மகரம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:17 IST)
பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் அதிகம் நேசிப்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு தந்தையாருடன் மோதல்களையும், அடுக்கடுக்கான செலவுகளையும் தந்த ராகு பகவான் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
அவர் உங்களைப் புரிந்துக் கொள்வார். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். என்றாலும் ராகு 8-ல் அமர்வதால் திட்டமிடாத பயணங்களும், அலைச்சல்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்.
கணவன்-மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். இடமாற்றம் இருக்கும்.
சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. யாரும் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். அரசாங்க அனுமதிப் பெறாத ஃபைனாஸ் கம்பெனி, சிட்பன்சில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ராகுபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜுவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது வேலைக் கிடைக்கும். கௌரவப் பதவி தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வீட்டில் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசிப் பெறுவிர்கள். என்றாலும் புது முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்தமருங்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். சக மாணவர்களுடன் கசப்புணர்வுகள் வந்துச் செல்லும். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். காதலில் விழாமல் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தேமல், சையனஸ் தொந்தரவுகள் வரக்கூடும். வருங்காலத்தைப் பற்றி யோசிக்கத் தவறாதீர்கள்.

அரசியல்வாதிகளே! வறட்டுக் கவுரவத்திற்காக கை காசை தண்ணியா இறைக்காதீர்கள். வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

விவசாயிகளே! நிலத்தகராறுப் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சுமூகமாகப் பேசி தீர்ப்பது நல்லது. வழக்கு, வியாஜ்யம் என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். இரவு நேரத்தில் வயலுக்கு செல்லும் போது கைவிளக்குடன் செல்லுங்கள். பாம்பு குறுக்கிட வாய்ப்பிருக்கிறது.
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வேலையாட்களுக்கு முன் பணம் தர வேண்டாம்.
உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொருசாரர் எதிராகவும் செயல்படுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடி பெற வேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம் வரும்.

கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு எதையும் தாங்கும் மனப்பக்குவத்தையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்குள் நுழைகிறார். எனவே இனி வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தப்பாருங்கள். எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது.

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மருந்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலமாக சச்சரவுகளில் சிக்குவீர்கள்.
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சேவகாதிபதியும்-விரயாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆன்மிகப் பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பால்ய நண்பர்களை பகைத்தக் கொள்ளாதீர்கள்.

உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் தடைப்பட்ட காரியங்களெல்லாம் முடிவடையும். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். அடகிலிருந்த பத்திரங்கள், நகைகளை மீட்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயரதிகாரிகள் உங்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த ராகு-கேது மாற்றம் புதிய படிப்பினைகளை தருவதாகவும், சமூகத்திலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:

ஆடுதுறை-சூரியனார் கோவிலுக்கு அருகிலுள்ள திருலோக்கி எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஷிராதிசயன பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :