வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (12:48 IST)

சனிப் பெயர்ச்சி பொதுப்பலன் (16.12.2014 முதல் 17.12.2017)

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசு தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான் இப்போது பூமிக்காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வதால் வியாபாரம் தழைக்கும். மக்களிடையே ஓரளவு பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆனால் பூமிக்காரகன் செவ்வாய் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் பூமி விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும்.

இயற்கை சீற்றங்களாலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களாலும் வெள்ளப் பெருக்காலும் மண் வளம் குறையும். அதேப் போல மணல் தட்டுப்பாடு உலகெங்கும் அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்களுக்கு மணலைப் பயன்படுத்தாமல் வேறு மாற்றுப் பொருள் பயன்பாட்டிற்கு வரும். மணலின் பயன்பாடு குறையத் தொடங்கும். வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்ட, திட்டங்களெல்லாம் நடைமுறைக்கு வரும். வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். ரசாயனப் பொருட்கள், உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், தழை உரங்கள் பயன்படுத்தி உருவாகும் தானியங்களுக்கு மவுசு அதிகரிக்கும்.

சகோதரக்காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும். சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். 20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள். உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும். ஒருபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும், மற்றொரு பக்கம் அதிக விளைச்சல் உருவாகும். பருப்பு வகைகள்  துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.

அறிவியில் அறிஞர்கள், மருத்துவர்கள் பிரபலமடைவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கேன்சருக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும். அதேப்போல முடக்குவாதம் மற்றும் வெண் தழும்புகள், தோல் நோய்கள் இவற்றை தடுக்கவும், இந்த நோய்களை குணப்படுத்தவும் புதிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படும். மனித குலத்தை சீரழிக்கக்கூடிய வைரஸ்கள் நிறைந்த ஏவுகணைகள், வெடி மருந்துகள், ரசாயன குண்டுகள் தயாரிப்பில் சில நாடுகள் இறங்கும். உலகெங்கும் எல்லைப் பகுதியில் அறிவிக்கப்படாத யுத்தம் நடந்துக் கொண்டிருக்கும். உலகெங்கும் எல்லைப் பிரச்னைகளால் அமைதிக் குறையும்.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விலை உயரும். காவல் துறைக்கும், ராணுவத்துறையினருக்கும் ஓய்வின்றி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். காவல்துறை, ராணுவத்துறை அதிகாரிகள் கடத்தப்படவும், பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்திய ராணுவத்திற்காக கூடுதல் தொகைகள் ஒதுக்கப்படும். புதிய தளவாடங்கள், ஏவுகணைகளை இந்தியா வாங்கும். சீனாவுடன் சுமூகமான நட்புறவு உண்டாகும். மக்களிடையே சேமிப்புகள் குறையும். சிற்றின்பத்திற்கு பலர் அடிமையாவார்கள். பகை வீட்டில் சனி அமர்வதால் மக்களிடையே மனஅமைதிக் குறையும். மனயிறுக்கம், அழுத்தத்தினால் தற்கொலைகள் அதிகமாகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

சாஃப்ட்வேர், சினிமா துறைகளில் வேலைத் தட்டுப்பாடு அதிகமாகும். பேங்கிங், இன்சூரன்ஸ் துறைகள் வளர்ச்சியடையும். அரசு பங்குகளின் ஒருபகுதி தனியார் மயமாகும். லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதலின் அச்சம் அதிகமாகும். இந்தியாவில் தீவிரவாதிகள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும். பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். அதேப் போல விலை நிலங்கள், நீர் நிலைகளை பாதுகாக்கவும் சட்டங்கள் வரும். நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள், நதிகளை சுத்தப்படுத்துவதற்கான திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வரும்.

