வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P. Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (12:52 IST)

ஜய வருட பொது பலன்

விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது.
 
இந்த வருடம் இப்படித்தான்; 
 
ஜய வருஷத்திய பலன் வெண்பா
“ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்“.
 
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி தானியங்கள் விளையும். மக்கள் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நாடாளுபவர்கள் மத்தியில் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். 
 
இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால் மக்கள் தங்களின் பலம், பலவீனங்களை உணர்வார்கள். பணத்தைவிட ஆரோக்யமும், நிம்மதியும்தான் முக்கியம் என்பதை அறியத் தொடங்குவார்கள். ஆடை, ஆபரண உற்பத்தி அதிகரிக்கும். புது டிசைனில் உயர் ரக ஆடைகள் வடிவமைத்து ஏற்றுமதி அதிகரிக்கும்.

நாட்டை ஆள்பவர்கள் சாதி, மதபேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டுவார்கள். குதிரை, யானை இனம் விருத்தியடையும். காடு, மலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை பொழியும். மந்திரியாக சந்திரன் வருவதால் விவசாயம் தழைக்கும். நிலத்தடி நீர் உயரும். பெண்கள் ஆதிக்கம் ஓங்கும். பெண்களுக்கு வேலை கிடைக்கும். அவர்களின் வருவாயும் உயரும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்துக் காட்டுவார்கள். 
 
சேனாதிபதியாக சூரியன் வருவதால் ராணுவத்திற்கு கூடுதல்நிதி ஒதுக்கப்படும். வெளிநாட்டிலிருந்து அதிநவீன போர் தளவாடங்களை இந்தியா வாங்கும். பலவிதங்களிலும் ஊழல்கள் கண்டறியப்பட்டு களையப்படும். முக்கிய ஏவுகணைகள், பீரங்கிகள், போருக்கு பயன்படும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங் களை இந்தியாவே தயார் செய்யும். சீன, பாகிஸ் தான் எல்லையில் நிலவிய பதட்டங்கள் நீங்கும். தகுந்த பதிலடி தரவும் இந்தியா தயாராகும். ராணுவ வீரர்களுக்கு குளிர், மழை, வெயில் உள்ளிட்ட இயற்கை தொந்தரவுகளை தாங்கக்கூடிய அதிநவீன ஆடைகள் அளிக்கப்படும். புதிய நீர்மூழ்கி கப்பல்களை இந்தியா தயாரிக்கும். 
 
ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு. ஏறக்குறைய அரிதிப் பெரும்பான்மையுடன் அரசு அமையும். எதிர்க்கட்சிகள் ஆளுபவர்களை ஆதாரமில்லாமல் குறைகூறி அதிகத் தொந்தரவு தருவார்கள். 8.10.2014 மற்றும் 4.4.2015 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் பெண் குழந்தை பிறப்புக் குறையும். மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு அதிகரிக்கும். மனவளம் குன்றிய குழந்தைகள் அதிகம் பிறப்பார்கள். இதய நோயால் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள். புற்று நோய் கிருமிகளை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறுவார்கள். 
 
14.7.2014 முதல் 1.9.2014 வரை விபத்துகள், தீவிரவாதிகளின் தாக்குதல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், பிரபலங்களின் மறைவுகள் அதிகரிக்கும். 17.9.2014 முதல் 16.11.2014 வரை சூரியன் வலுவிழப்பதால் அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அமலுக்கு வரும். 13.6.2014 அன்று குரு கடகத்தில் உச்சமாவதால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். அவர்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று திரும்பும். உலகெங்கும் பணத்தட்டுப்பாடு குறையும். நிதி நெருக்கடி விலகும். வங்கிகளில் வாராக் கடன்கள் வசூலாகும். 4.5.2014 முதல் செவ்வாய் வக்ரமாகி வலுவடைவதாலும் 1.9.2014 முதல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதாலும் உலகெங்கும் பூமியின் விலை உயரும். 
 
ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மின் உற்பத்தி அதிகமாகி மின்வெட்டுக் குறையும். மின்சார சாதனங்களின் விலை குறையும். சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். இந்தாண்டு முழுக்க சுக்கிரன் வக்கிரமின்றி பயணிப்பதால் சினிமாத் துறை வளர்ச்சி அடையும். அதிக பட்ஜெட்டில் படங்கள் தயாராகும். புதிய தொலைக் காட்சி சேவைகள் அதிகரிக்கும். வாகன உற்பத்தி அதிகமாகி வாகனங்களின் விலை குறையும். நீண்ட காலமாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கூடி வரும். 
 
நவீன வர்த்தக மையங்கள், புதிய மாதிரி நகரங்கள் உதயமாகும். மக்களின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தனிநபர் வருமானம் உயரும். தென்கிழக்கு, வடமேற்கு திசைகள் வலுவடையும். டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித்துறை வலுவடையும். அதிகார மையங்களை தாண்டி நீதிபதிகள் ஆணை பிறப்பிப்பார்கள். தீவிரவாதிகளின் கூடாரங்கள் படிப்படியாக அழிக்கப்படும். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள், குற்றவாளிகள் பிடிபடுவார்கள். கருப்புப் பணம் கண்டறியப்படும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். 
 
20.9.2014 முதல் 11.10.2014 வரை மற்றும் 11.1.2015 முதல் 4.2.2015 வரை உள்ளக் காலக்கட்டங்களில் கல்வித் துறை அதிகாரிகளின் தவறுகள் கண்டறியப்படும். வினாத் தாள்கள் மறைமுகமாக வெளியாகும். மாணவர்களிடையே புரட்சிகள் வந்து நீங்கும். சாஃப்ட்வேர் துறையில் நிலவும் தேக்க நிலை மாறும். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆனால், இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சூரியன் வருவதால் விளை நிலங்கள் வலிமையடையும்.
 
இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிக்கும். ஆர்கானிக் காய், கனிகளின் உற்பத்தி அதிகமாகும். நீர் தேக்கங்களை பலப்படுத்த, பாதுகாக்க புது சட்டங்கள் அமலுக்கு வரும். நதிகளை இணைப்பதில் முதல் முயற்சி பலிதமாகும். நாடெங்கும் நவீன சாலைகள் அமைக்கப்படும். வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு குறையும். கருப்பு மற்றும் சாம்பல் நிற மேகங்கள் அதிகம் உற்பத்தியாகும். 
 
கரஜு என்ற பெயருடன் மகர சங்கராந்தி தேவதை ஆண் யானை வாகனத்தில் அமர்ந்து வருவதால் மக்கள் மனதில் நிம்மதி உண்டாகும். புயல் சின்னம் அதிகம் உருவாகும். அசைவ உணவுகளின் பயன்பாடு குறையும். வனவிலங்குகள் அபிவிருத்தியடையும். 
 
இந்த ஜய வருடம் சாதாரண மனிதன் முதல் சாமான்யர் வரைக்கும் அனைத்து தரப்பட்டவர்களுக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் தருவதாக அமையும். 
 

கிரகப் பெயர்ச்சிகள்
 
குருப்பெயர்ச்சி
 
நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக் கிழமை (13.6.2014) மாலை மணி 6.04க்கு குருபகவான் மிதுனத்திலிருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
 
ராகு-கேது பெயர்ச்சி
 
நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 7-ம் தேதி சனிக் கிழமை (21.6.2014) காலை மணி 11.19க்கு ராகுபகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும், கேதுபகவான் மேஷத்திலிருந்து மீனம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
 
சனிப் பெயர்ச்சி
 
நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1-ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) மதியம் மணி 02.18க்கு சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
 

கிரகணங்கள்
 
1. சந்திர கிரகணம்
 
ஜய வருடம் புரட்டாசி மாதம் 22-ம் தேதி (8.10.2014) புதன் கிழமை ரேவதி நட்சத்திரத்தில் மதியம் மணி 2.44க்கு சந்திரனை வடமேற்கு திசையில் கேது பிடிக்க ஆரம்பித்து மாலை மணி 4.24க்கு அதிகமாகி மாலை மணி 6.04க்கு வடகிழக்கு திக்கில் விடுகிறது. 
 
கிரகணப் பலன்
 
தட்சணாயனம் வருஷருதுவில் பௌர்ணமி திதியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் இதய நோய் அதிகமாகும். புற்று நோய்க் கிருமிகள் அதிகம் உருவாகும். சிட்டுக் குருவி, மைனா, காடை, மயில் போன்ற பறவைகள் பாதிப்படையும். விவசாயம் நலிவடையும். அசுவணி, ஆயில்யம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பரிகாரமாக திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்லது.
 
2. சந்திர கிரகணம்
 
ஜய வருடம் பங்குனி மாதம் 21-ம் தேதி (4.04.2015) சனிக் கிழமை ஹஸ்தம் நட்சத்திரத்தில் மதியம் மணி 3.45க்கு சந்திரனை வடமேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து மாலை மணி 5.30க்கு அதிகமாகி மாலை மணி 7.15க்கு கிழக்கு திக்கில் விடுகிறது. 
 
கிரகணப் பலன்
 
உத்ராயனம் சிசிரருதுவில் பௌர்ணமி திதியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் இமயமலை உள்ளிட்ட மலைப் பகுதிகள் பாதிப்படையும். அதிக மழையால் பயிர்கள் சேதமாகும். புதிய கிருமிகள் பரவி காய்ச்சல், சளித் தொந்தரவு அதிகமாகும். ரோகிணி, உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பயணங்களின் போது கவனம் தேவை. மனஇறுக்கம் வந்து நீங்கும். பரிகாரமாக ஸ்ரீதுர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. 
 
இந்த ஜய ஆண்டில் சூரிய கிரகணம் இல்லை.
 

ஜய வருடம் வாஸ்து பூஜை செய்யும் நாட்களும் நேரமும்:
 
கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரமானது வாஸ்து புருஷன் தாம்பூலம் தரிக்கும் நேரமாகும்.
எனவே இந்த நேரத்திற்குள் வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய மிகுந்த யோகம் உண்டாகும். 
 
சித்திரை மாதம் 10ம் (23.4.2014) தேதி புதன்கிழமை காலை மணி 8.54 முதல் 9.30க்குள்.
 
வைகாசி மாதம் 21ம் (4.6.2014) தேதி  புதன்கிழமை காலை மணி 9.58 முதல் 10.34க்குள்.
 
ஆடி மாதம் 11ம் (27.7.2014) தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.44 முதல் 8.20க்குள்.
 
ஆவணி மாதம் 6ம் (22.8.2014) தேதி வெள்ளிக்கிழமை மாலை மணி 3.18 முதல் 3.54க்குள்.
 
ஐப்பசி மாதம் 11ம் தேதி (28.10.2014) செவ்வாய்கிழமை காலை மணி 7.44 முதல் 8.20க்குள்.
 
கார்த்திகை மாதம் 8ம் தேதி (24.11.2014) திங்கட்கிழமை காலை மணி 11.16 முதல் 11.52க்குள்.
 
தை மாதம் 12ம் (26.01.2015) தேதி திங்கட்கிழமை காலை மணி 10.41 முதல் 11.17க்குள்.
 
மாசி மாதம் 22ம் (6.3.2015) தேதி வெள்ளிக்கிழமை காலை மணி 10.32 முதல் 11.08க்குள்.