1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் கோகுலாஷ்டமி!!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும். கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று  வழங்கப்படுகிறது. 
கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள்.  முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன்  “கோகுலாஷ்டமி” என்று அழைக்கப்படுகிறது.
 
மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான  சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாப பட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு  சொல்லுகிறது. அன்றைய தினம் மற்ற காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும்  என்று சொல்லியிருக்கிறார்கள்.
 
கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு  வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (ஆரத்தி) காட்ட வேண்டும். வீட்டிற்கு வரும் கண்ணன் பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை  விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை படிக்க வீட்டில் உள்ளவர்கள் கேட்கவேண்டும்.
 
கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு  அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. “கிருஷ்ண ஜெயந்தியன்று” பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம்  செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.