நாடெங்கும் சாலைகள் சீரமைக்கப்படும். புதிய வழிப்பாதைகளும் அமைக்கப்படும். துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். புது துறைமுகங்கள், விமான நிலையங்களெல்லாம் அமைக்கப்படும். விமானப் போக்குவரத்து இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படும். வயதானவர்களின் எண்ணிக்கை கூடும். வயதானவர்களுக்கு ஆரோக்யமும் அதிகரிக்கும். பலத்துறைகளிலும் இளைஞர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நடுத்தர வயதை தாண்டியவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். சனிபகவான் ரிஷபத்தை பார்ப்பதால் ஆடு, மாடுகளை விநோத நோய் தாக்கும். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து. ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள், ஆடுகள், கோழிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

மரபணு மாற்றப்பட்ட காய், கனிகள் சந்தையில் திணிக்கப்படும். பாரம்பரியமான உணவுகளை மக்கள் விரும்பி உண்பார்கள். உணவே மருந்து என்பதையும் மக்கள் உணரக்கூடிய அமைப்பு உண்டாகும். சிவாலயங்கள் பாதிப்படையும். ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல் நிலை பாதிக்கும். சின்ன சின்ன அறுவை சிகிக்சைகளும் வந்துப் போகும். சிம்ம ராசியையும் சனிபகவான் பார்ப்பதால் உலகெங்கும் ஆளுபவர்களுக்கு அருகிலுள்ளவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இரண்டாம் மட்ட அதிகார வர்க்கங்களின் கை ஓங்கும். இதய நோயாளிகள் அதிகரிப்பார்கள். இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு இவற்றால் பாதிப்பவர்களும் அதிகமாவார்கள். மக்கள் நிம்மதியைத் தேடி அலைவார்கள். சனிபகவான் தன் வீடான மகரத்தை பார்ப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்.

பழைய தொழிற்சாலைகள் சீரழியும். புதிய பணக்காரர்கள் உருவாகுவார்கள். உலகெங்கும் அரசியலில் மாற்றம் உண்டாகும். பல வருடங்களாக ஆட்சிப் புரிந்த கட்சிகள் வலுவிழந்து புதிய கட்சிகள் வலுவடைந்து ஆட்சி அமைக்கும். சனிபகவான் வி ருச்சிக ராசியில் அமர்வதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாக பரிக்கப்படும். சனிபகவான் 7&ம் பார்வையால் பெண்ணாதிக்க வீடான ரிஷபத்தை பார்ப்பதால் பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப்படுவார்கள். பெண்களின் உரிமைகள் மறுதளிக்கப்படும். பெண்களும் மாறுபட்ட வகையில் யோசிப்பார்கள். வியாபாரம் மற்றும் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. முகத்தை பாதிக்கும் நோய்கள் உலகெங்கும் பரவும்.

முக சீரமைப்பு, பல் சீரமைப்பிற்கு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகும். மலைகள் அதிகமாக பாதிப்படையும். மலைச்சரிவு, மண் சரிவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். குறுந்தொழில்கள் பாதிப்படையும். வியாபாரத்தில் அயல்நாட்டில் இருப்பவர்களின் முதலீடுகள் அதிகமாகும். அதனால் பாரம்பரியமாக இங்குத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். ராணுவ ரகசியங்கள், அணு உலை ரகசியங்கள், விண்வெளி ரகசியங்கள், செயற்கை கோள் ரகசியங்களை கடத்தும் உளவாளிகள் கண்டறியப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இந்திய நாட்டின் எல்லைப்பகுதிகள் சீரமைக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்படும். பல பெரிய மனிதர்களின் அந்தரங்க தொடர்புகள், அந்தரங்க நட்புகள், அந்தரங்க வாழ்க்கைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். நீதிமன்றங்களின் தீர்ப்பால் சில பிரபலங்களின் வாழ்க்கை சூன்யமாகும். மாணவர்கள், இளைஞர்களிடையே பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். அரவாணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரவாணிகள் பெரிய பதவியில் அமர்வார்கள். அரவாணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விபச்சாரத்தை தடுக்க புதிய சட்டங்கள் வரும். போதை மருந்து தடுப்புச் சட்டம் கடுமையாகும். நதிகள், கடலில் கலக்கும் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்படும். மத்திய அரசில் குழப்பங்கள் உருவாகும். மத்திய அரசில் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும். விபத்துகளாலும் முக்கிய பதவியில் இருப்பவர்கள் உயிரிழக்க நேரிடும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் அதிகரிக்கும். மூன்றணிகள் உருவாகும். தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாகும். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். விளையாட்டுத்துறை நவீனமாகும். ரத்தத்தை பாதிக்கும் நோய் அதிகரிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்து குறைபாடால் பலருக்கும் புதிய நோய்கள் வரும். பொதுவாக மக்களிடையே தூக்கம் குறையும். 
 
