வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (13:14 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு கைமீறிய செலவுகளையும், வீண்பழி, பகை, தூக்கமின்மை என அடுக்கடுக்க சிக்கல்களை தந்து உங்கள் நிம்மதியை சீர் குலைத்துக் கொண்டிருந்த குருபகவான் இப்பொழுது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துப் போகும். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

அசைவ, கார உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். துரித உணவுகள், லாகிரி, வஸ்துக்களை அறவே தவிர்த்துவிடுங்கள். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். செரிமானக் கோளாறு, தோலில் அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன், அலர்சர், ஒற்றை தலை வலி, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், கால்சியம் பற்றாக்குறை, காய்ச்சல், மஞ்சள் காமாலை வரக்கூடும். பச்சை காய்கறி, கீரை, கனி வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம், சண்டை சச்சரவுகளால் பிரிவுகள் வரக்கூடும். ஈகோப் பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். யாருமே உண்மையான பாசத்துடனோ, அன்புடனோ பழகுவதில் என்று வருந்துவீர்கள். தன்னம்பிக்கை குறையும். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பதாக உங்களுக்குள்ளேயே ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். அதேப் போல பிரச்னைகளை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். எதைத்தொட்டாலும் பிரச்னையென்றெல்லாம் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு அவேசமும் அவ்வப்போது வெளிப்படும். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். குறுக்கு வழியில் சென்று ஆதாயம் தேட வேண்டாம். உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். பார்த்தும் பார்க்காமல் செல்வார்கள். அதையெல்லாம் பார்த்து படபடப்பாகாதீர்கள். 
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அடிக்கடி கர்ப்பச்சிதைவானவர்களுக்கு இனி புத்திர பாக்யம் கிடைக்கும். மகளின் கோபம் குறையும். உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார். மகனுக்கிருந்து வந்த கூடா நட்பு விலகும். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க நன்கொடை வழங்குவீர்கள். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் செயற்கரிய காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்தாலும் அன்புக் குறையாது. மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவமளிப்பீர்கள். அவர்வழி சொந்தங்களும் மதிக்கத் தொடங்குவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.   
 
உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து போனதே! இனி ஆரோக்யம் மேம்படும். அவருடனான மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கி தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஒருவித வெறுப்பு, சலிப்பு, வீண் டென்ஷன், பண இழப்பு, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், வீண்பழி, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தின் மீது பற்றின்மை வந்துப் போகும். தனிமையில் அமர்வதை தவிர்க்கப் பாருங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. 
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் சேவகாதிபதியும்-ஜுவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடிவேலைச்சுமை, சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் வந்துப் போகும். குடும்பத்தில் குழப்பமும், ஒருவருக் கொருவர் சந்தேகமும் வந்துபோகும். அடிக்கடி மருத்துவச் செலவுகளும் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், மரியாதைக் குறைவான சம்பவங்கள், காய்ச்சல், சளித் தொந்தரவு, இளைய சகோதர வகையில் சச்சரவுகள் வரக்கூடும். 
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் உங்கள் ராசியில் அமர்வதால் அடிவயிற்றில் வலி, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, வேனல் கட்டி, வீண் பகை, மனஇறுக்கம் வந்துச் செல்லும். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்துச் செல்லும். சில விஷயங்களில் திட்டமிட்டவை ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி, விற்பனை வரிகளையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் செலுத்தப்பாருங்கள். 
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்யம் சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும். புது வேலைக் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பிறர் மீது நம்பிக்கையின்மை, சின்ன சின்ன மனசஞ்சலங்கள், தோல்விமனப்பான்மை வந்துச் செல்லும். உறவினர்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணம், பத்திரங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வது நல்லது. 
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால் பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். 
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவனை மாற்றி புதுசு வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கௌரவப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 
 
வியாபாரிகளே! நெருக்கடிகள் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். புது முதலீடுகளே, முயற்சிகளோ வேண்டாம். அன்றாட சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். 
 
உத்யோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியது வரும். இதனால் வீட்டிற்கு தாமதமாகத் தான் வர வேண்டியிருக்கும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! அன்பாக பேசுபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களிடம் கொஞ்சம் தள்ளியிருங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். 
 
மாணவ-மாணவிகளே! பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே! வகுப்பறையில் அரட்டை அடிக்க வேண்டாம். கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்பு எதுவானாலும் சரியாக பயன்படுத்தப்பாருங்கள். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். 
 
பரிகாரம்
நாகப்பட்டினம் அருகில் திருப்புன்கூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசவுந்திரநாயகி உடனுறை சிவலோகநாதரை அமாவாசை திதி நாளில் சென்று வணங்குங்கள்.