பி. முறையான தழுவலோ இல்லை முறையற்ற தழுவலோ... சென்ற வருடம் வெற்றி பெற்ற ஒரே தழுவல் படம் இது மட்டுமே. அக்ராஸ் தி ஹால் என்ற ஒரே படத்தை நேர் எதிர், கபடம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் காப்பியடித்த கூத்தும் சென்ற வருடம் நடந்தது.
 
2015 -லும் அதிக படங்கள் பிற மொழிகளிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் இரு படங்கள் வெற்றி பெற்றாலே 2014 -யை முந்திவிடலாம் என்பது வேடிக்கையான உண்மை.