ஆகமொத்தம் இந்த சனி மாற்றம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த பணப்பற்றாக்குறை மற்றும் முடக்கம் இவற்றிலிருந்து விடுபட வைப்பதுடன் உலகெங்கும் தாராளமயமாக்களால் வியாபார அபிவிருத்தி பணப்புழக்கம் அதிகரிப்பு, சாதிக்க வேண்டுமென்ற எண்ணம், போட்டிமனப்பான்மை மற்றும் ஆரோக்யத்தின் மீது அக்கறை போன்ற தன்மைகள் உண்டாகும்.
 
பரிகாரம்
பூமிக்காரகன் மற்றும் சகோதரக்காரகனாகிய செவ்வாய் வீட்டில் சனிபகவான் அமர்வதால் விளைநிலங்களை விற்காதீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடர வேண்டாம். இரத்தத்திற்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால் விபத்தில் சிக்கியவர்களுக்கு இரத்த தானம் செய்வது நல்லது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். செவ்வாய் அதிகாரப் பதவிகளுக்குரிய கிரகமாகும் எனவே அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது நல்லது. பொதுவாக விருச்சிக சனி மக்களிடையே பரபரப்பையும், அதே நேரத்தில் அமைதியின்மையையும், அதிருப்தியையும் உருவாக்கும். 
 
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
விசாகம் 4&ல் 16.12.2014 முதல் 24.1.2015 வரை 
அனுஷம் 1&ல் 25.01.2015 முதல் 29.04.2015 வரை
 
அனுஷம் 1&ல் 15.3.2015 முதல் 29.4.2015 வரை வக்ரம்
விசாகம் 4&ல் 30.4.2015 முதல் 13.6.2015 வரை வக்ரம்
விசாகம் 3&ல் 14.6.2015 முதல் 05.09.2015 வரை வக்ரம்
 
விசாகம் 3&ல் 01.08.2015ல் முதல் 05.09.2015 வரை வக்ர நிவர்த்தி
விசாகம் 4&ல் 06.09.2015 முதல் 17.10.2015 வரை 
 
அனுஷம் 1&ல் 18.10.2015 முதல் 16.11.2015 வரை 
அனுஷம் 2&ல் 17.11.2015 முதல் 17.12.2015 வரை 
அனுஷம் 3&ல் 18.12.2015 முதல் 19.01.2016 வரை 
அனுஷம் 4&ல் 20.01.2016 முதல் 28.03.2016 வரை 
 
அனுஷம் 4&ல் 29.03.2016 முதல் 19.05.2016 வரை வக்ரம்
அனுஷம் 3&ல் 20.05.2016 முதல் 17.07.2016 வரை வக்ரம்
அனுஷம் 2&ல் 18.7.2016 முதல் 20.08.2016 வரை வக்ரம்
 
அனுஷம் 2&ல் 12.08.2016 முதல் 20.08.2016 வரை வக்ர நிவர்த்தி
அனுஷம் 3&ல் 21.8.2016 முதல் 15.10.2016 வரை 
அனுஷம் 4&ல் 16.10.2016 முதல் 15.11.2016 வரை
 
கேட்டை 1&ல் 16.11.2016 முதல் 15.12.2016 வரை 
கேட்டை 2&ல் 16.12.2016 முதல் 16.01.2017 வரை 
 
கேட்டை 3&ல் 17.01.2017 முதல் 12.3.2017 வரை 
கேட்டை 4&ல் 13.3.2017 முதல் 23.4.2017 வரை 
 
கேட்டை 4&ல் 8.04.2017 முதல் 23.4.2017 வரை வக்ரம்
கேட்டை 3&ல் 24.4.2017 முதல் 23.06.2017 வரை வக்ரம்
கேட்டை 2&ல் 24.06.2017 முதல் 13.10.2017 வரை வக்ரம்
 
கேட்டை 2&ல் 05.08.2017 முதல் வக்ர நிவர்த்தி 
கேட்டை 3&ல் 14.10.2017 முதல் 18.11.2017 வரை