வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அட்சய திருதியை நாளின் சிறப்புகளும் விரதம் இருக்கும் முறைகளும்...!

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். அப்படியாக அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும்பெருகி வளம் சேர்க்கும்.  குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.
சிறப்புகள்:
 
தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான். பகவான் பரசுராமர் அவதரித்த  நாள், புனித நதி கங்கை பூமியை தொட்ட நாள், குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள், ஆதி சங்கரர் செல்வத்தை கொட்டிக் கொடுக்கும்  ஸ்லோகமாகிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றிய நாள், குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள், திரேதா யுகம் ஆரம்பமான நாள்,  வியாசர் மஹா பாரதம் எழுத ஆரம்பித்த நாள்.
செய்ய வேண்டியவை:
 
இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் புதிய தொழில் தொடங்கலாம். பூமி பூஜை செய்வதற்கு உகந்த நாள். ஏழைகளுக்கு தானம்  செய்யலாம். பிதுர்க்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் அவர்களது ஆசீர்வாதம் பெற்று சிறப்பாக வாழலாம்.
 
விரதம் இருக்கும் முறை:
 
அட்சய திருதியை நாளன்று விடியும் முன் எழுந்து சுத்தமாக நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி கோலம் போட்டு அதன் மீது ஒரு பலகையை வைக்கவும். பின் பலகையின் மீது கோலம் போட்டு ஒரு சொம்பில் சந்தன கும்குமம் இட்டு அதில் நீரை நிரப்பி அதன் மீது  பெரிய தேங்காயை வைத்து மாவிலைகளை அதனைச் சுற்றி அதுக்கி கலசம் போல் தயார் செய்ய வேண்டும்.
 
பின் அந்த கலசத்தின் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் அருகில் புதிதாக வாங்கிய பொன், பொருள்களை வைத்து, பூ  போட்டு பூஜை செய்ய வேண்டும். பிறகு அதற்கு கற்பூர தீபாராதனைக் காட்டி வணங்கினால் வளமான செல்வம் பெருகும்.
 
அந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். உணவு, வஸ்திரம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். பசுவுக்கு கீரை வகைகளை வழங்கலாம். இந்நாளில் அன்னதானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது.
 
இந்த அட்சய திருதியை தினத்தன்று வெண்மை நிறப் பொருட்கள் விசேஷமானது ஆகும். வெண்ணிற மல்லி பூ, வெண்பட்டு ஆடை, வெண்ணிற பால் பாயசம் இவைகளைப் பயன்படுத்துதல் சிறப்பாகும். அட்சய திருதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்று  நினைக்க வேண்டாம். வசதி உள்ளவர்கள் வாங்கலாம். வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி லட்சுமி  படத்திற்கு முன் வைத்து வழிபடலாம்.