விருச்சிகம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:14 IST)
தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தொட்ட காரியங்களை துலங்க வைத்ததுடன், ஓரளவு செல்வம், செல்வாக்கையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். எனவே மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வளைந்துக் கொடுத்தால் தான் வானம் போல் உயரால் என்பதை உணருவீர்கள்.
எனவே சில இடங்களில் சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். சிலர் புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். சன்னியாசிகள், சாதுக்கள் உதவுவார்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். சொந்த-பந்தங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகளும் விலகும்.
ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். புது முதலீடு செய்து சிலர் தொழில் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகமாகும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருங்கள். உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் ஜீவனாதிபதி சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
ராகுபகவான் உங்கள் சப்தம-விரையாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பணப்பற்றாக்குறை நீங்கும். தவணை முறையில் பணம் செலுத்தி வாகனம் வாங்குவீர்கள். மனைவியின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் முன்கோபம், சிறுசிறு விபத்துகள், பேச்சால் பிரச்னைகள் வந்துப் போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள்.
மாணவ-மாணவிகளே! சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனையின் போது அமிலங்கள் கை, காலில் விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும். காதல் கனியும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் வரும். திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! உங்கள் ஆசைப்படி கல்யாணம் முடியும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.

கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.
விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை வெகுவாக குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருக்கும். பம்பு செட் பழுதாகி சரியாகும்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கணிசமான லாபம் வரும். என்றாலும் தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும். வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது விசாரித்து சேர்ப்பது நல்லது. அண்டை மாநில வேலையாட்களிடம் கவனமாக இருங்கள். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். மருந்து, கெமிக்கல், ஸ்டேஷனரி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
உத்யோக ஸ்தானமான 10-ம் இடத்தில் ராகு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். உங்கள் வேலையை மற்றொருவரிடம் ஒப்படைக்க வேண்டாம். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள்.

சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சிலர் உங்களுடைய சாதனைகளை குறுக்குவழியில் சென்று பறிக்க முயல்வார்கள். வெளிநாட்டில் வேலைத் தேடுபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புது வேலை மாறுவதில் அவசர முடிவுகள் வேண்டாம்.
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றத்தையும், உறவுகள் மத்தியில் கசப்புணர்வுகளையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் மனஇறுக்கம், வீண் குழப்பங்களெல்லாம் விலகும். இனி எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். அடிக்கடி கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
மகளின் கல்யாணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். என்றாலும் 4-ல் கேது அமர்வதால் உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். மீண்டும் பழைய பிரச்னைகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஒரு அச்சம் வரக்கூடும்.
அரசிடமிருந்து முறையான கட்டிட வரைப்பட அனுமதிப் பெறாமல் வீடு கட்ட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. லைசன்ஸ், இன்சூரன்சு, பாஸ்போட்டையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். வெளியூரிலோ, நகர எல்லைப் பகுதியிலோ சொத்து வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தெய்வீக நம்பிக்கை அதிகமாகும். சித்தர் பீடம் சென்று தியானம் செய்வீர்கள். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வீர்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் வேலைகளை உடனே முடிக்கவேண்டுமென்று நினைப்பீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறைக் கூறுவார்கள். உங்களை தாழ்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள்.
உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வீடு வாங்கும் முன் வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து க்ளீயரன்ஸ் சர்ட்டிபிகேட் வாங்கியப் பின் வீடு வாங்குவது நல்லது. இல்லையென்றால் வில்லங்கமான வீடுடோ அல்லது இடமோ வாங்கிவிட்டு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும்.
வியாபாரத்தில் காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் சுமாராக போகும். புது முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்து போங்கள். வேலையாட்கள் முரண்பாடாகப் பேசுவார்கள். வாடிக்கையாளர்களை மனங்கோணாமல் நடத்துங்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.
இந்த இராகு-கேது பெயர்ச்சி ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையை தந்தாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் சந்தோஷத்தையும் தரும்.

பரிகாரம்:

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீஆண்டாள் அம்மையார் பூசித்த ஸ்ரீவடபெருங்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவடபத்திர சயனரை ஏதேனும் ஒரு ஏகாதசி திதி நாளில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு உணவு, உடை தானம் செய்யுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :